பொறியியல் படிப்புக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிப்பு?

பொறியியல் படிப்புக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.  இதற்கான ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழகம் துரிதமாக மேற்கொண்டு வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிளஸ்-டூ தேர்வு மார்ச் 31-ம் தேதி முடிவடைந்தது. தற்போது விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 12-ம் வகுப்பு முடிக்கும் மாணவ,மாணவிகளில் பெரும்பாலானோர் பொறியியல் படிப்பில் சேர விரும்புகிறார்கள். தமிழகத்தில் 570-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில் உள்ள 2 லட்சம் பிஇ, மற்றும் பிடெக் இடங்களில் சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் பொது கலந்தாய்வு மூலமாக நிரப்பப்படும். இந்த கலந்தாய்வை ஆண்டுதோறும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. 2 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்ப படிவங்களை அச்சடிக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.  இந்த ஆண்டு ஆன் லைனில் விண்ணப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டிருந்தது. ஆனால், பெரும்பான்மையான கிராமப்புற மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வரும் அச்சடிக்கப்பட்ட விண்ணப்ப முறையை பின்பற்றுமாறு அரசு அறி வுறுத்தியது. எனவே, விண்ணப்பிக்கும் முறையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. பிளஸ் டூ தேர்வு முடிவு மே மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு முடிவு வெளியாவதற்கு 2 அல்லது 3 நாட்களுக்கு முன்னர் பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.