கவன முடனே தொழுதிடுவோம்!

கவிதைகள் லைஃப் ஸ்டைல்
page

“கவன முடனே தொழுதிடுவோம்”
கவிதை: மீ.விசுவநாதன்
ஓவியம்: வேதா

காலைப் பிடித்துக் கணபதியை
கவன முடனே தொழுதிடுவோம்
நாளும் நமக்கு நல்லொழுக்க
ஞானம் பெருகும் நம்பிடுவோம்

காட்டுத் தீயாம் தீமைகளை
கணத்தில் மறையச் செய்திடுவான்
வீட்டுக் குள்ளே சாந்தியெனும்
விளக்கு ஒளியை நிரப்பிடுவான்

ஆசை தீர வேண்டுமென
அவனைக் கேட்டால் உடன்தருவான்
ஓசைப் படாது ஓமென்று
உள்ளே ஒலிக்கப் பழக்கிடுவான்

கவலை மறைந்து கலிவிலகும்
காலம் அவனின் கைப்பாவை
திவலை போன்ற வாழ்வினிலே
தினமும் தொடரும் நம்பிக்கை

தீப ஒளியில் அவனுண்டு
தெரியும் திசைகள் அவனில்லம்
ஆபத் தென்றும் நெருங்காமல்
அவனே காக்கும் குலதெய்வம்.

(இன்று ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.