spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்ஒப்பந்தத்தை மீறி... மணி ஏன் அடித்தது?

ஒப்பந்தத்தை மீறி… மணி ஏன் அடித்தது?

- Advertisement -

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்
(ஆசிரியர், கலைமகள்
)

இன்று கோகுலாஷ்டமி. எல்லோருக்கும் என் இனிய கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள். ஸ்ரீ கண்ணபிரான் ஆவணி அஷ்டமி நாளில் அவதரித்தார்.

இன்றும் நாளையும் ஸ்ரீ கண்ணனின் அவதார தினத்தை எல்லோரும் கொண்டாடுவார்கள். காரணம் இன்று அஷ்டமி. கண்ணனின் நட்சத்திரம் ரோஹினி. நாளை ரோஹிணி நட்சத்திரம் வருகிறது!

வீடுகளில் கிருஷ்ணன் பொம்மையை வைத்து அல்லது கிருஷ்ணன் படத்தை வைத்து கொண்டாடுபவர்கள் உண்டு! வீடு முழுக்க அரிசி மாவில் ஸ்ரீ கிருஷ்ணனின் பாதத்தை (கோலமாக) வரைவது உண்டு. நமது வீட்டுக்கு கிருஷ்ணன் வருகை தருவதை இந்தப் பாதச்சுவடுகள் குறிக்கும். தோரணங்கள் கட்டி ஆயர்பாடி கண்ணனை வரவேற்பார்கள்.

இளமைக்காலத்தில் எனது கீழாம்பூர் கிராமத்தில் பெரிய அளவில் நானும் கிருஷ்ண ஜெயந்திக் கொண்டாடியது உண்டு. அந்த நினைவுகள் இப்போது வருகின்றன.

சிறுவர்கள் நாங்கள் பத்து பதினைந்து பேர்கள் சேர்ந்து கொண்டு கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடுவோம். இந்த விழாவிற்காக ஒரு சப்பரத்தை தயார் செய்வோம். வீட்டில் இருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய ஸ்டூலை எடுத்து அதற்கு புடவைகளையும் அழகான துண்டுகளையும் வைத்து அலங்காரம் செய்வோம். ஸ்ரீ கிருஷ்ணனின் படத்தை ஸ்டூலின் உள்ளே வைத்து பூ மாலைகள் சூட்டுவோம்.

பெரிய இரண்டு கம்புகளை ஸ்டூலின் இரு பக்கத்திலும் கட்டி நான்கு பேர் தோள் தூக்கி கிராமத்து தெருக்களில் ஊர்வலம் வந்தது இன்றும் பசுமையாக ஞாபகம் இருக்கிறது……

என்னுடைய நண்பர்கள் கல்யாண சுந்தரம் ஐயர் மகன் ஸ்ரீ கே. சுப்பிரமணியன்(எனது உறவினர்), சுப்பிரமணியனின் சகோதரர் ஸ்ரீ விஸ்வம், நாணு மாமா மகன் ஸ்ரீ சங்கரன், ஐயங்கார் அம்பி மகன் ஸ்ரீ ராஜு , ஸ்ரீ சுவாமிநாதன், ஸ்ரீ ஸ்ரீதர்,ஸ்ரீ காசிக் கண்ணன்,ஸ்ரீ கணேசன், மூக்காண்டிமாமா மகன் ஸ்ரீ அனந்த ராமகிருஷ்ணன், கிருஷ்ண வாத்தியார் மகன் ஸ்ரீ கண்ணன்,டீலர் சுப்பையா ஐயர் மகன் ஸ்ரீ சைலம், இன்னும் சில நண்பர்களும் சேர்ந்து ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியையும், சிவராத்திரியையும் கொண்டாடிய அந்த நாட்கள் ஞாபகத்திற்கு வருகிறது.

பாட்டிலைக் கையில் ஏந்திய படி தெருவில் உள்ள ஒவ்வொரு வீட்டின் படி ஏறி எண்ணை பிரிப்பதுண்டு! இந்த வேலையை ஸ்ரீ காசிக் கண்ணனும் ஸ்ரீ சுவாமிநாதனும் முன்வந்து செய்வார்கள். சுவாமியின் நேவேத்தியத்திற்கும், சுவாமி புறப்படும்போது தீவட்டி ஒளியூட்டுவதற்கும் இந்த எண்ணெய் பயன்படும்.

நானும் சுப்பிரமணியனும் கிருஷ்ண வாத்தியார் மகன் கண்ணனும் ஸ்ரீதரும் கையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு தெருவில் உள்ளோர்களிடம் நன்கொடை வசூலிப்பதுண்டு! இந்தப் பணம் முழுவதும் பிரசாதம் தயாரிப்பதற்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் செலவிடப்படும். கையில் மீதமில்லாத படி பார்த்துக் கொள்வோம்.

