அதன் உச்சியில் ஒரு முருகன் சந்நிதியோ அல்லது பெருமாள் சந்நிதியோ அமைத்து, அங்கே போய் உட்கார்ந்துவிடலாம் என்று அடிக்கடி மனசில் தோன்றும்…
வியாழக்கிழமை ஸ்ரீபெரும்புதூர் சென்றுவிட்டு, ஒரகடம் வழியாகத் திரும்பி வந்தபோது, யதேச்சையாக அந்த மலைப் பகுதியை உற்றுப் பார்த்தேன். அழகாகப் படிகள் அமைக்கப் பட்டிருந்தது தெரிந்தது. ஒரகடம் – சிங்கப்பெருமாள் கோயில் பிரதான சாலையில் இருந்து இடதுபுறம் ஒரு சிமின்ட் சாலை உள்ளே திரும்பியது. அதன் வழியே சென்று மலை அடிவாரத்தை அடைந்தேன். மலை மேல் பெருமாள் கோயில் இருப்பதை அறிந்தேன். ஆனால் கோயில் இப்போது திறந்திருக்காது; பூசை செய்யறவர் வரலை என்று கீழே சீட்டாடிக் கொண்டிருந்த சில மஹானுபாவர்கள் சொன்னதால்… ஒரு பெருமூச்சோடு வீடு திரும்பினேன்.
இன்று புரட்டாசி சனிக்கிழமை காலை என்பதால்… அடியேன் இருக்கும் இடத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவு உள்ள அந்த மலைக்குச் சென்றேன்.
மறைமலைநகர் ரயில் நிலைய கேட் கடந்து உள்ளே சுமார் 6 கி.மீ. செல்ல வேண்டும். இது மருந்துமலை என்னும் பெயருடன் ஔஷதகிரியாகத் திகழ்கிறது.
இந்த இடம் ஆப்பூர் என்பதாம்..
508 படிகள். சரியாக கணக்கு எழுதியிருக்கிறார்கள் படிகளில்…!
மூலிகை வாசனை நாசியின் நுகர்வில் உணரமுடிகிறது. படிகளில் மேலும் கீழும் மூச்சிரைக்க ஏறும்போது, நன்றாக மூச்சை உள்வாங்கி சுவாசிக்கும்போது… வித்தியாசமான நறுமணம். புத்துணர்ச்சி.
முன்னால் சிறுவர்கள் சிலர் படிகளில் ஏறிக் கொண்டிருந்தார்கள்.
மலை உச்சியில் அருமையாக உள்ளது பெருமாளின் சந்நிதி. தனித்திருக்கும் பெருமாள். மார்பில் மஹாலட்சுமியைத் தாங்கியபடி! அழகிய சிறிய திருமேனி.
இங்கே பிரசன்னமாகியுள்ளதால் அவர் பிரசன்ன வேங்கடேசர்! ஏழுமலையானப் பார்த்த அதே உற்சாகம். அவர் ஏழுமலையான் என்றால்… இவர் ஏகமலையான்! அவ்வளவுதான்!
மனிதர்களிடம் பேசிப்பேசி நொந்து போன மனநிலையில்… இவரிடம்தான் சற்று நேரம் மனசால் பேசிக் கொண்டிருந்தேன். ஓய் ஆப்பூராரே… உம்ம நேரடிப் பார்வையில் இப்போ ஜாகை வந்திருக்கேன். கவனிச்சிக்கோரும். நித்ய திருவாராதன அமுதுபடி இனி உமக்கும் சேர்த்து அடியேன் இருப்பிடத்தில் இருந்தே மானசீகமாக ஆகும்… என்று சொல்லி வந்தேன்.
இந்த ஔஷதகிரியில் அகத்தியரும் பல சித்தர்களும் எழுந்தருள்கின்றனராம். குறிப்பாக பௌர்ணமி. அனேகமாக பௌர்ணமியில் கிரிவலம் போல், இந்த மலையில் ஏறி சந்நிதியை வலம் வரவேண்டும் என்று மனத்தில் சங்கல்பித்துக் கொண்டேன். நம் ஊனக் கண்ணுக்கு சித்தபுருஷர்கள் தெரியாவிட்டாலும்… அந்த யா(ஞா)னக் கண்ணுக்கு என்றாவது காட்டிச் செல்ல மாட்டார்களா என்ன?
ஒளஷதகிரி அருகேயுள்ள திருக்கச்சூர் மலைக்கோயில் சிவ பெருமானும் ஒளஷதகிரீஸ்வரர் (மருந்தீஸ்வரர்) என்ற திருநாமத்துடன் திகழ்கிறாராம். ஒருவர் சொன்னார்.
மலை மேல் மூச்சிரைக்க ஏறிச் சென்றதால் வியர்வை பெருகி தாகம் எடுத்தது. கையில் தண்ணீர் போத்தல் ஒன்றும் கொண்டு செல்லவில்லை. நல்லவேளை… கைங்கர்யபரர் பாலாஜி மோட்டர் போட்டு தண்ணீர் எடுத்துக் கொடுத்தார். மலைமேல் அந்தத் தண்ணீர் அவ்வளவு சுவை. மூலிகைச் சுவையுடன் வேர்களின் வாசனை கலந்து இருந்தது.
இங்கே வற்றாத தீர்த்தக் கிணறு ஒன்று உள்ளது. பெருமாளுக்கான திருமஞ்சனாதிகளுக்கு தங்குதடையின்றி நீர் சுரந்து தரும் அற்புதக்கிணறாம்.
