கூட்டணியா? ஆளூர் ஷாநவாஸா? முடிவெடுக்கும் இடியாப்பச் சிக்கலில்… திருமாவளவன்!

உரத்த சிந்தனை சற்றுமுன் தமிழகம்

thirumavalavan stalin - 2026

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் திமுக., தலைமைக்கும் இப்போது மனவேறுபாடுகள் அதிகரித்துள்ளதாகக் கூறப் படுகிறது.

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2 தொகுதிகளை கேட்டுப் பெற்று, இரண்டிலும் வென்றுவிட்டது. இனி திமுக., தலைமையோ, கட்சியோ அதற்கு தேவைப்படாத ஒன்றுதான்!

திருமணம் முடிந்து தேனிலவு நடந்தபின்னர், குடும்பத்துக்குள் எழும் அடிதடி ரகளை போல் இப்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் திமுக.,வுக்கும் இடையே பனிப்போர் மூண்டுள்ளது.

இதற்கு பல காரணங்கள் உள்ளன. இருப்பினும் ஒரு முதன்மைக் காரணமாக பேசப் படுவது, வி.சி.க.,வின் துணை பொதுச் செயலர் ஆளூர் ஷாநவாஸ், அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், திமுகவை வெளிப்படையாக விமர்சிக்கும் வகையில் கருத்துகளை வலுவாக வெளிப்படுத்தியிருந்தார்..

aloor shanawaz - 2026மத்திய அரசு கொண்டு வந்த என்.ஐ.ஏ.வுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையிலான மசோதாவின் போது, திமுக., ஆதரவாக செயல்பட்டது. இந்த விவகாரத்தில் திமுகவின் செயல்பாடு ஏற்கத்தக்கதல்ல என்றும், அதுபற்றி விமர்சிக்காமல் கள்ள மவுனம் காக்க முடியாது என்றும் கூறினார் ஆளூர் ஷாநவாஸ்.

மேலும், என்.ஐ.ஏ. குறித்த மசோதாவுக்கு திமுக ஆதரவளித்ததால் அந்தக் கட்சி காலத்திடம் பதில் சொல்ல வேண்டும் என்றும் கூறினார் ஆளூர் ஷாநவாஸ்.

இது திமுக.,வில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக.,வே, இஸ்லாமிய ஆதரவு நிலைப்பாட்டில்தான் தேர்தலை சந்தித்தது. பயங்கரவாதிகளை எதிர்கொள்ளும் என்.ஐ.ஏ., விவகாரமும் இஸ்லாமிய வெகுஜன ஆதரவு நிலைப்பாடும் வேறுவேறு என்று திமுக., கருதியதால்தான் என்.ஐ.ஏ., விவகாரத்தில் ஆதரவு அளித்தது என்று கட்சியினர் கூறி வரும் நிலையில், திமுக., மீது குற்றம் சொல்லி, இஸ்லாமிய வெறுப்புக் கருத்துணர்வில் திமுக.,வை சிக்க வைக்கும் வகையில் ஆளூர் ஷாநவாஸ் பேசுகிறார் என்ற கோபம் திமுக., தலைமையில் எதிரொலித்தது.

thirumavalavan shanavaz - 2026எனவே, யாருடைய கருத்தை ஷா நவாஸ் தெரிவித்திருக்கிறார் என வி.சி.க. தலைமையிடம் திமுக கேள்வி எழுப்பியதாகக் கூறப் படுகிறது. ஷாநவாஸின் பேச்சு திமுகவுக்கு எதிராக இஸ்லாமியர்களைத் தூண்டி விடும் வகையில் அமைந்ததால், திருமாவளவன் மீது ஸ்டாலினுக்கு அதிருப்தி அதிகரித்துள்ளது. இந்தக் காலத்தில் யாருக்கு என்ன உதவி செய்தாலும் நன்றி என்பது சிறிதும் இல்லை என்ற வகையில் திமுக., வட்டாரத்தில் எதிரொலிக்கிறது.

amitsha thirumavalavan - 2026ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை விவகாரத்தில் இத்தனை நாட்களாக திமுக.,வையே சார்ந்து இயங்கிக் கொண்டிருந்த அற்புதம் அம்மாள் இப்போது விசிக.,வின் திருமாவளவனை அழைத்துக் கொண்டு, மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து மனு கொடுக்கும் அளவுக்கு மாறியிருக்கிறது சூழல் என்ற கருத்தும் அறிவாலய வட்டாரத்தை யோசிக்க செய்துள்ளது.

ஏற்கெனவே விருதுநகரில் கட்சியினர் கூட்டத்தில், மதிமுக., தேர்தல் செலவுக்கு விசிக.,வுக்கு பெட்டி கொடுத்தது என்று வைகோ கூறிய விவகாரத்தில் பேஸ்புக்கில் வன்னியரசு கூறிய கருத்தில் கூட்டணிக்குள் பெரும் புயல் கிளம்பியது. ஆயினும், தேர்தல் வெற்றியைக் கருத்தில் கொண்டு, அப்போது சமாதானப் போனார்கள் வைகோ., மற்றும் திருமா., குழுவினர். அப்போதும் வைகோ கேட்டது.. வன்னியரசு யார் சொல்லி பேசுகிறார் என்பதுதான்! இப்போது அதே கேள்வியை ஷாநவாஸை வைத்து ஸ்டாலின் கேட்டு வருகிறார்.

இந்நிலையில், ஆளூர் ஷாநவாஸா கூட்டணியா என்ற நிலையில் தவித்து வருகிறார் திருமாவளவன் என்கிறார்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.