தெருவில் உள்ள இளைஞர்கள் கலைநிகழ்ச்சியில் ஆர்வம் உள்ளவர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவார்கள். என்னுடைய தலைமையில் நாடகங்களும் நடந்தது உண்டு. இதற்கு ஊரில் உள்ள பெரிய மனிதர்களின் ஆசிர்வாதமும் அன்பும் அரவணைப்பும் இருந்ததை இன்றும் நினைத்து நினைத்து மனம் உருகிப் போகிறேன்.

இந்தக் காலத்து இளைஞர்களுக்கு இது போன்ற வாய்ப்புகள் எல்லாம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இது போன்ற சிந்தனைகள் கூட இல்லை. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை எனது கிராம வாழ்க்கை நன்றாகவே எனக்கு எப்போதும் எடுத்து இயம்பி வருகிறது…….

ஆயர்பாடி கிருஷ்ணனுக்குப் பிடித்த நேவேத்தியம் வெண்ணையாகும். இதைப் பற்றிய ஒரு கதையை (கற்பனை) கீழே தந்துள்ளேன். செங்காளிபுரம் ஸ்ரீமான் அனந்தராமகிருஷ்ண தீட்சதர் தனது உபன்யாசத்தில் இக்கதையைச் சொல்வதுண்டு!

கிருஷ்ணன் வெண்ணையை உண்டு உடல் நிலையைக் கெடுத்துக் கொள்கிறான். வெண்ணையை எங்கு வைத்தாலும் அதனைத் திருடி திண்பதில் அவனுக்கு ஏக சந்தோஷம்…….

யசோதை உரியின் மீது உயரத்தில் மண் பானையில் வெண்ணையை வைக்கிறாள். அந்த உரியின் பக்கத்தில் ஒரு மணியையும் கட்டி தொங்க விடுகிறாள். கிருஷ்ணன் வெண்ணையைத் திருட வரும்போது மணி அடித்து விடும். கையும் களவுமாக கிருஷ்ணனைப் பிடித்து விடலாம் என்பது யசோதையின் எண்ணம்.

ஆனால் பகவான் இன்னொரு கணக்குப் போடுகிறார்! மணி இடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறார்”ஏ மணியே என்னுடைய தாயார் நான் வெண்ணையைத் திருடும்பொழுது நீ ஒலி எழுப்ப வேண்டும் என்பதற்காக கட்டி வைத்திருக்கிறார். ஆனால் நீ ஒலி எழுப்பக் கூடாது! ஒலி எழுப்ப மாட்டேன் என்று எனக்கு சத்தியம் பண்ணிக் கொடு” இப்படி பகவான் சத்தியம் கேட்டதும் மணி அப்படியே செய்கிறேன் என்று சொல்லியது!

கிருஷ்ணனுக்கு ஏக சந்தோஷம். நம்மை மணி காண்பித்துக் கொடுக்காது என்று அவர் முடிவு கட்டுகிறார்.

உரியின் மேல் உள்ள பானையில் இருக்கும் வெண்ணையை எடுத்து தன் வாய்க்குள் கொண்டு போகிறார் ஸ்ரீ கிருஷ்ணன். சத்தியத்தை மீறி மணி அடித்து விடுகிறது. யசோதை ஓடிவந்து கண்ணனைப் பிடித்துக் கொள்கிறாள். கோபித்துக் கொள்கிறாள்.

“கொடுத்த சத்தியத்தை மீறலாமா? மணி நீ என்னிடம் கொடுத்த சத்தியம் என்ன ஆனது?”என்று கிருஷ்ணர் மணியிடம் குழந்தைத்தனமாக கேட்கிறார்.

மணி சொன்னது”கிருஷ்ணா உன்னை காட்டிக் கொடுக்கக் கூடாது என்று தான் நான் நினைத்தேன். ஆனால் நம்முடைய கடமை பெரியது என்பதை நீ தான் அடிக்கடி ஞாபகப்படுத்துவாய். கடமையை செய்கிறவன் தான் எல்லாவற்றுக்கும் மேலானவன் என்று உரைக்கிறவனும் நீதான்! நீ ….நீ ….வெண்ணையை வாயில் கொண்டு செல்லும் பொழுது எனக்கு என் கடமை ஞாபகத்திற்கு வந்தது! பகவானுக்கு நேவேத்தியம் நடக்கும் பொழுது நான் அடிப்பதுதானே முறை. எனக்கு சத்தியம் பெரிதாகத் தெரியவில்லை! என்னுடைய கடமை தான் பெரிதாகத் தெரிந்தது!! எனவேதான் அடித்தேன். தவறு இருந்தால் மன்னித்துவிடு ஸ்ரீ கிருஷ்ணா…. உன்னை சரணடைகிறேன்….” மணி இப்படி சொன்ன போது கிருஷ்ணனால் எதுவும் பேச முடியவில்லை.

நம்முடைய கடமையை ஒழுங்காகச் செய்தால் அதுவே மிகச்சிறந்த இறை பணியாகும். மீண்டும் ஒரு முறை எல்லோருக்கும் கோகுலாஷ்டமி திருநாள் வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe