ஜெ.தீபா வீட்டில் சோதனையிட வந்த ‘போலி’ வருமான வரி அதிகாரியால் பரபரப்பு

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

சென்னை:
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை நடத்தி வருகிறார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. இவரது வீட்டுக்கு, வருமான வரித் துறை அதிகாரி எனக் கூறிக் கொண்டு சனிக்கிழமை நேற்று திடீரென ஒருவர் வந்தார். இது குறித்து பரபரப்பாக உடனே செய்திகளும் வெளியானது. ஆனால் அவ்வாறு வந்த நபர் போலியான நபர் என்று தெரியவந்தது. இப்படி, போலியான ஆவணங்களுடன் ஜெ.தீபா வீட்டுக்கு வந்து ஏமாற்ற முயன்ற இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஜெ.தீபா, சென்னை தியாகராய நகரில் உள்ள சிவஞானம் சாலையில் வசித்துவருகிறார். இவரது வீட்டுக்கு சனிக்கிழமை காலை 6 மணியளவில் மர்ம நபர் ஒருவர் வந்தார். தன் பெயர் மித்தேஷ்குமார் என்றும், தான் வருமான வரித் துறை உதவி ஆணையர் என்றும் அவர்களிடம் அறிமுகம் செய்துகொண்டார். பின்னர், வீட்டில் சோதனையிடப் போவதாகக் கூறிய அவர், அதற்கான ஆவணத்தையும் காட்டியுள்ளார்.

அப்போது வீட்டில் தீபாவின் கணவர் மாதவன் இருந்துள்ளார். அவர், தனது வழக்குரைஞருக்கு தகவல் அளித்து விட்டு, அந்த நபரை சோதனைக்கு அனுமதித்துள்ளார். மாதவன் வீட்டில் இருந்த உதவியாளர்கள் அந்த நபரிடம் அடையாள அட்டையை கேட்டபோது, அந்த இளைஞர் அடையாள அட்டையையும், வீட்டில் சோதனை நடத்துவதற்கான வாரண்ட்டையும் காட்டியுள்ளார்.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

அப்போது ஏன் இந்த சோதனை என்று மாதவன் அந்த இளைஞரிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர், பேரவையில் பலரிடம் பதவி தருவதாக பணம் பெற்று கொண்டு ஜெ.தீபா ஏமாற்றியதாக காவல் துறை ஆணையருக்கு புகார் வந்துள்ளது. மேலும் பல கோடி ரூபாயை தீபா பதுக்கி வைத்திருப்பதாக புகார் வந்துள்ளது. இதன் அடிப்படையில் சோதனை நடத்த வந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இதனால், மாதவனுக்கும் மித்தேஷ் குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த மாம்பலம் உதவி ஆணையர் செல்வம், ஜெ.தீபா வீட்டுக்குச் சென்று, மித்தேஷ் குமாரிடம் விசாரித்துள்ளார். அப்போது சந்தடி சாக்கில் அந்த நபர், வீட்டின் சுவர் ஏறிக் குதித்து அப்பகுதியில் தயாராக இருந்த ஆட்டோவில் ஏறி தப்பிச் சென்று விட்டார்.

கையில் கிடைத்தும் அந்த நபர் தப்பிவிட்டதால், மாம்பலம் காவல் நிலைய போலீஸார் அந்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் பிரமோத்ஸ்வம் தொடக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.