கணவனின் கள்ளத் தொடர்பு; வரதட்சிணைக் கொடுமை: ரயிலில் இருந்து அடையாற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

பெண்ணின் உயிரைப் பறித்துள்ளது, கணவனின் கள்ளத் தொடர்பு. ஓடும் மின்சார ரயிலில் இருந்து, போனில் பேசி தாயிடம் தகவல் சொல்லிவிட்டு, சைதைக்கும் கிண்டிக்கும் நடுவில் உள்ள அடையாற்றில் குதித்து இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும், ரூ.20 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து உயிரை மாய்த்துக் கொண்ட அந்தப் பெண், பல உயிர்களைக் காப்பாற்றும் நர்ஸ்ஸாகப் பணி புரிந்தவர் என்பது சோகம்.

சென்னையில் பாரிமுனை ஜார்ஜ் டவுன் பிடாரியார் கோவில் தெருவைச் சேர்ந்த கீதா செல்வரங்கம் தம்பதியின் மகள் ஜீவிதா. 25 வயதான இவர், நர்சிங் கோர்ஸ் முடித்து அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 2016 பிப்ரவரி 11-ம் தேதி ஆவடி சேக்காட்டைச் சேர்ந்த முரளி என்பவரின் மகன் ரோஸ் என்பவருடன் திருமணம் ஆனது. சாப்ட்வேர் இன்ஜினியரான ரோஸ் சிஇஸ் இன்போடெக் என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு வைசாலி என்ற ஒரு வயதுப் பெண் குழந்தை உள்ளார்.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

திருமணம் ஆகிச் சென்றதில் இருந்து புகுந்த வீட்டில் நாள் தோறும் கொடுமையை அனுபவித்து வந்துள்ளார் ஜீவிதா. கணவன் வீட்டாரின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்தது. கணவருடன் தகராறு, கணவர் ரோஸ், மாமனார் முரளி, மாமியார் சாந்தலட்சுமி, நாத்தனார் சுமதி, சுமதியின் கணவர் நாகேஷ் என சூழ்ந்துகொண்டு வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளனர். இவற்றையெல்லாம் சகித்து வந்த ஜீவிதா, அவரது கணவனின் அலுவலகத்தில் உடன் பணியாற்றும் ஒரு பெண்ணுடன் கணவனுக்கு கள்ளத்தொடர்பு இருந்ததைக் கண்டு துடித்துப் போனார்.

கணவன் தொடர்பு குறித்து விசாரித்தால், தினமும் வீட்டில் ரகளை என்று இருந்துள்ளது. மாமனார் வங்கி ஏடிஎம் கார்டை வாங்கி வைத்துக் கொண்டு, ஜீவிதாவின் மாத சம்பளத்தை அவர்களே எடுத்துக் கொள்வார்கள். மனதாலும் உடலாலும் கடுமையாக பாதிக்கப்பட்ட ஜீவிதா, கருத்தரித்த போது, 20 லட்சம் ரூபாய் பணத்துடன் வா. இல்லையென்றால் செத்துப்போ என தரக்குறைவாக பேசி பலர் முன்னிலையில் அவமானப்படுத்தியுள்ளார் ரோஸ்.

கணவனின் செயலில் மனம் உடைந்த ஜீவிதா கடந்த 3ஆம் தேதி அன்று சனிக்கிழமை மதியம் தாம்பரத்தில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார ரயிலில் ஏறினார். தன் அம்மாவிடம் போன் செய்து பேசிக் கொண்டே சென்ற ஜீவிதா, தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறினார். தன்னுடைய குழந்தையைப் பார்த்துக் கொள்ளும்படி அம்மாவிடம் கூறிவிட்டு, போனை சுவிட்ச் ஆஃப் செய்து, கிண்டி- மாம்பலம் இடையே அடையாறு ஆற்றின் மேல் ரயில் சென்று கொண்டிருந்த போது ஆற்றில் குதித்துள்ளார். அதைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சியடைந்து கத்தியுள்ளனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

பின்னர், மாம்பலம் ரயில்வே போலீசார் ஜீவிதாவின் உடலை அடையாற்றில் இருந்து மீட்டு, ஜீவிதாவின் பெற்றோருக்கு போன் செய்து தகவல் கூறினர். இதனிடையே ஜீவிதாவின் தாய் கீதா சென்னை மாம்பலம் ரயில்வே போலீசில் மகளின் தற்கொலைக்கான காரணம் குறித்து புகார் அளித்தார். மகளின் சாவுக்கு காரணமான அவரது கணவர் ரோஸ், மாமனார் முரளி, மாமியார் சாந்தலட்சுமி, கணவன் சகோதரி சுமதி, அவரது கணவர் நாகேஷ் ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கூறியுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜீவிதாவின் மகள் வைசாலிக்கு நேற்று மார்ச் 5 ஆம் தேதிதான் ஒரு வயது நிறைகிறது. தன் மகளின் முதல் பிறந்த நாளில் அவர் உயிருடன் இல்லை. வரதட்சணை கொடுமை, கணவரின் கள்ளத்தொடர்பு, புகுந்த வீட்டில் கொடுமைப் படுத்திய ரணம் என எல்லாமாகச் சேர்ந்து கொண்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது தங்கையின் இந்த சோக முடிவு குறித்து பதிவு செய்துள்ள ஜீவிதாவின் சகோதரர் மகேஷ் குமார், குடும்ப கௌரவத்திற்காக பெண்களே கோழையாக இருக்காதீர்கள் என்று சோகத்துடன் கூறியுள்ளார்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.