இந்து முன்னணி நகரத் தலைவர் மீது கொலைவெறித் தாக்குதல்: ஆலங்குடியில் முழு அடைப்பு; பதற்றம்!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம் திருச்சி லைஃப் ஸ்டைல்

arival attack - 2026

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், இந்து முன்னணி நகரத் தலைவர் முருகானந்தம், அவரது தந்தை மீது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சிலர் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப் படுகிறது. இந்தச் சம்பவத்தில் படுகாயம் அடைந்த முருகானந்தம் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப் பட்டுள்ளார்! இதனால் அங்கே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் நேற்று இரவு 6 பேர் கொண்ட மர்ம கும்பல், வணிக வளாகத்துக்குள் புகுந்து, இந்து முன்னணி நகரத் தலைவர் முருகானந்தம் மற்றும் அவரது தந்தை கணேசன் ஆகியோர்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. இருவருக்கும் அரிவாளால் பல இடங்களில் வெட்டு விழுந்தது. இதில் இருவரும் படுகாயம் அடைந்ததால், பெரும் பதற்றம் ஏற்பட்டது. உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் கடைவீதி பகுதிக்குள் புகுந்து இஸ்லாமியர்களுக்கு சொந்தமான கடைகளை அடித்து நொறுக்கினர்.

வழிபாட்டுத்தலங்கள் மீதும் கற்கள் வீசப் பட்டன. இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதை அடுத்து திருச்சி டிஐஜி பாலகிருஷ்ணன் தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் உட்பட 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அந்தப் பகுதியில் உடனடியாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு, பதற்றம் தணிய பாடுபட்டனர்.

alankudi hm muruganantham - 2026இதனைத் தொடர்ந்து தந்தை, மகனை அரிவாளால் வெட்டியதாக ஆலங்குடியைச் சேர்ந்த முகமதுகனி, முகமது ரியாஸ், முஸ்தபா, ரகுமான், அப்பாஸ் ஆகியோர் மீதும், மேலும் கணேசன், மணிகண்டன் ஆகிய 2 பேர் மீதும் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர். கடைகளை உடைத்து கலவரத்தில் ஈடுபட்டதாக, ராஜேஷ் கண்ணன், ஜெயராமன் விக்னேஷ், சிவா ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தந்தை, மகனைத் தாக்கிய கும்பலில் ஒருவரான முஸ்தபா, ஆலங்குடியிலிருந்து புதுக்கோட்டை நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் பயணித்துள்ளார். செய்தி அறிந்து, வம்பன் காட்டுப் பகுதியில் பேருந்தை வழிமறித்த சிலர், முஸ்தபாவை பேருந்திலிருந்து இறங்கி தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த முஸ்தபாவை காவல் துறையினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில், இன்று எஸ்பி செல்வராஜ் தலைமையில் ஆலங்குடியில் பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, இந்தக் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கைதாகும் வரை, இந்து முன்னணி போராட்டம் நடத்தும் என்று அறிவிக்கப் பட்டுள்ளதால், பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.