நெல்லை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பு அலுவலர் அபுபக்கர்சித்திக் வெளியிட்டுள்ள செய்தி: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர் உள்பட அனைத்து இன பதிவுதாரர்களும் விண்ணப்பிக்கலாம். 9ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னர் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள், பள்ளியிறுதி வகுப்பு, மேல்நிலைக்கல்வி, பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கு 45 வயதும் மற்றவர்களுக்கு 40 வயதும் பூர்த்தி அடைந்திருக்கக்கூடாது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50ஆயிரத்துக்கு மேல் இருக்கக் கூடாது. தகுதி உடைய மனுதாரர்கள் தங்களது அசல் கல்விச்சான்றிதழ்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து உதவித்தொகைக்கான விண்ணப்பத்தைப் பெற்று மே 31ம் தேதிக்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஏற்கெனவே உதவித்தொகை பெற்று வருவோர், தொடர்ந்து அதனைப் பெற சுயஉறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள்: மாற்றுத் திறனாளிகள் தங்கள் கல்வித் தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும். அசல் கல்விச் சான்றிதழ்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அடையாள அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு நீக்கப்பட்டதால் வருவாய்த் துறை சான்று தேவையில்லை. ஏற்கெனவே விண்ணப்பம் பெற்றிருந்தால் வங்கிக் கணக்குப் புத்தகம், அசல் கல்விச் சான்றிதழ்கள், வருவாய்த்துறை சான்று ஆகியவற்றுடன் மே 31ம்தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்கலாம். உதவித்தொகை பெறுவதன் மூலம் வேலைவாய்ப்பு பதிவு எண் எந்த விதத்திலும் பாதிக்காது. ரத்து செய்யப்பட மாட்டாது. ஏற்கெனவே உதவித்தொகை பெற்றிருந்தால் மீண்டும் விண்ணப்பிக்க அவசியமில்லை.