காலாலாகா கையாயாகை மேலாலாமா பாலாலாபா!

Published:

krishnar 1 - 2026

இன்று ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியையொட்டி
மாலைமாற்றுப் பொருள்கொள் – விலோமபத (polyndrome) கவிதையில் அமைந்த எனது சிலேடைப் பா.

காலாலாகா கையாயாகை மேலாலாமா பாலாலாபா.

சிவபெருமானுக்கும் பெருமாளுக்கும் பொருந்தும் சிலேடை.

விளக்கம்:

காலாலாகா – காலால்+ஆ+கா

காலனைக் காலால் உதைத்து தன்னை நம்பிய உயிரான பக்தன் மார்கண்டேயனைக் காப்பாற்றியவர் சிவபெருமான்.

காலால் தூணை இரணியன் உதைத்தபோது நரசிம்மனாய் உருவெடுத்து அவனைத் தனது கால் தொடையில் வைத்து நகத்தால் கொன்று,
தன்னை நம்பிய உயிரான பக்தன் பிரகலாதனைக் காப்பாற்றியவர் பெருமாள்.

இருவருமே தமது திருவடியால் உயிரினங்களைக் காப்பாற்றுபவர்கள்.

கையாயாகை – கையா+யாகை = கைத்துப் போகாத (நலிவடையாத) யாக்கை (உடல்) {யாக்கை யாகை எனத் திரிபுற்றது}

மூவா முதல்வனான சிவபெருமான் எத்தனைப் பழையோனாக இருந்தாலும் என்றுமே மூப்படையாது இளமை பொருந்திய திருமேனியோடு ஞானவடிவான தக்ஷிணாமூர்த்தியாகத் திருக்காட்சி தருகிறார்.

திருமால் பல அவதாரங்கள் எடுத்தாலும் நலிவடையாமல் பக்தர்களின் அனுக்ரஹத்துக்காக மீண்டும் மீண்டும் புது வடிவெடுக்கிறார்.

சிவபெருமானும் மூலவிஷ்ணுவும் செய்கையால் உருவாகும் கைத்துப்போகும் உடலுடையோராக அன்றி, தாமே தோன்றிய அழியாத் திருமேனியோடு தரிசனம் அளிக்கின்றனர்.

மேலாலாமா- மேலால்+ஆ+மா

சிவபெருமான் தமது மேன்மையால் ஆகினார் மகாதேவனாக.

பெருமாள் தமது மேன்மையால் ஆகினார் மாதவனாக.

தவயோகிகள், ஒழுக்கசீலர்கள், பரமபக்தர்கள், கபடமற்றவர்கள் ஆகிய மேலான மக்கள் இறுதியில் உறைகின்ற நிலமாக வீடுபேறாக இருவருமே திகழ்கின்றனர்.

பாலாலாபா- பாலா+லாபா

சிவபெருமான் உமையொருபாகனாக இருபாலும் உடையவர். மங்களமாகிய நற்பயனைத் தருபவர்.

பெருமாள் பாற்கடலோன். திருமகளாம் லக்ஷ்மி உறைகின்ற திருமார்பன்.

இருவருமே நம்மை பரிபாலிக்கும் பாலர்கள், அப்பால் உள்ள ஆதாயமாகிய முக்தியைத் தருபவர்கள்.

©️ பத்மன்

Related articles

Recent articles

spot_img