சென்னையில் மேலும் ஓர் அதிர்ச்சி: துப்பாக்கியால் சுட்டு எஸ்.ஐ தற்கொலை

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் இரவு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் சதீஷ் குமார்(33) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்

si suicide ayanavaram station - 2026சென்னை அயனாவரம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக சதீஷ் என்பவர் பணியாற்றி வந்தார். நேற்று இவர் பணி முடிந்து கீழ்ப்பாக்கம் அருகே உள்ள டிபி சத்திரம் பகுதியில் காவலர் குடியிருப்பில் உள்ள தனது அறைக்குச் சென்றுள்ளார். பின்னர் நள்ளிரவு மீண்டும் காவல் நிலையம் திரும்பிய சதீஷ், தனக்கு பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டிருப்பதாக, இரவுப் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சிரஞ்சீவியிடம் கூறியுள்ளார்.

தொடர்ந்து அங்கிருந்த ஆவணத்தில் கையெழுத்திட்டு தனக்கு வழங்கப்பட்டிருந்த 9 எம்எம் வகை கைத்துப்பாக்கியை வாங்கி காவல்நிலைய வாசலுக்குச் சென்ற அவர் யாரும் எதிர்பாராத வகையில் நெற்றியில் துப்பாக்கியை வைத்து தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதற்கு முன்பாக அவர் தனது மேசையில் தனது தற்கொலைக்கு யாரும் காரணமல்ல என்று எழுதி வைத்துள்ளார். சதீஷ் தற்கொலை செய்து கொள்ளும் காட்சிகள் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. உதவி ஆய்வாளர் சதீஷ் தற்கொலை குறித்து தகவல் அறிந்த சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

தற்கொலை செய்து கொண்ட சதீஷ், கடந்த 2011ம் ஆண்டு உதவி ஆய்வாளர் பணிக்கு நேரடியாக தேர்வானவர். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள மேலையூர் கிராமத்தைச் சேர்ந்த அவருக்கு, தற்போதுதான் பெண் பார்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 4ம் தேதியன்று, ஜெயலலிதா நினைவிடத்தில் பணியாற்றிய ஆயுதப்படை காவலர் அருண் ராஜ் என்பரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். காவல்துறையைச் சேர்ந்த இருவர் ஒரே வாரத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.