கோவையில் இரண்டாவது நாளாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

nia office - 2026

கோவையில் 2வது நாளாக 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி உயிர்த்த ஞாயிறு –  ஈஸ்டர் தினத்தன்று, இஸ்லாமிய பயங்கரவாதிகள் கொழும்பு நகரில் சர்ச்சுகள், நட்சத்திர ஓட்டல்களைக் குறிவைத்து, சக்திவாய்ந்த தொடர் தற்கொலை குண்டு வெடிப்புகளை நிகழ்த்தினர்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் 250க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

இலங்கை குண்டுவெடிப்புக்கு காரணமான கும்பலுடன் சமூக வலைத்தளங்களில் கோவையைச் சேர்ந்த சிலர் தொடர்பு கொண்டிருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை – என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்த கோவையைச் சேர்ந்த இஸ்லாமிய அடிப்படைவாத இளைஞர்களைத் தீவிரமாக கண்காணித்து வந்தனர் என்.ஐ.ஏ., அதிகாரிகள்.

nia statement - 2026இந்த நிலையில் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து துணை காவல் அதிகாரி  விக்ரம் தலைமையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் கோவைக்கு காரில் வந்தனர்.

அவர்கள் கோவை மாநகர போலீசாரின் உதவியுடன் 7 குழுக்களாகப் பிரிந்து சென்று நேற்று காலை 5.30 மணி முதல் மாலை 5 மணி வரை கோவையின் பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

கோவை உக்கடம் அன்பு நகரைச் சேர்ந்த முகமது அசாருதீன் (வயது 32), போத்தனூர் சாலை திருமால் நகரை சேர்ந்த அக்ரம் ஜிந்தா (26), தெற்கு உக்கடம் ஷேக் இதயத்துல்லா (38), குனியமுத்தூரைச் சேர்ந்த அபுபக்கர் (29), போத்தனூர் மெயின் ரோடு உம்மர் நகரை சேர்ந்த சதாம் உசேன் (26), தெற்கு உக்கடத்தைச் சேர்ந்த இப்ராகிம் என்கிற ஜாகின் ஷா (28) ஆகிய 6 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

முகமது அசாருதீனை கரும்புக்கடை பகுதியில் அவர் நடத்தி வரும் டிராவல்ஸ் நிறுவனத்துக்கு அழைத்துச் சென்றும் அதிகாரிகள் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர். அவரது அலுவலகத்தில் இருந்து மடிக்கணினி, டைரி, பென்டிரைவ் உள்பட சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இந்தச் சோதனையின்போது ஏர்கன்னில் பயன்படுத்தப்படும் 300 தோட்டாக்கள், 14 செல்போன்கள், 29 சிம் கார்டுகள், 10 பென் டிரைவ்கள், 6 மெமரி கார்டுகள், 4 ஹார்டு டிஸ்குகள், ஒரு இன்டெர்நெட் உபகரணம், 13 சி.டி.க்கள், டி.வி.டி.க்கள் மற்றும் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் நோட்டீசுகள், கையேடுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

6 பேரின் வீடுகள் மற்றும் முகமது அசாருதீன் அலுவலகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட எலெக்டிரானிக் உபகரணங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவர்கள் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் 6 பேரும் கொச்சி என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரிக்கப்படுவார்கள் அல்லது சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்று கூறப் படுகிறது.

நேற்று பரபரப்பை ஏற்படுத்திய இந்த சோதனையைத் தொடர்ந்து, இன்றும் கோவையில் தொடர்ந்து 2வது நாளாக 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சோதனையில் அன்புநகர் ஷாஜகான், கரும்புக்கடை ஷபிபுல்லா, வின்சென்ட் ரோடு முகமது உசேன் ஆகியோரது வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.