நாளை தொடங்குகின்றன +2 தேர்வுகள்: காப்பி அடித்தால் 5 வருடம் தேர்வெழுத இயலாது எச்சரிக்கை!

உள்ளூர் செய்திகள் கல்வி சற்றுமுன் சென்னை தமிழகம்

சென்னை:
வியாழக் கிழமை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் துவங்குகின்றன. 2,794 மையங்களில், 8.67 லட்சம் மாணவ மாணவியர் இந்தத் தேர்வினை எழுதுகின்றனர். தேர்வில் காப்பி அடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. காப்பி அடித்தால், ஐந்து ஆண்டுகள் வரை தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முதல் பிளஸ்-1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பிளஸ் 2 பொது தேர்வு தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை துவங்குகிறது. ஏப். 6ல் இந்தத் தேர்வுகள் முடிகின்றன. தேர்வு முடிவுகள் மே 16ல் வெளியிடப்படும்.

தமிழகத்தில் 2,756 மையங்களும், புதுவையில் 38 தேர்வு மையங்களும் என 2794 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 6,754 மற்றும் புதுச்சேரியில் 147 என மொத்தம், 6,901 பள்ளிகளைச் சேர்ந்த 4.63 லட்சம் மாணவியர் உட்பட 8.67 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். புதுச்சேரியில் மட்டும் 8,215 மாணவியர் உட்பட 15,140 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வுகளை அமைதியாக நடத்தி முடிக்க, 30 சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், அந்தந்த மாவட்டங்களில் மேற்பார்வை பணிகளில் ஈடுபடுத்தப் படுகின்றனர்.

தேர்வை சுமுகமாக நடத்த, 6,402 முதன்மை கண்காணிப்பாளர்களும், 937 கூடுதல் கண்காணிப்பாளர்களும், 94,880 ஆசிரியர்களும், தேர்வு பணிகளில்
அமர்த்தப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் முறைகேடுகளை கண்டுபிடிக்க, 1,700 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் இடம் பெற்றுள்ள 8,500 ஆசிரியர்களும் தேர்வு அறைகளில் திடீர் சோதனை நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க, மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆள் மாறாட்டம், காப்பி அடிப்பது, வினாத்தாளை ‘லீக்’ செய்வது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டால், அந்த மாணவருக்கு 5 ஆண்டுகள் வரை தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு, காலை, 10 மணிக்கு துவங்கவுள்ளது. முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை வாசிக்கலாம். அடுத்த ஐந்து நிமிடங்கள் மாணவர்களின், சுய விவரங்கள், ஹால் டிக்கெட் விவரங்கள் சரிபார்க்கப்படும். காலை, 10:15 முதல், மதியம், 1:15 மணி வரை, மூன்று மணி நேரம், தேர்வு எழுதலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.