images 2023 01 06T153757.569 - 2026

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்..

சென்னை

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து உள்ளாடை மற்றும் முதுகில் மறைத்து கடத்தி வந்த ரூ.1 கோடியே 10 லட்சத்து 84 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 272 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த ஒரு பயணியை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

அதில் எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர் உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.37 லட்சத்து 56 ஆயிரம் மதிப்புள்ள 770 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதேபோல் துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த 2 பயணிகளை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில் 2 பேரின் முதுகில் தங்க பசைகளை டேப் போட்டு ஒட்டி நூதன முறையில் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து ரூ.73 லட்சத்து 28 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 502 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் 3 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 10 லட்சத்து 84 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 272 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

images 2023 01 06T153757.569 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.