தேச துரோக வழக்கு; 49 பேரையும் கைது செய்ய வேண்டும்: அர்ஜூன் சம்பத்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்
hindumakkalkatchi arjunsampath - 2026

தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள 49 பேரையும் கைது செய்ய வேண்டும் என குமரி மாவட்டம் தோவாளையில் இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத் வலியுறுத்திப் பேசினார்.

இந்து மக்கள் கட்சியின் குமரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தோவாளை பண்டாரபுரத்தில் நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார். தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்பு செயலாளர் பைஜு, மாவட்ட அமைப்பாளர் செல்வகுமார், மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜேஷ், துணை தலைவர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கட்சியின் நிறுவனர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர்… “கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களுக்கே திரும்பக் கொடுக்கும் அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 9-ஆம் தேதி தமிழகம் முழவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்றார்.

கூட்டத்திற்குப் பின்னர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்…

பிரதமருக்கு அவதூறு ஏற்படும் வகையில் கடிதம் எழுதிய 49 பேர் மீது தேசத் துரோக வழக்கு போடப்பட்டுள்ளது. இதற்காக சிலர் மத்திய அரசை குறை கூறி வருகிறார்கள். ஆனால் இந்த வழக்கு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் போடப்பட்டது. எனவே, அவதூறுக் கடிதம் எழுதிய 49 பேரையும் கைது செய்ய வேண்டும்.

சென்னை பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையை விருப்பப் பாடமாக வைத்ததை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது. அதே போல் தமிழக கல்வி நிறுவனங்களில் இந்து சமூக நீதி போதனை நூல்களை பாடமாக வைக்க இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுக்கிறது.

இந்துக்கள் விழாக்களுக்கு தி.க., தி.மு.க. தலைவர்கள் வாழ்த்து தெரிவிக்காதது கண்டனத்திற்குரியது. .. என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.