November 30, 2021, 2:41 am
More

  மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் பிரச்னத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

  கோயிலில் பரிகார பூஜைகளான மகா கணபதி ஹோமம், மகா சுதர்சன ஹோமம், தில ஹோமம் மற்றும் பகவதி பூஜைகள் செய்ய வேண்டும்.

  mandaikkadu bhagavathi temple devaprasnam
  mandaikkadu bhagavathi temple devaprasnam

  கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் சுயம்பு புற்று வடிவிலானது. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோயில் பெண்களின் சபரி மலை என்றழைக்கப்படுகிறது. கடந்த 2ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் கோயிலின் கருவறை மேற்கூரை முழுவதும் எரிந்து நாசமானது.

  இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதனால், கோயிலில் இரும்பிலான தற்காலிக மேற்கூரை அமைக்கும் பணிகள் பத்மநாபபுரம் உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் மேற்பார்வையில் முழு வீச்சில் நடந்து வருகிறது.

  இந்நிலையில் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று கோயிலில் தேவ பிரச்னம் பார்ப்பதற்கு குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்தது. கேரள மாநிலம் வயநாடைச் சேர்ந்த சோதிடர் ஸ்ரீநாத் மற்றும் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் முன்னாள் மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி ஆகியோர் தேவ பிரச்னம் பார்க்க தேர்வு செய்யப்பட்டனர்.

  mandaikkadu bhagavathi temple devaprasnam2
  mandaikkadu bhagavathi temple devaprasnam2

  இவர்கள் நேற்று காலை மண்டைக்காடு கோயில் வந்து தேவ பிரச்னம் பார்க்கும் நிகழ்ச்சியை தொடங்கினர். முன்னதாக பாறசாலை ராஜேஷ் போற்றி சிறப்பு கணபதி ஹோமம் நடத்தினார்.

  இன்று (செவ்வாய்க் கிழமை) 2 வது நாளாக நடந்த தேவ பிரச்னம் பார்க்கும் நிகழ்ச்சியில் சில தகவல்கள் வெளிப்பட்டன.

  அதில், திருக்கோவிலில் அம்மனின் புற்று வளர்ந்து வருவதால் மூலஸ்தானத்தை பெரிதாகக் கட்டவேண்டும்! கோவில் முழுமையாக வாஸ்து பார்த்து புனரமைக்கப் படவேண்டும்! திருக்கோவிலில் பூஜைகள் ஒழுங்காக நடக்க வில்லை! மந்திரங்கள் சொல்லி பூஜை செய்யப் படவில்லை! அம்மனுக்கு படைக்கப்படும் நைவேத்யம் சுத்தமில்லை! மடப்பள்ளி சுத்தமில்லை! மடப்பள்ளியில் உணவுப்பொ ருட்கள் செய்து அம்மனுக்கு படைக்காமலே வியாபாரம் செய்கிறார்கள்! கோவிலை வியாபார ஸ்தலமாக மாற்றிவிட்டனர்!

  கோவிலுக்கு வரும் பட்டுகள் அம்மனுக்கு சாத்தாமலே வியாபாரம் நடக்கிறது! தங்கம் பணம் மோசடி நடக்கிறது! அம்மனுக்கு, தினசரி பிராம்மணர் பூஜை பண்ணுவதில்தான் இஷ்டம்!
  கோயிலில் திருவிழா நடத்துவது பரிவார மூர்த்திகளை சந்தோசப்படுத்தவும், பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பதற்கும்தான். ஆனால் இது முறையாக செய்யப்பட வில்லை.

  திருக்கொடி கம்பம் பிரதிஷ்டை ஆசாரமாகவும், முறையாகவும் செய்யப்பட வில்லை. அன்னை சாந்த சொரூபமாக இருப்பதால் யாரையும் தண்டிக்கவில்லை. தங்கத் தேர் கோயிலுக்கு கிடைத்தும் முறையாக பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.

  மாதம் தோறும் பௌர்ணமி நாளில் தங்கதேர் அறநிலையத் துறை சார்பாக கட்டணம் இன்றி இழுக்கப்பட வேண்டும்! கோயிலுக்குள் 2 கிணறுகள் மூடப்பட்டுள்ளன. கிணற்றைத் தோண்டி சூரிய ஒளி விழும்படி அமைக்க வேண்டும். அந்தக் கிணற்றிலிருந்துதான் கோயில் பயன்பாட்டிற்கு நீர் எடுக்க வேண்டும்.

