spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்உங்களோடு ஒரு வார்த்தைகற்பனை மேடைப் பேச்சு: தாலி... நூலு.... அறுப்பு....

கற்பனை மேடைப் பேச்சு: தாலி… நூலு…. அறுப்பு….

இப்ப நடக்கற கூத்தையெல்லாம் வெச்சி…
நாமும் ஒரு இயக்கம் தொடங்கி…
அதுக்கு நாமே ஒருங்கிணைப்பாள தலைவனா இருந்து…
அதுக்கும் நாமே காசு கொடுத்து கூட்டம் சேத்து…. இவங்கள மாதிரியே மேடையில பேசினா….
எப்டி இருக்கும்…?????
அந்தப் பேச்சையும் நாமே ரிப்போர்ட் எடுத்து,
நாமே எடிட் செய்து,
நாமே ஒரு பேப்பர் நடத்தி,
நாமே அதை வெளியிட்டு..
நாமே (நாம் மட்டுமே ) அதைப் படித்துப் பார்த்தா எப்படியிருக்கும்….???
கற்பனைக்கு எல்லை இருக்கா என்ன???
அரசியலை அவர்கள் கேலிக் கூத்து ஆக்கி விட்டார்கள் என்பதால்… நாமும் ஒரு கேலிக் கூத்து ஆடுவோமே…..
இப்படியாக… குதிரையைத் தட்டி விட்டோமா… தட தடன்னு அது ஓடுச்சா…அப்படியே அது கொட்டுச்சா…..
முடிஞ்சா நீங்களும் படிச்சி உங்க மேடைப்பேச்சையும் இங்க நீட்டி முழக்குங்க…
*****
இதோ நம்ம ரிப்போர்ட்டிங்:
*****
தாலி, பூணூல் அறுத்து திருமண பந்தத்தை அடிமை எனும் தி.க. தொண்டர், தம் அடிமைக் கயிற்றை அறுத்து தி.க. தலைவர் ஆக முடியுமா? : செந்தமிழன் சீராமன் கேள்வி
சென்னை:
அண்மையில் தி.க.வினர் சித்திரை தமிழ்ப் புத்தாண்டு நாளில் மேடையில் தாலியறுப்பு நிகழ்ச்சி நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இரு தினங்களுக்கு முன்னர் மயிலாப்பூர், மே. மாம்பலத்தில் வயதான இரு பூசாரிகளின் பூணூல் அறுக்கப்பட்டதைக் கண்டித்தும், தெய்வத்தமிழ் இயக்கம் சார்பில் மயிலாப்பூர் மாங்கொல்லையில் கண்டனக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீராமன் தலைமை தாங்கிப் பேசினார். அப்போது, தாலி, பூணூல் அறுத்து, திருமண பந்தத்தை அடிமை என்று கூறும் தி.க. வைச் சேர்ந்த தொண்டர், நெடு நாட்களாக தாமும் தம் வாரிசுகளும் கொத்தடிமைகளாக ஒரு தலைக்கும் குடும்பத்துக்கும் அடிமைப் பட்டுக் கிடக்கும் நிலையை உணர்ந்து, அடிமை விலங்கை உடைத்து, கயிற்றை அறுத்து வெளியில் வந்து தாமே அதற்கு தலைவன் ஆகிக் காட்ட முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் பேசியது….
தாலி என்பது பெண்ணுக்கு வேலி என்றார்கள். ஆனால் காலிப் பயல்கள் அதை போலி என்கிறார்கள். ஒரு பெண்ணின் நெற்றி வகிடையும் கழுத்தில் தாலிக் கயிறையும் பார்த்தால், இவள் வேறொருவன் மனைவி என்று கருதி, எந்த ஓர் ஆடவனும் அவளை மரியாதையாகப் பார்த்து விலகிச் செல்வான். இது தமிழர் நாகரிகம்.
