கொள்ளையனிடம் கூட்டுவைத்து நகைக் கொள்ளை! தனிப்படை போலீஸார் மீது விசாரணை!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்

Burglar theft house - 2026

சென்னையில் கொள்ளையனுடன் கூட்டுவைத்துக் கொண்டு, கொள்ளை அடிக்கப் பட்ட நகைகளை தாங்களே கொள்ளை அடித்துக் கொண்ட தனிப்படை போலீசார் 3 பேர் தற்போது விசாரிக்கப் பட்டு வருகின்றனர். வேலியே பயிரை மேய்ந்த இந்தச் சம்பவம் குறித்து கூறப் படுவதாவது…

சென்னை நகரில் ஆளில்லாத வீட்டினுள் புகுந்து, நகைகளைக் கொள்ளை அடித்த ஆரிப் பிலிப் என்ற கொள்ளையனை அசோக் நகர் போலீசார் கைது செய்தனர். அவனிடம் கொள்ளை அடித்த நகைகள் குறித்து போலீஸார் விசாரித்த போது, ஒரு நகை வியாபாரியின் பெயரைச் சொல்லி, அவரிடம் விற்றுள்ளதாகக் கூறியுள்ளான்.

கொள்ளையன் கூறிய அடையாளத்தை வைத்துக் கொண்டு அந்தக் கடைக்குச் சென்றனர் போலீஸார். அப்போது ஆரிப் பிலிப் விற்ற திருட்டு நகைகள் குறித்து போலீஸார் விசாரித்துள்ளனர். தொடர்ந்து, அந்த நகைகளைத் திருப்பிக் கொடுக்குமாறு அவரிடம் வற்புறுத்தியுள்ளனர். ஆனால் அந்த வியாபாரியோ இதே போன்று விசாரணை செய்த போலீஸார், அந்த நகைகளை வாங்கிச் சென்றுவிட்டதாகக் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீஸார், ஆரிப் பிலிப்பை இதற்கு முன்னர் பிடித்தது எந்த காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் என்று அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். அதற்கு அந்தக் கொள்ளையன் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த தனிப்படை போலீசார் தன்னைப் பிடித்ததாகக் கூறியுள்ளான்.

இந்நிலையில், அவனிடம் நடத்திய விசாரணையில், கொள்ளையனுக்கு உடந்தையாக தனிப்படை போலீசார் செயல்பட்டது தெரியவந்தது. நகைகளை விற்ற கடை குறித்து தனிப் படை போலீசார் தன்னிடம் கேட்டதாகவும், அவர்களிடம் அந்தக் கடையை தாம் காட்டியதாகவும் கூறினான் ஆரிப் பிலிப்.

இதை அடுத்து அந்தக் கடைக்குச் சென்ற தனிப்படையினர், திருட்டு நகைகள் எனக் கூறி அவற்றை வாங்கிக் கொண்டு, ஒரு சிறு பங்கை தனக்குக் கொடுத்துவிட்டு மீதியை தாங்களே வைத்துக் கொண்டதாகவும், இந்த டீலிங் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என்றும், போலீசிடம் சிக்காமல் இருக்குமாறும் தனிப்படையினர் அறிவுரை வழங்கியதாகவும் கூறியுள்ளான்.

இதை அடுத்து, தனிப்படை போலீஸாரின் திருட்டுத் தனம் தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து, கோடம்பாக்கம் காவல் நிலைய தனிப்படை போலீசார் ராம்குமார், சிவக்கொழுந்து, தியாகராஜன் மூவரும் உயர் அதிகாரிகளின் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். இந்த விசாரணையில் குற்றம் நிரூபிக்கப் பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை உறுதி என்கின்றனர் போலீஸார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.