பெருந்திணைக்காரி

இலக்கியம் கட்டுரைகள் கவிதைகள் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
girl bathing - 2026

குறிஞ்சிப் பாணனின் பாடலில் சொக்கி
தாமரை மலர்களையும்
கெண்டைமீன் சாறையும் கொண்டுவந்த
மருத நிலத்து விறலி
ஏறிவந்த புரவியின் உரசலில் கிளர்ச்சியுற்று
கீழுதட்டைக் கடித்தபடி நிற்கிறாள்
ஆழ்விழிகளில் ஏக்கம் ததும்ப

நீள்சுவர் மண்டபத்துக் கல்லிருக்கையில் அமர்ந்தபடி 
தனிமையின் இரைச்சலைப் படையலிடுகிறாள்

புதிர்த்திசையின் பாரம்தாளாமல் தடுமாறும் பதின்மன் 
குத்திட்ட நெடுமலையின் தேனைப் பகிர்கிறான்

தேனின்ருசியிலும் பேச்சிலும்
மேலும் கிறங்கி நழுவுகின்றன பொழுதுகள்

இரவுக்கான பூச்சிகளும் வவ்வால்களும் ஓசையிட 
நட்சத்திரங்களும் ஒளிரத்தொடங்கிவிட்டன

பரபரப்பாய்க் கைகள் சுழற்றி 
வறண்ட நாவுடன் 
ஆதிக்குளத்தில் குதிக்க அழைக்கிறாள்

கம்பீரக்கதவுகள் தாழிட
இயக்கம் தொடங்கி
தாளகதியில் சீராகிறது

வாளிப்பு முதுகை அணைத்து வருடும் 
விரல்களில்படுகின்றன கசங்கிய பூவிதழ்கள் 

சன்ன மூச்சில் விரவுகிறது 
வெதுவெதுப்பு

மிதப்பின் அசைவுகளில் 
வியர்வையரும்பி வழுக்க
உச்சத்தின் துடிப்பில்
மெல்ல மேலெழுந்து கீழிறங்குகிறது
உருண்டு திரண்ட பிருஷ்ட்டங்கள்

காமத்தின் ஆராதனையில்
ஒளிர்ந்தடங்குகிறது 
விரகப்பெருஞ்சுடர்

சட்டென சாளரத்துள் நுழைந்த 
பெருங்காற்றுக்குப் படபடக்கின்றன 
களைந்த துணிகள்

தன் வயதின் மூப்பைச்சொல்லி
திடீரென அழுகிறாள் 
இப்படியே செத்துவிடக்கூடாதாவெனக்கேட்டு.

  • கவிஞர் ரவி சுப்ரமணியம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.