ஆனால்… நடந்தது என்ன? இந்தியா முழுதும் பரந்து விரிந்த ராமாயணக் கதையில், ராவணனின் கதாபாத்திரத்தை இவர்கள் தமிழன் என்றார்கள். பிறன் மனை நோக்கி தன் குடியைக் கெடுத்துக் கொண்ட அரக்கன் ராவணன் தமிழன் என்று தூக்கிக் கொண்டாடுபவர்கள், அவனது செயலையே மேற்கொள்ள எண்ணம் கொண்டார்கள் என்றே தோன்றுகிறது. பிறன் மனை நோக்கல் தீதென்ற பரம்பரையில் வந்தவர்களிடம், பிறன் மனை நயத்தலாக, மாற்றான் தோட்டத்து மல்லிகை என்று சிறுமைப் படுத்திய கயமைக் கூட்டத்தில் வந்தவர்கள் பிரசாரம் செய்கிறார்கள் என்று சொல்லும்போது, அவர்களுக்கும் அப்படி ஒரு தனி நாகரிகத்தை ஏற்படுத்திக் கொடுத்த தலைவர்கள், தங்கள் முன்னோரை நனி நாகரிகர் என்று விளித்ததை விளங்கிக் கொள்ளாமல் போனார்களோ என்று வெட்கப் படுகிறேன், வேதனைப் படுகிறேன். துக்கப் படுகிறேன், துயரப் படுகிறேன்…
இவ்வகையில், தாலி கட்டியிருந்தால் அடுத்தவன் மனைவி என்று தன் அறிவுக்கு எட்டி, ஏதோ ஒரு மூலையில் இருக்கும் தன் முன்னோரான நனி நாகரிகரின் நற்பண்பு தனக்கும் வந்து விடுமே என்ற எண்ணத்தில்தான், தாலியை தன் கண்ணுக்குத் தெரியாமல் செய்வதற்காக, தாலி ஒரு அடிமைச் சின்னம் என்றுகூறி பெண்களின் மூளையை மழுங்கடித்து, தன் சுய இச்சையைத் தீர்த்துக் கொள்ள வழி செய்து கொள்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது…..
பெண்ணாக இருந்தால் சரி… கழுத்தில் தொங்கும் கயிறு அடிமைச் சின்னம். அட.. ஆணுக்கு என்னய்யா வந்தது?
பூணூல் அணிபவன் பார்ப்பனன் மட்டுமா? எத்தனையோ சாதிக்காரர்களும் தான் அணிகிறார்கள். ஆனால் இதிலும் ஒரு சூட்சுமம் உள்ளது என்பதை எண்ணிப் பார்க்கும் போது உடலெல்லாம் அப்படியே சிலிர்க்கிறது. மயிர்க் கூசுகிறது. உள்ளம் பூரித்துப் போகிறது.
பெண்ணுக்கு மட்டும்தான் திருமணம் ஆன அடையாளம் இருக்க வேண்டுமா? ஆணுக்கு கிடையாதா என்று அந்தக் காலத்தில் நம் முன்னோர் யோசித்துதான் இப்படி ஒரு பழக்கத்தை கொண்டு வந்தார்கள்.
வயசில் சின்ன பையன்களுக்கு பூணூல் கிடையாது. படிக்கும் வயது எட்டியதும், ஒரு முடிச்சு பூணூலை போடுவார்கள். அவன் படிக்கும் மாணாக்கன் என்பதாக. அவனே திருமண வயது வந்ததும், இரண்டு முடிச்சுகளாக… அதாவது ஒரு முடிச்சு கொண்ட தலா இரு பூணூலை அணிவிப்பார்கள். இந்த சடங்கு, அந்த ஆடவன் திருமணமானவன் என்பதை உலகுக்கு தெரியப்படுத்தும். அவனே ஒரு குழந்தைக்கு தந்தையாகும் போது, அவன் குழந்தை பெற்றவன் என்பதை வெளிப்படுத்த மூணு பூணூலை அணிவிப்பார்கள். அதைக் கண்டு கொள்ளும் உடன் இருப்போர், உறவினர், அல்லது அறிமுகமற்ற நபர்கள், அந்த நபர் திருமணமானவன் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு, ஏமாற்றாமலோ, ஏமாறாமலோ தடுத்தார்கள்.
ஆனால், இப்போது நடப்பது….. திருமணம் ஆனதையே மறைத்து எத்தனை திருமணமும் செய்து கொள்ளலாம், யாரை வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் நோக்கலாம், பாக்கலாம், தூக்கலாம் என்ற காட்டுமிரான்டித் தனமான நிலையை ஒரு நாகரிக சமுதாயத்தில் ஏற்படுத்த முனைகிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும் போது, ஐயஹோ.. இதை நோக்கியா இந்த சமுதாயம் செல்ல வேண்டும் என்று ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு கணமும், கடிகார முள் டிக் டிக் என்று அடிக்கும் ஒவ்வொரு சத்தத்தின் போதும் என் இருதயமும் டக் டக் என்று அடிக்கிறது.