ஓய் இங்கே மக்கள் என்ன பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்…? கைங்கர்யபரர் பாலாஜியிடம் கேட்டேன். அண்ணா… பெருமாள் திருநாமம் நித்ய கல்யாண பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் என்பது. இங்கே திருமணம் கைகூட வேண்டிக் கொள்கிறார்கள். இந்தப் பெருமாள் எப்போ இங்கே வந்தார். எத்தனை வருசம் இருக்கும் இதெல்லாம் அடியேனுக்குத் தெரியாது. இதற்கான கல்வெட்டோ, வேறு சான்றோ இங்கே இல்லை. ஆனால் 800 வருஷத்தில் இருந்து ஆயிரம் வரை இருக்கலாம் என்று சொல்லலாம். இங்குள்ள கிராமப் பகுதிகளில் பெருமாளை மனத்தில் நினைத்து திருமண பாக்கியத்துக்கு வேண்டிக் கொள்கிறார்கள். திருமணம் கைகூடியதும் பெருமாளுக்கு புடவை எடுத்து சாற்றுகிறார்கள். அதாவது கல்யாண ஜவுளி எடுக்கும் போது, முதல் புடவை பெருமாளுக்கு எடுக்கிறார்கள். அதை நிச்சயதார்த்தத்தின் போது கொண்டு வந்து பெருமாளுக்கு சாற்றுகிறார்கள்… என்றார்.
என்னது..? பெருமாளுக்கு புடவையா? என்ன ஓய் சொல்றீர்? என்றேன்.. ஆமாண்ணா.. இங்கே தாயார் பெருமாளுடன் சேர்ந்து மார்பில் குடியிருக்கிறார். மேலும், தாயாரே பெருமாள் ஸ்வரூபியாய் எழுந்தருளியிருப்பதாய் இங்கே ஐதீகம். அதனால் அப்படி என்றார். சரிதான்…! என்ன கலர் புடவை எடுப்பார்கள் என்று கேட்டேன். அதெல்லாம் அவரவர் இஷ்டம். பெரும்பாலும் நீலம், பச்சை, மஞ்சள் கலரில் எடுத்து சமர்ப்பிப்பார்கள் என்றார்.
இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில். சிங்கப் பெருமாள் கோயில் செயல் அலுவலர்தான் இதற்கும் பொறுப்பு. இங்கே பூஜை செய்பவர் ஒருவர் மட்டுமே உள்ளார். மேலும், இவ்வளவு தொலைவுக்கு அதிகம் மக்கள் வருவதில்லை. அதைவிட… 508 படிகள் மலை ஏறி வரவேண்டுமா என்ற மலைப்பு! ஆனால்… பட்டாச்சாரியார் பாவம்.. யார் வந்தாலும் வராவிட்டாலும் மலை ஏறி வந்துதானே ஆகவேண்டும்.! சேட்டைக் குரங்குகளும் இங்கே மிக அதிகம்!
ஆகவே… சனி ஞாயிறுகளில் கோயிலுக்கு செல்வது உசிதம். செல்லும் முன்பாக, 90031 26183 என்ற கைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசி… ஐயா… நாங்க கோயிலுக்கு வரப்போறோம்.. கோயிலுக்கு வரப்போறோம்… நீங்க அங்க இருக்கீஹளா என்று கேட்டு உறுதிப் படுத்தி… பின்னர் செல்லலாம்.
நமக்கு வழக்கம்போல் ஆப்பூர் காலனிப் பகுதி சிறுவர்கள் நண்பர்கள் ஆகிவிட்டார்கள். செங்கல்பட்டு ராமகிருஷ்ணா பள்ளியில் படிக்கிறார்களாம். தினமும் பஸ் பயணம்தான்!
விஸ்வநாதன், சபரி இருவரும் நெற்றியைக் காட்டி… ஸ்ரீராம் அண்ணா… குங்குமம் மேலபாத்து வரமாதிரி இழுத்து தீட்டிவுடுங்க என்றார்கள். பளிச்சென ஸ்ரீசூர்ண ரேஞ்சுக்கு இழுத்துவிட்டு… சற்று நேரம் அளவளாவினேன். அதற்குள் அண்ணா இப்படியே ஒரு செல்ஃபி என்றான். சரிதான் என்று ஒரு க்ளிக் க்ளிக்கினால்… மற்றவர்கள் எல்லாம் சேர்ந்து அண்ணா.. நான் நான்.. என்றார்கள்! எல்லோரையும் ஒன்றாக அமரவைத்து க்ளிக்கி… டேய் பசங்களா… கட்டாயம் இதை பேஸ்புக்கில் போடுவேன் என்றேன். விஸ்வநாதன் சொன்னான்.. அண்ணா பேஸ்புக் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு லைக் பிச்சிக்கிட்டு போகும் பாருங்க என்றான். சரிடாப்பா.. அதையும் பாப்போமே என்றேன். அந்தச் சிறார்களின் “கோவிந்தா கோவிந்தா” சப்தம் மலை முழுதும் எதிரொலித்தது.
ஆக … இப்படியாக இன்றைய புரட்டாசி சனிக்கிழமை, அடியேனுக்கு ஒரு பெருமாளையும் சில பக்த சிரோமணி சிறார்களையும் அறிமுகப் படுத்திவிட்ட நாளாக அமைந்துவிட்டது!