
சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் 125 ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் சொன்ன திருக்குறள்!
கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன்
ஆசிரியர் கலைமகள்
சென்னை விவேகானந்தர் இல்லத்திற்கு இன்று மதியம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விஜயம் செய்து கூடி இருந்த ராமகிருஷ்ண மடத்தின் சன்னியாசிகள் மற்றும் சென்னையைச் சேர்ந்த சில முக்கிய பிரமுகர்கள் அடங்கிய சிறு கூட்டத்தில் (100 பேர் கொண்ட கூட்டம்) உரையாற்றினார்.
இந்த நிகழ்விற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம் என்னையும் அழைத்து இருந்தது. விருந்தினர் பகுதியில் எனக்கு இடமளித்து பாரதப் பிரதமரின் உரையைக் கேட்க வாய்ப்பளித்த மடத்தின் நிர்வாகிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் ஆசிரியர் சுவாமி அபவர் கானந்தா அவர்களுக்கும் எனது நன்றியையும் சொல்வது தான் முறை!!
எல்லோருடைய கண்ணும் பிரதமர் எப்பொழுது வருவார்? பிரதமர் எப்பொழுது வருவார்? என்றே வாசலை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தது என்று சொன்னால் அது மிகை அல்ல! மிகச் சிறப்பான ஏற்பாடு. கலந்து கொண்டவர்கள் அத்தனை பேரும் மிகுந்த கண்ணியத்துடன் நடந்து கொண்டார்கள்.
ராமகிருஷ்ணா மடத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் மற்றும் மத்திய அமைச்சர் திருமுருகன் தமிழக அமைச்சர் திரு தங்கம் தென்னரசு ஆகியோரும் கலந்து கொண்டார்கள். சென்னை ராமகிருஷ்ணா மடத்தின் 125 வது ஆண்டு விழா நிகழ்ச்சி சுவாமி தபஸ்யானந்தர் நூல் வெளியீட்டுடன் துவங்கியது. பாரதப் பிரதமர் நூலினை வெளியிட்டார்.
இந்த நூலை வெளியிட்டுப் பேசிய பாரதப் பிரதமர் திருக்குறள் ஒன்றையும் சொல்ல மறக்கவில்லை! திருக்குறளுக்கான அர்த்தத்தை பாரதப் பிரதமர் ஆங்கிலத்தில் தெரிவித்தார். அந்த திருக்குறள்…
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.
குறள் எண் – 213
மு.வ அவர்கள் எழுதிய விளக்கம்…
பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது. மோடி அவர்களின் பேச்சிலிருந்து சில பகுதிகள்…
தமிழ் மொழி, கலாசாரத்தை நேசிக்கிறேன். ராமகிருஷ்ண மடத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சியானது. தமிழையும், தமிழக மக்களையும் சென்னையையும் நேசிக்கிறேன் . சென்னையின் உத்வேகம் எனக்கு மிகவும் பிடித்தமானது. எனது வாழ்வில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் பங்கு முக்கியமானது.
வங்கத்தில் பிறந்த விவேகானந்தரை, கதாநாயகன் போல் வரவேற்றது தமிழகம். விவேகானந்தர் வந்து தங்கி சென்ற விவேகானந்தர் இல்லத்திற்கு வந்திருப்பதைப் பாக்கியமாக கருதுகிறேன்.
இந்தியா குறித்த சிறப்பான தொலைநோக்குப் பார்வையை விவேகானந்தர் கொண்டிருந்தார். பெண்கள் முன்னேற்றத்தை விவேகானந்தர் வலியுறுத்தினார். தங்கள் மீதான தடைகளைப் பெண்கள் உடைத்து வருகின்றனர். சுவாமிஜியின் நோக்கத்தை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது.
விவேகானந்தரின் தத்துவங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானவை. விவேகானந்தர் கண்ட கனவு நனவாகும் வகையில், இந்தியாவிற்கான காலம் இது. தேச நலனில் நாட்டம் உள்ளவர்கள் சுவாமி விவேகானந்தரை மறக்க மாட்டார்கள்.
உலகிலேயே சிறந்த தொழில்நுட்ப அறிவியல் களம் இந்தியாவிலேயே உள்ளது. இந்தியர்களுக்கு உயர்கல்வி கிடைக்க வேண்டும் என விவேகானந்தர் விரும்பினார். உலக தரத்திலான கல்வியை உறுதிப்படுத்தும் வகையில், புதிய கல்விக்கொள்கையை இப்போது மத்திய அரசால் உருவாக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு உள்ளது! ஒரு புதிய விடியலை சுவாமிஜியின் கருத்துக்கள் ஏற்படுத்தி இருக்கின்றன…. என்று பேசினார் பிரதமர்.
பிரதமரின் உரை மொழிபெயர்க்கப்படாமலேயே எல்லோருக்கும் எளிதாகப் புரிந்தது. சென்னை ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் ஸ்ரீ கௌதமானந்த மகராஜ் அவர்கள் வரவேற்புரை நல்கினார்கள். மேடையில் ஏறும் பொழுதும் சரி, இறங்கும் பொழுதும் சரி சுவாமிஜியின் கையைப் பிடித்துக் கொண்டு ஆசீர்வாதம் வாங்க நமது பிரதமர் தவறவில்லை!! ஆத்மார்த்தமான பக்தி அதில் தெரிந்தது.
சென்னைதான் சுவாமி விவேகானந்தரை அமெரிக்காவுக்கு அனுப்பிய நகரம் என்று பிரதமர் சொன்ன பொழுது சபையில் மிகுந்த கரவொலி ஏற்பட்டது! இந்த நிகழ்ச்சிக்காக ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் மேனேஜர் சுவாமிஜி உள்பட எல்லா சன்னியாசிகளும் அல்லும் பகலுமாக உழைத்த உழைப்பு வீண் போகவில்லை!
சரித்திர முக்கியத்துவம் பெற்ற நிகழ்ச்சியாக,சென்னை ராமகிருஷ்ணா மடத்தின் சிறப்பு மிகு நிகழ்ச்சியாக இது அமைந்திருந்தது என்று சொன்னால் அது மிகை அல்ல!
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் விழா முடிந்ததும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

பாரதப் பிரதமர் வருவதற்கு முன்பாக மேடை அமைப்பு இப்படித்தான் இருந்தது! அதைத்தான் மேலே பார்க்கிறீர்கள்.
பின்குறிப்பு:கலைமகள் பத்திரிகை ஆசிரியர் என்ற முறையில் என்னையும் ஓவியர் என்ற முறையில் திரு மணியன் செல்வம் அவர்களையும் அழைத்து இருந்தார்கள்.