வெளிநாடுகளைப்போல், பாலியல் பலாத்காரக் குற்றங்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று நடிகை ராய் லட்சுமி கூறினார். நடிகை ராய் லட்சுமி தற்போது புதிய படங்களில் நடித்து வருகிறார். அவர் ஸ்ரீகாந்த் ஜோடியாக நடிக்க, வி.சி.வடிவுடையான் இயக்கத்தில், ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் ஆகிய இருவரும் ‘சவுகார்பேட்டை’ என்ற புதிய படத்தை தயாரிக்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடக்க விழா சென்னை பிரசாத் லேப் ஸ்டூடியோவில் நடந்தது. இந்த விழாவில் நடிகர் ஸ்ரீகாந்த், நடிகை ராய் லட்சுமி ஆகிய இருவரும் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, …‘‘இது, சாதாரண பேய்ப் படம் அல்ல. உணர்வுப்பூர்வமான திகில் கலந்த படம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். இந்தப் படத்தில் நான் நகரத்து இளைஞனாகவும், மந்திரவாதியாகவும் 2 வேடங்களில் நடிக்கிறேன். படத்தின் பெயர், ‘சவுகார் பேட்டை’ என்றாலும், இது மார்வாடிகளின் கதை அல்ல. சம்பவங்கள் முழுவதும் சவுகார்பேட்டையில் நடப்பது போல் கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.’’என்றார் நடிகர் ஸ்ரீகாந்த். தொடர்ந்து இந்தப் படம் குறித்துப் பேசிய நடிகை ராய் லட்சுமி.. ” எந்த பேய்க்கும் நான் பயப்பட மாட்டேன். எனக்கும், பேய்க்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என்று நினைக்கிறேன். காஞ்சனா, அரண்மனை ஆகிய 2 படங்களிலும் நான் நடித்த பிறகு என்னைத்தேடி 11 புதிய பட வாய்ப்புகள் வந்தன. எல்லாமே பேய் படங்கள். அதில், ‘சவுகார்பேட்டை’யை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன்…. என்றார். பின்னர், “நடிகைகளின் தலைகளை ஒட்ட வைத்து ஆபாச படம் தயாரித்து வெளியிடுவதற்காகவே ஒரு கும்பல் இருக்கிறது. எப்படியாவது பணம் சம்பாதிக்க ஆசைப்படும் கும்பல் அது. பிரபலங்களை குறிவைத்து இந்த வேலை நடக்கிறது. இதற்கு பொறாமையும் ஒரு காரணம். அவர்கள் வெளியிடும் வீடியோக்களை பார்த்து யாரும் நம்பப்போவதில்லை. அவை உண்மையான வீடியோ அல்ல என்று எல்லோருக்கும் தெரிகிறது. என்றாலும் அந்த கும்பலை சும்மா விடக்கூடாது. இதுபோன்ற ஆபாச படங்களை வெளியிடுவது கற்பழிப்பு குற்றத்துக்கு சமமானது. வெளிநாடுகளில், கற்பழிப்பு குற்றங்களுக்கு மரண தண்டனை கொடுக்கிறார்கள். அதுபோல் நம் நாட்டிலும் இந்த குற்றங்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும். உயிர் பயம் இருந்தால், இதுபோன்ற குற்றங்களை செய்யமாட்டார்கள். வெறும் ஜெயில் தண்டனை இவர்களை பயமுறுத்தாது. ஜெயிலில் அடைத்து அவர்களுக்கு சாப்பாடும் போடுவது, அரசாங்கத்துக்கு வீண் செலவு என்றார் படு காட்டமாக!
பாலியல் பலாத்கார குற்றத்துக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்: நடிகை ராய் லட்சுமி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari