யுடியூப் மூலம் பிரசவம்: மனைவி உயிரிழப்புக்குக் காரணமான கணவன் கைது!

Published:

krithika dead house delivery - 2026

திருப்பூர்: இயற்கை முறை மருத்துவம் என யுடீயூப் சேனல் மூலம் youtube வீடியோவைப் பார்த்தே பிரசவத்தை மேற்கொண்ட கிருத்திகா என்ற ஆசிரியை உயிரிழந்த விவகாரத்தில், நல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கணவர் கார்த்திகேயனை கைது செய்தனர். மேலும் இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் வசிக்கும் கார்த்திகேயன் பனியன் நிறுவனத்தில் உயர் பதவியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிருத்திகா, அதே பகுதியில் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

வசதியான வாழ்க்கை மேற்கொண்ட இவர்களுக்கு ஹிமானி என்ற 5 வயது பெண் குழந்தை உள்ளது. இந்தத் தம்பதி இயற்கை மருத்துவத்தின் மீது  ஆர்வம் கொண்டிருந்தனர்.

கார்த்திகேயனின் நண்பர் பிரவீன் மற்றும் அவரது மனைவி லாவண்யாவின் பழக்கத்தால், கிருத்திகாவுக்கு இயற்கை மருத்துவம் மீது மேலும் மோகம் ஏற்பட்டது.  லாவண்யா தம்பதியின் மகள் இயல்மதி சுகப் பிரசவத்தில் வீட்டிலேயே பிறந்ததாகவும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் லாவண்யா தம்பதி தெரிவித்துள்ளனர். இதனால் தனக்கும் சுகப் பிரசவம் வீட்டிலேயே நடக்க வேண்டும் என ஆசைப்பட்டார் கிருத்திகா.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

இதனை அடுத்து கார்த்திகேயன் கிருத்திகா தம்பதியினர் இருவரும் பேசி வீட்டிலேயே சுகப் பிரசவம் மேற்கொள்வது என முடிவு செய்தனர். இருவரும் யூ டியூப் மூலமாக பல்வேறு சுகப் பிரசவம் குறித்த வீடியோக்களை பார்த்து, இரண்டாவது குழந்தை உருவானது முதல்  மருத்துவமனைக்கு செல்லாமல், மருந்துகளையும் தவிர்த்து வந்துள்ளனர். ஆனால்,  கிருத்திகாவின் தந்தை சுப்ரமணி பலமுறை எச்சரிக்கை செய்தும், வற்புறுத்தியும் கூட கார்த்திகேயன் தம்பதி கட்டாயமாக மறுத்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி கிருத்திகாவிற்கு வலி ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து உடனே லாவண்யாவிற்கு அழைப்பு விடுத்தார் கிருத்திகா. லாவண்யா பிரவின் தம்பதி மற்றும் கார்த்திகேயன், கார்த்திகேயன் தாயார் காந்திமதி ஆகியோர் கிருத்திகாவிற்கு பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது கிருத்திகாவிற்க்கு பெண் குழந்தை நல்ல விதமாக பிறந்துள்ளது; எனினும் நஞ்சுக் கொடி வெளியே வராததால் கிருத்திகா மயக்கமடைந்துள்ளார்.

இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருத்திகாவை திருப்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கே அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

இதனையடுத்து சுகாதாரத் துறை சார்பில் முறையான பயிற்சி இன்றி பிரசவம் பார்த்து உயிரிழப்பு ஏற்படுத்தியதாக, இதற்குத் துணையாக இருந்த கார்த்திகேயன் நண்பர் பிரவின் அவரது மனைவி லாவண்யா மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த ஊரகக் காவல் துறையினர் கார்த்திகேயனை அழைத்து விசாரித்து அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 304/A என்ற பிரிவில் அஜாக்கிரதையாக செயல்பட்டு உயிரிழப்பு ஏற்படுத்திய வழக்கில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் உதவியாக இருந்த நண்பர் பிரவீன் மற்றும் அவரது மனைவி லாவண்யா இருவரையும் தேடி வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img