ராஜேந்திர பாலாஜி பதவி நீக்கப்பட வேண்டும் : மக்கள் நீதி மய்யம்

Published:

kamal torch2 - 2026

அரவக்குறிச்சி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமியர்கள் நிறைந்த பள்ளப்பட்டியில் பேசிய மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் மானசீகக் கொள்ளுப்பேரன். அந்தக் கொலைக்குக் கேள்வி கேட்க வந்திருக்கிறேன் என்று பேசினார். அவரது பேச்சு தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு உடனே பலரும் கண்டனமும் பதிலடியும் கொடுத்தனர்.

இந்நிலையில், கமல் கருத்து குறித்து தனது கருத்தைப் பதிவு செய்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ’’கமலுக்கு நாக்கில் சனி. இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிக்குச் சென்று இந்துதான் முதல் தீவிரவாதி என்று பேசியுள்ளார். பயங்கரவாதத்திற்கு மதமெல்லாம் கிடையாது. தீவிரவாதியை தீவிரவாதி என்றுதான் கூறவேண்டும். மதத்தை வைத்து அல்ல. இந்த கருத்துக்கு கமலின் நாக்கை அறுக்கத்தான் போகிறார்கள்’’ என்று கூறினார். அவரது பேச்சு அடுத்த சர்ச்சையை கிளப்பியது.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

இதை அடுத்து, ராஜேந்திர பாலாஜி பேசியதற்கு  எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப் பட்டிருக்கிறது.

அதில் ’’அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள், அரசியல் மாண்பும், தனி மனித கண்ணியமும் துளியுமின்றி, சட்ட விரோதமாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறுவது கடுமையான கண்டனத்துக்குரியது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராகவும், பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சி துறை அமைச்சராகவும் இருக்கும் திரு.ராஜேந்திர பாலாஜி அவர்கள், தன் பதவி பிரமாணத்தின் போது எடுத்த உறுதிமொழியை மீறும் வகையில் நடந்துகொண்டதற்காக, அவர் வகிக்கும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்’’ என்று கூறப் பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் சார்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

makkalneethimaiyam - 2026

Related articles

Recent articles

spot_img