காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் ஹிந்து மத ஓவியங்களை அழித்த விவகாரத்தில் 4 பேர் கைது

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் ஹிந்து மத ஓவியங்களை வெள்ளையடித்து அழித்தது தொடர்பாக 4 பேரைக் கைது செய்த போலீசார், 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பணியில் கவனக்குறைவாக இருந்ததாலும், அத்துமீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததாலும், புகார் அளித்த ரயில் நிலைய மேலாளர் சீனிவாசலு மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவில் நகரான காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் வரையப்பட்டிருந்த கைலாசநாதர், காமாட்சி அம்மன், ஏகாம்பரேஸ்வரர் உள்ளிட்டோரின் படங்களை, கடந்த 21ஆம் தேதி, பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வெள்ளைஅடித்து அழித்துச் சென்றனர். இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியான மூன்று நாட்களுக்கு பிறகு தாலுகா காவல்நிலையத்தில் ரயில் நிலைய அதிகாரி சீனிவாசலு என்பவர் புகார் அளித்தார்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குள், புகுந்த சிலர் கூச்சலிட்டனர். விசாரணையில் அவர்கள் ரயில் நிலையத்தில் இந்து கடவுளர்களின் படங்களை அழித்தவர்கள் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து ஜெசி, மகேஷ், சஞ்சய் தமிழன் மற்றும் அம்பேத்கர் பாலு உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது அரசு அலுவலகத்தில் அத்துமீறி நுழைதல், ரயில் நிலையத்தை சேதப்படுத்துதல், பிற மதத்தினரின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ளுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.