  கோயிலுக்கு சொந்தமான குளம் பாழ்பட்டு உள்ளது. அதை சீரமைத்து அதில் மேல் சாந்திகள் குளித்துவிட்டுதான் கோயில் பூஜைகளை செய்ய வேண்டும். கோயில் வளாகத்தில் மேல் சாந்திகளுக்கு கழிவறையுடன் தனி அறை வசதி வேண்டும். பக்தர்கள் உள் பிராகாரத்தினுள் செல்லக்கூடாது.

  இத்திருக்கோயிலைப் பொறுத்த அளவில் பக்தர்கள் எங்கு நின்று தரிசித்தாலும் அன்னையின் அருள் கிடைக்கும். கோயிலை புதிதாகக் கட்ட வேண்டும். அடிப்பகுதியை 5 அடுக்குடன் கட்ட வேண்டும்.

  அம்மனுக்கு நைவேத்யம் கொண்டு செல்லும்போது சங்கு மற்றும் நாகஸ்வரம் ஒலிக்கப்பட வேண்டும். ஆயில்யம் நட்சத்திரத்தன்று நாகருக்கு சிறப்பு வழிபாடு நடத்த வேண்டும். மாசிக் கொடையின்போது திருவனந்தபுரம் அரண்மனை ராணிக்கு பட்டுடன் அழைப்பு விடுக்கப்பட வேண்டும்.

  கொடையின்போது அம்மன் கதையைச் சொல்லும் வில்லுப் பாட்டு, புல்லுவன் பாட்டு பாட வேண்டும் .இது முன்பு இருந்தது. இப்போது இல்லை. அதை மீண்டும் கொண்டு வர வேண்டும்.

  கோயிலில் முன்பு இசக்கி, பூதத்தான், பைரவர் ஆகியோருக்கு தனி சந்நிதி இருந்தது. இப்போது பைரவர் சந்நிதி மட்டும் உள்ளது.இசக்கி, பூதத்தான் சந்நிதிகள் மீண்டும் அமைக்கப்பட வேண்டும்.

  கோயில் முன்பு பக்தர்களை ஒழுங்குபடுத்தும் தடுப்பு வேலியை மாற்றியமைக்க வேண்டும். அம்மனின் பெயரைச் சொல்லி பக்தர் சங்கத்தினர் பணம் வசூல் செய்கின்றனர். இதை நிறுத்த வேண்டும்.

  அபிஷேக நீர் வழிந்தோட வடிகால் வசதி செய்ய வேண்டும். மூலஸ்தானத்தில் கோயில் பூசாரிகளைத் தவிர வெளி பூசாரிகள் புழங்கக் கூடாது.

  யானை ஊர்வலத்தை தொடர்ந்து நடத்த வேண்டும். யானை மீது கொண்டு வரப்படும் சந்தனம் சுத்தமானதாக இருக்க வேண்டும். முதல் பரிகாரமாக உடனே மிருத்யுஞ்சய ஹோமம் நடத்த வேண்டும். 2வதாக திருவனந்தபும் அரண்மனை ராணிக்கு பட்டு கொண்டு கொடுத்து பரிகார பூஜை செய்ய உத்தரவு பெற்று, திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில், திருவட்டாறு ஆதி கேசவப் பெருமாள் கோயில், நாகர்கோவில் நாகராஜ கோயில், மண்டைக்காடு பால்குளம் ஸ்ரீ கண்டன் சாஸ்தா கோயில் மற்றும் கோயில் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள அனைத்து கிராம கோயில்களுக்கும் பிடி பணம் கொடுத்து பூஜைகள் செய்ய வேண்டும்.

  அதன் பின்னர் கோயிலில் பரிகார பூஜைகளான மகா கணபதி ஹோமம், மகா சுதர்சன ஹோமம், தில ஹோமம் மற்றும் பகவதி பூஜைகள் செய்ய வேண்டும். இந்த பரிகார பூஜைகளை உடனே செய்ய வேண்டும் என பிரச்னத்தில் தெரிவிக்கப்பட்டது.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,106FansLike
  369FollowersFollow
  46FollowersFollow
  74FollowersFollow
  1,756FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-