ஸ்ரீபெரும்புதூர் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 6 பேர் உயிரிழப்பு!

Published:

died - 2026

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 6 பேர் உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நெமிலியில் உள்ள விநாயகா நகரில் கிருஷ்ணமூர்த்தி என்பவரது வீட்டின் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டது. அப்போது, கழிவுநீர் தொட்டியின் அடியில் தேங்கிய கழிவை அகற்றுவதற்காக தொட்டியில் இறங்கிய கிருஷ்ணமூர்த்தி மயங்கினார்.

இதையடுத்து, அவரைக் காப்பாற்ற உறவினர்களான கண்ணன், கார்த்தி ஆகியோர் உதவிக்கு வந்துள்ளனர். ஆனால் அவர்களும் மயங்கினர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பரமசிவம், லட்சுமிகாந்தன் ஆகியோர் தொட்டியில் உள்ள 3 பேரையும் காப்பாற்ற முயன்றனர். அப்போது அவர்களும் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

கழிவுநீர்த் தொட்டியில் இறங்கிய சுதாபாய் என்ற பெண்ணும் உயிரிழந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிருஷ்ணமூர்த்தியின் மனைவி, காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், பாதுகாப்பு கவசங்களோடு கழிவு நீர்த் தொட்டியில் இறங்கி, விஷவாயு தாக்கியவர்களை வெளியே கொண்டு வந்தனர்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

விஷவாயு தாக்கம் கடுமையாக இருந்ததால், கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கிய 6 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விஷவாயு தாக்கம் அதிகமாக இருந்ததால், கழிவுநீர்த் தொட்டி மூடப்பட்டது. மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இயந்திரங்கள் அல்லாது மனிதர்களைக் கொண்டு கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தது குறித்து கிருஷ்ண மூர்த்தியின் மனைவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெகு நாட்களாக சுத்தம் செய்யப்படாத கழிவுநீர்த் தொட்டிக்குள் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் துப்புரவு பணியில் ஈடுபட்டதே 6 பேரும் உயிரிழந்ததற்கு காரணம் என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 3 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related articles

Recent articles

spot_img