ரூ.50 பஸ் பாஸை ஏன் நிறுத்தி வைத்தோம்: அமைச்சரின் புது விளக்கம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

சென்னை:
ரூ.50க்கான ஒரு நாள் பாஸ் ஏன் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் புது விளக்கத்தை அளித்துள்ளார். போலிகள் வந்ததால் ரூ.50 பஸ் பாஸ்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாநகர பஸ்களில் ஒரு நாள் பயணம் செய்ய ரூ.50 பாஸ் வழங்கப்பட்டு வந்தது. அதில் போலிகள் அதிகம் வெளிவந்ததால், அந்த பாஸ் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஹாலோகிராம் போன்ற நவீன வசதிகளுடன் பாஸ் வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம். மற்ற பாஸ்கள் அனைத்தும் வழக்கம்போல வழங்கப்படுகின்றன என்றார்.

மேலும், போக்குவரத்து கழகங்களுக்கு புதிதாக 2 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. இன்னும் 4 மாதங்களில் அவை பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று கூறிய விஜயபாஸ்கர், மெட்ரோ ரயில் போக்குவரத்தையும் மாநகர பஸ் போக்குவரத்தையும் இணைத்து ஒருங்கிணைந்த டிக்கெட் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாகவும், மின்சாரத்தில் இயங்கும் பஸ்களின் விலை அதிகமாக இருப்பதால் அவற்றுக்கு மானியம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

விபத்துகளையும், உயிரிழப்புகளையும் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. வாகனத்தில் வேகமாக செல்வோர், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோர், சாலை விதிகளை மதிக்காமல் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 1 லட்சத்து 59 ஆயிரம் ஓட்டுநர் உரிமங்கள் மீது போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் காரணமாகத்தான் கடந்த ஓராண்டில் மட்டும் 5,869 விபத்துகள் குறைந்திருக்கின்றன என்று கூறினார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

முன்னதாக, ஒருநாள் பாஸ் ரூ.50ல் இருந்து ரூ.80 ஆக அதிகரிக்கப் பட்டது. வாராந்திர மாதாந்திர பாஸ் கட்டணங்களும் அதிகரிக்கப் பட்டன. இதனால் பொதுமக்களிடம் பெரும் அதிருப்தி ஏற்பட்டது. இதனால் ஒருநாள் பாஸ் மட்டும் அரசால் விலக்கிக் கொள்ளப் பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.