பரங்கிமலையில் ரூ.6 கோடியில் புதிய நடை மேம்பாலம்!

உள்ளூர் செய்திகள் சென்னை பொது தகவல்கள்
parankimalai - 2026

பரங்கிமலை மின்சார, மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் ரூ.6 கோடி செலவில் புதிய நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அடுத்த 6 மாதங் களில் நிறைவடையும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் சென்னை சென்ட்ரல், எழும்பூர், கிண்டியை போல், பரங்கிமலையும் முக்கிய போக்குவரத்து சந்திப்பாக உருவெடுத்து உள்ளது. மெட்ரோ ரயில் இணைப்பு வசதி வருகையாலும், பறக்கும் ரயில் சேவையும் விரைவில் இணைக்கப்படவுள்ளதால் பொது மக்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், தெற்கு ரயில்வே பரங்கிமலை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வருகிறது. இருக்கைகள் அமைத்தல், நடைமேடைகள் விரிவாக்கம், தேவையற்ற ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதேபோல், ஆலந்தூர் சாலையில் இருந்து மின்சார ரயில் நிலை யம், மெட்ரோ ரயில் நிலையத்துக்கு செல்ல வசதியாக புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, சென்னையில் பரங்கிமலை ரயில் நிலையம் முக்கிய போக்குவரத்து சந்திப்பாக மாறி வருகிறது. மின்சார ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் ஆலந்தூரின் பிரதான சாலையும் இணைவதால், மக்களின் வருகை அதிகரித்துள்ளது.

பறக்கும் ரயில் நிலையமும் விரைவில் அமையவுள்ளதால், மக்கள் வருகை மேலும் பல மடங்கு அதிகரிக்கும். எனவே, பரங்கிமலை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை படிப்படியாக மேம்படுத்தி வருகிறோம்.

பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஏற்கெனவே உள்ள நடைமேடை சிறியதாக இருப்ப தால், பயணிகள் வந்து செல்ல சிரமப்படுகின்றனர். மேலும், அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்துக்கு சிறிது தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது.

எனவே, ஆலந்தூர் சாலை – பரங்கிமலை ரயில் நிலையம் – மெட்ரோ ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் ரூ.6 கோடி செலவில் நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. படிகளுடன் எஸ்கலேட்டர் வசதியும் அமைக்கப்படுகின்றன. இந்தப் பணிகள் அடுத்த 6 மாதங்களில் நிறைவடையும் என எதிர் பார்க்கிறோம்” என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.