Madras High Court in Chennai - 2026

சென்னை: மெரினா கடற்கரையில் தலைவர்களின் உடல்களை அடக்கம் செய்து நினைவிடம் அமைக்கத் தடை கோரிய மனுவை மனுதாரர் வாபஸ் பெற்றார். இதனால் வழக்கைத் தள்ளுபடி செய்ததாக அறிவித்தது சென்னை உயர் நீதிமன்றம்.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த வி.காந்திமதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் இறந்தவர்களின் உடலை பொது இடத்தில், குறிப்பாக மெரினா கடற்கரையில் அனுமதி பெற்றோ, பெறாமலோ புதைப்பது, எரிப்பது கூடாது என்று உத்தரவிட கோரியிருந்தார்.

அந்த மனுவில், மெரினா கடற்கரை தற்போது இடுகாடாக மாறி வருவதால், சுற்றுச் சூழல் கடுமையாக பாதிக்கப்படும். குடியிருப்புப் பகுதிகளிலும், அதிக மக்கள் நடமாட்டம் உள்ள மெரினா கடற்கரையில் உடல்களைப் புதைப்பது பொதுமக்களுக்கு மிகப்பெரிய இடையூறை ஏற்படுத்துகிறது. உடல்களைப் புதைப்பதற்கும், எரிப்பதற்கும் மாநகராட்சி சட்டவிதிகளின்படி, சென்னை மாநகராட்சி ஆணையர் தான் அனுமதி வழங்கவேண்டும். ஏற்கெனவே, மெரினா கடற்கரையில் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது உடலைப் புதைத்து நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் எல்லோரும் மறையும் போது முதல்வராக இருந்தவர்கள். இதற்கு மேலும், அங்கு வேறு யாராவது உடலை அடக்கம் செய்ய மாநகராட்சி ஆணையர் அனுமதி வழங்கினால், கண்டிப்பாக கடற்கரையில் உள்ள சுற்றுச்சூழலை அது அழித்து விடும்.

எனவே, சுடுகாடு அல்லாத பிற பகுதிகளில், உடல்களைப் புதைக்க வேண்டும் என்றால் அதற்கு விதிமுறைகளை உருவாக்கும்படி தலைமைச் செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு கடந்த ஜூலை 30ஆம் தேதி மனு அனுப்பினேன். ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே, பொது இடங்களில் உடல்களைப் புதைப்பதற்கும், எரிப்பதற்கும் விதிகளை உருவாக்க தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிட வேண்டும்.

இனி மெரினா கடற்கரையில் யாருடைய உடலையும் புதைக்கவோ, எரிக்கவோ அனுமதிக்க மாநகராட்சி ஆணையருக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

இந்த மனு இன்று தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹுலுவாடி ஜி. ரமேஷ், நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது.

ஆனால் வழக்கு விசாரணை தொடங்கும் முன்பே முறையீட்டு நேரத்தில் வழக்கறிஞர் காந்திமதி ஆஜராகி, சில காரணங்களுக்காக இந்த மனுவை வாபஸ் பெறுவதாகவும், அதற்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்றும் கோரினார். அவரது கோரிக்கையை ஏற்று, அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending