மதுரையில் ஆளுநர் ஆய்வு; அதிகாரிகளுடன் ஆலோசனை: மறியல் செய்த திமுக.,வினர் கைது!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் மதுரை

மதுரையில் ஆய்வு மேற்கொள்ளச் சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, மதுரை மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடு குறித்து உயர் அதிகாரிகளுடன் அவர் ஆய்வு நடத்தினார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மதுரை வந்திருந்தார். நேற்று காலை மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.

பின்னர், நாகமலை புதுக்கோட்டை என்ஜிஓ காலனியிலுள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்த ஆளுநர் அங்கிருந்த குழந்தைகளுக்கு மதிய உணவாக தக்காளி சாதம், வாழைப்பழம், லட்டு வழங்கினார். சுயஉதவிக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த மையத்தில் பல்வேறு கைவினை பொருட்களின் தயாரிப்பு, விற்பனை விவரம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், ஊரக வளர்ச்சித்துறை சார்பில், தூய்மை பாரதம் இயக்கம், முழு சுகாதார முன்னேற்றம் எனும் தலைப்பில் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியை பார்வையிட்டு, தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு ரதத்தை தொடங்கி வைத்தார். பின்னர் காந்தி அருங்காட்சியகத்துக்குச் சென்ற ஆளுநர், அங்கே மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்கள், காந்தி தொடர்பான சுதந்திரப் போராட்ட கால அரிய புகைப்படங்களைப் பார்த்து வியந்தார்.

தொடர்ந்து அரசு சுற்றுலா மாளிகைக்குச் சென்ற ஆளுநர், அதிகாரிகளுடன் மாவட்ட செயல்பாடு குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் பொதுமக்களிடம் அவர் மனுக்களை பெற்றார்.

தொடர்ந்து தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ், தெற்கு சித்திரை, மேலமாசி வீதிகளில் ஆளுநர் தூய்மை பணியில் ஈடுபட்டார். பக்தர்களுக்கென மீனாட்சி அம்மன் கோவிலில் புதிதாக வாங்கிய 4 பேட்டரி கார்களை ஆளுநர் தொடங்கி வைத்தார்.

இதனிடையே ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகமலை புதுக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக.,வினரை போலீஸார் கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.