இனி எந்த மாட்டுக்குப் பொங்கல்… வைப்பது?

இனி எந்த மாட்டுக்குப் பொங்கல்… வைப்பது?
***
ஜல்லிக்கட்டுக்கு தடை; தெக்கத்தி மக்கள் வருத்தம் மற்றும் கோபத்தில்! பெரும் எதிர்பார்ப்புடன் ஏற்பாடுகள் செய்துவிட்டு… திடீரென இல்லை என்றால் ஏமாற்றம் இல்லாமலா?

சரி… இப்போதைக்கு ஜல்லிக்கட்டு என்ற பெயரில் நடத்தப்படும் விளையாட்டுக்கு தடை விதித்திருக்கிறார்கள். வாடிவாசல் வழியாக காளைகளை விரட்டி, ஒட்டுமொத்தமாக குதித்து விளையாடும் விளையாட்டை தற்போது நிறுத்தி வைப்போம். ஆனால், நெல்லை மாவட்ட வழக்கப்படி… காளைகளை தனியாக சாலையில் அவிழ்த்துவிட்டு… அவற்றைக் கட்டிப்பிடித்து, விளையாடுவதற்கு எந்தத் தடையும் கிடையாதல்லவா?

இந்த முறை அந்த முயற்சியைச் செய்யலாமே!

சாலைகளில் அந்தக் காளைகளை அவிழ்த்து விடுங்கள். அவற்றை மிரள விடாமல் பார்த்துக் கொண்டு, சாலையில் துரத்தி ஓட்டி, அல்லது துரத்தப் பட்டு ஓடி மாட்டுக்கும் நமக்குமான பாசப்பிணைப்பை வெளிப்படுத்தலாமே! 

இல்லாவிடில், மாடும் நம்முடனான தொடுதலை மறந்துவிடும், நாமும் மாட்டை நெருங்குவதை மறந்துவிடுவோம்!

இதற்கு இடம் கொடுக்கக் கூடாது!

மிருக வதை என்பது பசு மாட்டையும் எருமை மாட்டையும் வதைக்கூடங்களில் அறுத்து ரத்த விளார் ஆக்கி துடிக்கத் துடிக்க கொலை செய்து குரூர புத்தியுடன் அதைத் தின்று தொலைப்பது!

உடனே, கன்றைக் காட்டி பசுவை ஏமாற்றி பால் கறப்பது என்ன நியாயம் என்பார்கள். அதுவும் சரிதான்!
பழங்காலத்தில் அப்படி அல்ல, இன்று நீங்கள் வெண்மைப் புரட்சி என்று ஊசியும் கையுமாகத்தானே அலைகிறீர்கள். வர்த்தக மயமாக்கி வாட்டுகிறீர்களே!

இன்றைய இந்தச் சூழலில், சில வருடங்களுக்கு முன்னர் மாட்டுப் பொங்கலுக்கு ஊருக்குச் சென்ற போது எழுதிய ஒரு குறிப்பினைப் படிக்க நேர்ந்தது.

அதை மீண்டும் படித்துப் பார்த்தேன்…

விருப்பம் இருந்தால் நீங்களும் படித்துப் பாருங்கள்….
***

முன்பெல்லாம் பொங்கலுக்கு ஊருக்குப் போவதென்றால் கொண்டாட்டமாக இருக்கும். நண்பர்கள் வட்டம் ஒன்று. இரண்டாவது மக்களிடம் இருக்கும் உற்சாகம். தெருவில் களைகட்டும் பொங்கல் பானைகள். குறிப்பாக மாட்டுப் பொங்கல் உற்சாகம்.

எல்லாம் 90களில் முடிவுக்கு வந்துவிட்டது. எப்போது தனியார் தொலைக்காட்சி யுகம் தொடங்கியதோ… அப்போதே! பொங்கல் பண்டிகையும் ஏதோ ஒரு நாள் டிவி பொட்டி முன் உட்கார்ந்து பார்த்த ஜோக்கையே பார்த்து, பார்த்த பாட்டையே பார்த்து, ஏதேனும் நடிகைகள் பல்லிளித்தால் அதையே பார்த்து புளகாங்கிதம் அடைந்து, சினிமாக்காரருகளை வைத்து சில தினங்களுக்கு முன்னரேயே ஷூட்டிங் செய்து எடுக்கப்பட்ட செயற்கைப் பொங்கல் குலவையை மிடறு விழுங்காமல் பாத்து ரசித்து…. அடச் சே!

