கேள்விக்கென்ன பதில்

ஆலய அர்ச்சகர்கள் நியமன விவகாரத்தில் நீங்கள் ஏது கருத்து ஒன்றும் சொல்லவில்லை என்று நண்பர்கள் சிலர் உள்டப்பியில் விஜாரித்தார்கள்.

கருத்து சொல்லும் அளவுக்கு இந்த ‘சின்னப்பயலை’யும் ஒரு பெரிய பய ரேஞ்சுக்கு உசத்தி வைத்திருக்கும் மாண்புமிகு நட்பு வட்டாரங்களுக்கு மாபெரும் நன்றி.

ஆன்மிகவாதியாக, சமூக சேவகராக, ஆரோக்கியமான சமூகத்தை விரும்புபவராக தன்னை வடிவமைத்துக் கொண்டு செயல்படும் இசைஞானி இளையராஜாவிடம் அப்படி ஒரு கேள்வியை அந்த செய்தியாளர் கேட்டுவிட்டு அவர் அறிவிருக்கா, அறிவிருக்கா என்று கேட்டது போலான ஒரு சிறுபிள்ளைத்தனமான கேள்வி இது இல்லைதான்!

பாவம்…! ரமணருக்கும் சங்கரருக்குமாக, இன்னும் பல தெய்வங்களுக்குமாக பாடல்களையும் பாட்டையும் எழுதிவிட்டு அவர் படும் பாடு, அறிவுள்ளவர்களுக்குத்தான் தெரியும்!

அப்பன் வழியில் இன்றி தப்பிப் போன தறுதலைகள் வீட்டில் இருந்துவிட்டால், தகப்பன் படும் பாடு எப்படிப்பட்டது என்பதை அறிவுள்ளவர்கள் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும்!

வீட்டில் ஓர் இழப்பைச் சந்தித்து விட்டவனுக்கு, விடு-கதைகளில் மனசு செல்லாதுதான்!

அந்த உணர்ச்சியின் வேகத்தில் ‘அறிவிருக்கா’ என்று அவர் கேட்டு விட்டதை, ‘அறிவுள்ள’ ஊடகங்கள்தான் அது தங்களுக்கு மிக மிக அதிகம் என்பதை பறைசாற்றிக் கொண்டிருக்கும்!

இப்படி எனக்கும் கூட இப்படி சிலரிடம் கேள்விகள் கேட்டு,‪#‎அறிவிருக்கா‬ பட்டம் வாங்கிக் கொள்ள ஆசைதான்! அதை அவரவர்களின் ஊடகங்கள் எப்படி ஒளிபரப்பும் என்பதையும் கண்டுவிட ஆசைதான்!

* கொடியவர்களின் கூடாரமாகிவிடக் கூடாதே என்பதற்காகத்தான் என்று சொல்லி, கொல்லைப்புற வழியாக மோதிரம் காட்டி, மாட்டி அறிவாலய மடாதிபதியாகிவிட்ட திருவாளர் திருக்குவளையார்…

* சாகும்வரை ஒரே ஆசிரியர், தலைவர் என்று ஓர் அமைப்பை ஜனநாயக மயமாக்கியிருக்கும் மானமிகு ஆசிரியர் வீரமணியார்,

* மாணவர்கள் பலரை மெண்டலாக்கிவிட்ட பேராசிரியர் சுபவீயார்,
* ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு உழைத்தே தீருவேன் என்று விடாப்பிடியாய் தன்னை சிலுவையில் காட்சிப் படுத்திக் கொண்ட பரம ஏழை முதல்வர்,

* வெள்ளத்துக்கு காரணம் ஆக்கிரமிப்பு என்று அதற்கு அனுமதி கொடுத்த அதிகார வர்க்கத்தை பச்சை பச்சையாய் வறுத்தெடுக்கும் அந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனர்…

* வைகுண்டத்தைப் போல் எமக்கு புனிதமான தாமிரபரணியையே ஆட்டயப் போட்டு விட்டு, அதைத்தவிர மத்த செய்தியெல்லாம் நீதிபதி ரேஞ்சுக்கு கேள்வி கேட்கும் ஒரு சேனலை வைத்துக் கொண்டு… நீயெல்லாம் ஒரு திருநெல்வேலிக்காரனாடா… என்று கேள்வி எழுப்பும்படியாய் இருக்கும் அந்த ‘வெள்ள’ வேட்டிக்காரர்!

இப்படியாக பட்டியல் நீண்டு கொண்டேதான் போகிறது! இதில் ஒரு நாளிதழ் பத்திரிகை ஆசிரியர், ஒரு டிவி செய்தி ஆசிரியர், இன்னும் எழுத்தாள பத்திரிகையாள வர்க்கத்தில் சிலர் என சிலவும் அடக்கம்! பட்டியல் முழுமை பெற நாளாகும். ஆனால் என்ன செய்வது..?

ஆகம விதிப்படி என்று சொல்லிவிட்டதால், ஆகமத்துக்குள் அமர்ந்து தேடிக் கொண்டிருக்கிறேனே!
ஆகமத்தை மட்டுமே கேள்விக்கு உள்ளாக்கி விட்டதால், ஆகுமா ஆகுமா என்று மண்டையைப் பிராய்ந்து கொண்டிருக்கிறேனே….
எப்படி கருத்து சொல்வது?
என்ன செய்வது? என்று இயலாமையை வெளிப்படுத்த நான் ஒன்றும் ‘ஞானி’ இல்லையே!

– செந்தமிழன் சீராமன்