நெல்லை மாவட்டம் திருக்குற்றாலம் பிரதான அருவியில் இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் ஆண்களை விட பெண்கள் கூட்டம் அதிகம் இருந்தது. ஆண்கள் பகுதியில் காலை நேரத்தில் அவ்வளவாக கூட்டம் இல்லை. ஆனால் பெண்கள் பகுதியில் நீண்ட வரிசை காத்திருந்தது.
அருவிக்கு, குற்றால நாதர் கோயில் பகுதியில் இருந்து செல்லும் பாலத்தில் நின்ற பெண்கள் வரிசை, வாகன நிறுத்துமிடம் வரை சென்றது. தாங்கள் வெகு நேரம் காத்திருப்பதாக பெண்கள் குறைப்பட்டுக் கொண்டனர். பெரும்பாலும் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் தங்கும் விடுதிகளில் இருந்ததாகவும், அப்போது தங்களுடன் வந்த ஆண்கள் இரவிலேயே அருவிக்குச் சென்று குளித்துவிட்டு வந்ததாகவும், தங்களால் காலை நேரத்தில்தான் வர முடிந்தது என்றும் சில பெண்கள் கூறினர்.
இதனிடையே, பெண்கள் வரிசைப் பாதுகாப்புக்கு ஒரே ஒரு ஆண் காவலரும் மூன்று பெண் காவலர்களும் மட்டுமே இருந்தனர். ஆண்கள் பகுதியில் அருவிக் கரைப் பகுதியில் மொத்தமாக நின்றிருந்தவர்களை விரட்டி விடுவதிலேயே கவனமாக இருந்த காவலர்கள், பின்னர் ஆண்களையும் வரிசையில் வரச் செய்தனர்.
இருப்பினும், அருவிப் பகுதியில் இருக்கும் பிடி கம்பிகளுக்கு இடையே மொத்தமாக ஆண்கள் முண்டியடித்தபடி குளிக்க நெருங்க தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாதுகாப்பு வளைவின் மேல் நின்ற காவலர், பிரம்புக் கம்பால் அருவியில் வெகு நேரம் குளிக்கவிடாதபடி சிலரைத் தள்ளி விட்டுக் கொண்டிருந்தாரே தவிர, வரிசையாக வரச் செய்ய வேறு எவரும் வழிகாட்டவில்லை.
தண்ணீர் மிதமாக விழும்போது, ஆண்கள் பகுதியில் அருவி மூன்று பகுதிகளாகப் பரந்து விழும். அந்நேரத்தில், அருவி நீர் விழும் பாறையை ஒட்டி சுற்றுலாப் பயணிகளை வரிசையாக வரச் செய்து, அருவியின் பாதுகாப்பு வளைவைப் பிரித்தபடி அமைந்திருக்கும் சுவர் வரை ஒரு வளைவாக வந்து திரும்புமாறு வரிசையை ஒழுங்குபடுத்தினால், குளிக்க வரும் அனைவருமே குற்றாலத்தில் குளித்த அனுபவத்தைப் பெற வாய்ப்பு ஏற்படும்! காவல்துறையினர் இதை கவனத்தில் கொள்ளலாம்.