எவ்வளவு செலவு செய்து, பஸ்ஸுக்கும் ரயிலுக்கும் காத்துக் காத்து, அடிதடி போட்டு, நெருக்கடியில் இடம்பிடித்து, சிரமப்பட்டு ஊருக்குப் போய், அங்கும் டிவியில் மூஞ்சியை வைத்தால்…? எதற்குப் போவானேன்!

நானும்தான் தெருவில் இறங்கிப் பார்த்தேன்… தீபாவளி என்றால் ஒவ்வொருவர் வீட்டு முன்னும் பட்டாசு வெடித்த பேப்பர் குப்பைகள் இருந்தாகணும். பொங்கல் என்றால் கடித்துத் துப்பிய கரும்புச் சக்கைகள் இருந்தாகணும். இது எழுதப் படாத விதி. ஆனால்…. அப்படி இந்தப் பொங்கலுக்கு காட்சி அமையவில்லை.
25 வருடங்களுக்கு முன்பு….

யலேய் மக்கா… பிட்றா… பிடி… இது இன்னாமா சீறுது. யப்பா நம்மால துரத்த முடியலடே… அந்தப் பயவுள்ள என்ன தீவனம் போடுதானோ!?

– எல்லாம் தெருவில் துரத்தி விடப்பட்ட இந்தக் காளை மாடுகளின் கொம்புகளில் கட்டப்பட்டிருக்கும் வேக வைத்த பனங்கிழங்குக்குதான்! சிறுவர்களாயிற்றே! அதில் அப்படி ஓர் ஆசை!

ஒவ்வொருவராக முயன்று, மாட்டைத் துரத்தித் துரத்தி, கொம்பின் நடுவில் கட்டப்பட்ட பனங்கிழங்கைக் கைப்பற்றி வெற்றி வீரனாகக் கோப்பையைப் பெற்ற பெருமிதத்தில் இருப்பவன் மாபெரும் வீரன்!
அந்தப் பனங்கிழங்கின் சுவை இன்றும் நினைவுகளின் மடிப்பில்!

இன்று… பனங்கிழங்கையும் காணோம்! மாட்டையும் காணோம்! பத்தி விடுபவனையும் காணோம்! துரத்துபவனையும் காணோம்! பெருமிதத்தையும் காணோம்! மகிழ்ச்சியையும் காணோம்! அந்த மகிழ்ச்சி… டிவி பெட்டி முன்னால் அமர்ந்து கெக்கே பிக்கே என்று சிரித்துக் கொண்டிருக்கும் மண்ணாந்தைகளின் முகத்தில் தெரிகிறது. ஆனால்… அது உண்மையான மகிழ்ச்சி அல்ல!

மாட்டுப் பொங்கலுக்கு மாடுகளின் கொம்புகளில் பெயிண்ட் அடித்து வண்ணம் பூசி பளிச்சென்று வைப்பார்கள்!

சில விபரீத புத்திக்காரர்களும் நெல்லை ஜில்லாவில் உண்டு! தாங்கள்தான் கரை வேட்டி கட்டி அடிமைப்படுவது போதாதா? அதென்ன… கட்சிக் கலரைப் போய் மாட்டின் கொம்புகளில் தீட்டிக்கொண்டு..!? கறுப்பு -சிவப்பு, கறுப்பு வெள்ளை சிவப்பு, வெள்ளை சிவப்பு, பச்சை வெள்ளை சிவப்பு… இத்யாதிகள் மாடுகளின் கொம்புகளை ஆக்கிரமிக்கும்!

இதனால் எழும் விபரீதங்களையும் சிறிய வயதில் கண்டதுண்டு! அதன் தாக்கம்… ஒரு ஹைக்கூ மாதிரி என்று நினைத்துக் கொண்டு எழுதினேன்! (பத்தாம் வகுப்பு படித்தபோது!)

கொடூரமாய்க் கொலையுண்டன மாடுகள்!
அட…
அதன் கொம்புகளில் கட்சிச் சாயங்கள்!