மதுரையில் பேராசிரியைக்கு கத்திக் குத்து: விரக்தியில் இளைஞர் வெறிச்செயல்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் மதுரை

மதுரைப் பல்கலைக்கழகப் பேராசிரியை ஜெனிபாவை விரிவுரையாளராகப் பணியாற்றிய ஜோதிமுருகன் கத்தியால் குத்தியது ஏன் என்பது குறித்து பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறைத் தலைவராகப் பணியாற்றி வருபவர் ஜெனிபா. இன்று காலை பல்கலைக்கழகத்தில் இருந்த ஜெனிபாவை ஜோதி முருகன் என்பவர் கத்தியால் குத்தினார். பலத்த காயமடைந்த ஜெனிபா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். பேராசிரியை ஜெனிபாவை ஜோதிமுருகன் கொலைசெய்ய முயன்றது ஏன் என்பது குறித்து பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை குளமங்கலத்தைச் சேர்ந்தவர் ஜோதிமுருகன். இவர் எம்.எஸ்ஸி., எம்ஃபில் இதழியல்துறை படித்துள்ளார். கடந்தாண்டு காமராஜர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார் ஜோதிமுருகன். தற்காலிகப் பணியாளராகச் சேர்ந்த இவர், தொடர்ச்சியாகப் பல்கலைக்கழகத்தில் சில்மிஷம் செய்துவந்துள்ளார். மாணவிகளிடம் தவறாகப் பேசுவது; போனில் தொல்லை செய்வது உள்ளிட்ட தவறுகள் செய்துள்ளார். இந்தத் தகவல் இதழியல்துறைத் தலைவர் பேராசிரியை ஜெனிபாவுக்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவரை பணியிலிருந்து நீக்கினார் ஜெனிபா. இவருக்குப் பதிலாக இரண்டு விரிவுரையாளரைக் கடந்த வியாழன் அன்று நியமித்துள்ளார் ஜெனிபா.

ALSO READ:  போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!

இதனால் கோபத்திலிருந்த ஜோதிமுருகன் இன்று காலை பல்கலைக்கழகத்துக்கு வந்துள்ளார். பேராசிரியை ஜெனிபா அறைக்குச் சென்ற ஜோதிமுருகன், தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார். அறையிலேயே இருந்துகொண்டு ஜெனிபா கத்துவதை ரசித்துள்ளார். தகவல் அறிந்து மாணவர்கள் ஜோதிமுருகனைத் தாக்கியதோடு, நாகமலைபுதுக்கோட்டை காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். வேலை கிடைக்காத கோபத்தில் பேராசிரியை ஜெனிபாவை ஜோதிமுருகன் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. வேலை பறிபோனதால் மனைவியும் அவரை மதிக்காமல் இருந்துள்ளார். இந்த விரக்தியால் ஜோதிமுருகன் இவ்வாறு செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது ஜோதிமுருகன் மனநோயால் சற்றுப் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.