ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் சென்ற பக்தர் இன்று மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவில்.கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோவிலில் சுந்தரமகாலிங்கம் சுயம்பு வடிவாக காட்சி தருகிறார்.
மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு இன்று தை அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர் இந்த நிலையில் கோவை மாவட்டம், கேகே புதூர் சாய்பாபா காலனியே சேர்ந்த சிவக்குமார்(48) இன்று சாமி தரிசனம் செய்வதற்காக தனது நண்பர்களுடன் அதிகாலையில் வருகை புரிந்து மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு நடந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் மலைப்பாதையில் உள்ள வனத்துர்க்கை கோவில் அருகே செல்லும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். மயங்கி விழுந்த சிவக்குமாரை அங்கிருந்து டோலி மூலம் தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு கொண்டு வந்தனர். பின்னர் தாணிப்பாறை அடிவாரப் பகுதியில் இருந்த மருத்துவ குழுவினர் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சிவகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.