சென்னை: விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 8 குழந்தைகள் மரணம் அடைந்ததற்கு தமிழக அரசை கண்டித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் எட்டு பச்சிளம் குழந்தைகள் இரு நாட்களில் இறந்திருப்பது அதிர்ச்சியையும், வேதனையும் அளிக்கிறது. குழந்தைகளை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் மரணம் நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது. ஏற்கனவே தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் குழந்தைகள் இறந்த போது தமிழக அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான எண்ணிக்கையில் மருத்துவர்கள், நர்சுகள் இல்லை என்றும் மருத்துவமனைகளில் அவசர மருந்துகள் கூட இல்லை என்றும், நான் சுட்டிக் காட்டி இருந்தேன். ஆனால் அதன் பிறகும் இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் தற்போது இந்த சோகமும் நிகழ்ந்திருக்கிறது. தமிழத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும், குழந்தைகள் நல மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் பணியிடங்கள் முழுவதும் நிரப்பபடாமல் உள்ளதாலும், அரசு மருதுவமனைகளிலுள்ள உபகரணங்கள் தரம் குறைந்ததாகவும், சரிவர இயங்காததும் தான் காரணம் என்று பொது மக்கள் கூறுகின்றனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் வாயிலாக வரும் நிதியில் அரசு மருத்துவ மனைகளுக்கு வாங்கப்படுகின்ற உபகரணங்கள் தரமானதாக இல்லை எனவும், இதில் முறைகேடுகள் நடப்பதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. மக்களை பாதுகாக்க வேண்டிய மக்கள் நல்வாழ்வு துறையிலேயே ஊழல் நடக்கின்றது என்றால் அது மக்களின் உயிரோடு விளையாடுவதாகாதா? ஒரு துறையின் அமைச்சர் இருக்கும்போது நெறிமுறைகளின் படி அத்துறையின் செயலாளர் இந்த சம்பவத்திற்காக பதிலை அளித்தால், அத்துறையின் அமைச்சரைப்பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள். இவருக்கு துறையை பற்றி அதிகம் தெரிந்ததை விட அதிலிருந்து வரும் லஞ்ச பணத்தைப்பற்றி அதிகம் தெரிந்தவர் என்பதால் தான் விழுப்புரத்தில் வாய்த்திறக்கவில்லை போலும் என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள். இதுதான் தமிழக அமைச்சர்களின் இன்றைய நிலையாகும். எனவே மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு அரசு ஒதுக்குகின்ற நிதியில் முறைகேடின்றி தரமான உபகரணங்களையும், தேவையான அளவு மருந்துகளையும் வாங்குவதுடன், மருத்துவர்கள், நர்சுகள் என அனைத்து பணியிடங்களையும் நிரப்பி, முழு சுகாதாரத்துடன் அரசு மருத்துவமனைகளை பராமரிக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். – என்று கோரியுள்ளார்.
குழந்தைகள் மரணம்: சந்தேகம் கிளப்பும் விஜயகாந்த்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari