தேனி அருகே இரு பிரிவினரிடையே மோதல்: போலீஸார் மீது கல்வீச்சு; ஆய்வாளர் படுகாயம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் மதுரை

cumbum bus stand - 2026

தேனி :

தேனி மாவட்டம் கம்பம் காட்டுப்பள்ளிசாலையில் நேற்று இரவு இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கல்வீச்சு சம்பவம் நிகழ்ந்தது. மோதலை கட்டுப்படுத்த முயன்ற காவல் ஆய்வாளர் உலகநாதன் மீது கண்மூடித்தனமாக நிகழ்த்தப் பட்ட தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்ற வருடம் நிகழ்ந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது, அப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த பிரிவினருக்கும் இஸ்லாமியர்கள் தரப்புக்கும் பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று தொழுகைக்குச் சென்ற பெண்களை வேற்று சமுதாயத்தினர் கேலி செய்ததாக இஸ்லாமியர்கள் தரப்பில் இருந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்வதாக போலீஸார் கூறியுள்ளனர்.

இதை அடுத்து, ஜூன் 1 வியாழக்கிழமை நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் கம்பம் வடக்குப் பகுதியில் இஸ்லாமிய இளைஞர்கள் சிலர், தொழுகை முடித்துவிட்டு இரு சக்கர வாகனங்களில் கண்மூடித்தனமாகச் சென்றனராம். இதனை அப்பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் தடுத்துள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பும் ஆயுதங்களால் தாக்கிக் கொண்டுள்ளனர்.

இந்து மக்கள் வாழும் அந்தப் பகுதியில் வீடுகள் சந்து பொந்துகள் கொண்டதாக, குறுகலான தெருக்கள் என்பதால், இரு சக்கர வாகனங்களில் வந்த இளைஞர்களின் தகவலின் பேரில் அவர்கள் தரப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆயுதங்களால் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர்.

அவர்களைத் தடுக்க காவல்துறையினர் வந்தபோது அவர்களையும் அடித்து விரட்டியுள்ளனர், அவர்களில் பலர் காயம் அடைந்தனர். தடுக்க முயன்ற கம்பம் சரக ஆய்வாளர் உலகநாதன், இந்தத் தாக்குதல் சம்பவத்தில் படுகாயம் அடைந்தார். அவர் கம்பம் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் இந்தத் தாக்குதல் சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சரவணன், கம்பம் வடக்குபட்டியைச் சேர்ந்த மணி இருவரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்!

இதை அடுத்து, இந்த வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கம்பம் வடக்கு பகுதி மக்கள் இரவு 12 மணி வரை தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்லாமியர் தரப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்து முன்னணி செயலாளர் லோகு, சிவத்தி உள்ளிட்ட ஆறு பேரை கூடலூர் காவல் நிலையத்துக்கு போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இந்தப் பகுதியில் பெரும் மதக் கலவரத்தைத் தூண்ட சமூக விரோதிகள் திட்டமிட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இது கேரள மாநிலத்தை ஒட்டிய பகுதி என்பதால், இங்கே சமூக விரோதிகள், நக்சல் இயக்கத்தினர் ஆயுதப் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர், அவர்களை காவல் துறையினர் கண்டு கொள்ளவில்லை என்று இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.