பெண்ணுக்கு தாலி , கல்யாணமானதைக் காட்டிக் கொடுக்கும் அடிமைச் சின்னம் என்று கூறி அறுத்து எறிகிறார்கள்.
ஆணுக்கும் பூணூல் கல்யாணமானதைக் காட்டிக் கொடுக்கும் அடிமைச் சின்னம் என்று எண்ணி அறுத்து எறிகிறார்கள்.
நான் கேட்கிறேன். கல்யாணம் ஆனவன் அல்லது ஆனவள் என்பதை உலகுக்குத் தெரியப் படுத்தும் ஒரு சின்னத்தை அறுத்து அறிவதில் அப்படி என்ன குரூர புத்தி உங்களுக்கு? இதை செய்து நீங்கள் என்ன சாதிக்கப் போகிறீர்கள்? கல்யாணம் ஆகாதவள் அல்லது ஆகாதவன் என்று உங்கள் மனசுக்கும் வெளியிலும் காட்டுவதால் எப்படிப்பட்ட காட்டுமிராண்டித் தனங்களை இந்த சமுதாயம் சந்திக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா?
அது சரி… நான் கேட்கிறேன்… இவற்றை எல்லாம் அடிமைக் கயிறு என்கிறீர்களே… நீங்கள் எத்தனைக் காலமாக இவர்களின் சுய இச்சைக் கொள்கைகளுக்கு அடிமைப் பட்டு, உங்கள் சுயத்தைத் தொலைத்து, சுய மரியாதையைத் தொலைத்து, அடிமை வாழ்க்கை வாழ்ந்து, உங்கள் பிள்ளை, பேரன் என கொத்தடிமைகளாக்கி… அடிமை, கொத்தடிமை, சொத்தடிமை, சோத்து அடிமை என அடிமைகளாக இருக்கிறீர்களே… என்றாவது நீங்கள் சிந்தித்துப் பார்த்ததுண்டா..? கேட்கிறேன்…. எத்தனை நாட்களுக்கு நீங்கள் கொடி பிடிப்பீர்கள், கோஷம் போடுவீர்கள்? சமத்துவம் சகோதரத்துவம் என்றெல்லாம் பேசுகிறீர்களே… அந்த சமத்துவப் படி, பெரியார் சொத்து உங்களுக்கு கிடைத்ததா? அட… அந்த புத்தகமாச்சும் பொதுச் சொத்தாகி, உங்களுக்கு ஒரு பாகமாவது கிடைத்ததா? என்றாவது ஒரு நாள் நீங்களும் தலைவன் ஆக வேண்டும் என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?
அவ்வளவு அடிமைப் புத்தியை வைத்துக் கொண்டு, நீங்கள் அடுத்தவரின் அடிமைத் தனத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியது தான்? வெளங்கும் இந்த நாடு. வெளங்கும் உங்கள் கொள்கை… இன்னும் பேச நிறைய இருக்கிறது. ஆனாலும், மணி பத்தைத் தாண்டி, பத்து மணி ஒரு நிமிடம் ஆகி, நொடிகள் கடந்து உங்கள் மூளை எல்லாம் வாட்டத்தைச் சந்திப்பதை என் உள்ளம் உணர்ந்து கொண்ட காரணத்தால், இத்துடன் என் சுய ஊக்க சிந்தனையை உங்களிடம் விதைத்துக் கொண்டேன் என்ற மன திருப்தியோடு என் பேச்சை நிறைவு செய்கிறேன். வாழ்க தமிழ். வெல்க தமிழ். திராவிடத்தை ஒழித்து, தமிழைத் தூக்கிப் பிடிப்போம் என்று கூறி அமைகிறேன். நன்றி வணக்கம். “
என்று பேசினார் செந்தமிழன் சீராமன்.
தெய்வத் தமிழ் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஏராளமானோர் முக்காடு போட்டு முழங்காலிட்டு அமர்ந்தபடி கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe