திருவண்ணாமலை புனித நீராடலில் குளத்தில் மூழ்கி 4 பேர் பலி

சென்னை

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அய்யங்குளத்தில் நீராடியபோது தண்ணீரில் மூழ்கி 4 பேர் உயிரிழந்தனர்.

மஹோதய புண்ணியகால விழா;

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 30 ஆண்டுகளுக்கு பின்னர் மஹோதய புண்ணியகால விழா, இன்று கொண்டாடப்படுகிறது.

தை அமாவாசை தினத்தில், திருவோணம் நட்சத்திரம் மற்றும் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை ஆகியவை, ஒருசேர அமையும் தினம், மஹோதய புண்ணியகாலமாக கொண்டாடப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாமகம் போல், 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே அமையும், மஹோதய புண்ணியகாலம் என்பதும் மிகவும் விசேஷமானது. இதையொட்டி, அண்ணாமலையார் கோவிலில் நேற்று நள்ளிரவு, 1:00 மணிக்கு, மஹா அபிஷேகம் நடந்தது. அதிகாலை 5 மணி அளவில், சிறப்பு பூஜைகளும் மகா தீபாராதனையும் நடைபெற்றது.

சூரிய உதயத்துக்கு முன், இந்திர தீர்த்தம் எனப்படும் அய்யங்குளத்தில், அண்ணாமலையார் தீர்த்தவாரி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

தீர்த்தவாரியின் போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அய்யங்குளத்தில் நீராட குவிந்தனர். அப்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டது. குளத்தில் இறங்கியவர்கள், ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றுஉள்ளனர். இதனால் முன்னால் சென்றவர்கள் ஆழமான பகுதிக்குள் விழுந்துவிட்டனர். நீச்சல் தெரிந்தவர்கள், நீந்தி கரையை அடைந்துவிட்டனர். ஆனால் நீச்சல் தெரியாதவர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர்.
இச்சம்பவத்தில் தண்ணீரில் மூழ்கி 4 பேர் உயிரிழந்தனர்.

கோயில் குருக்கள் புண்ணியகோடி, சிவா, வெங்கட்ராமனின் சடலம் மீட்கப்பட்டது. தீர்த்தவாரிக்காக சிலையை எடுத்துசென்ற மணிகண்டனும் நீரில் மூழ்கினார். மேலும், யாரேனும் குளத்தில் மூழ்கிஉள்ளனரா என்று தீயணைப்புத் துறையினர் தேடிவருகின்றனர். 4 பேர் உயிரிழந்ததை அடுத்து அய்யங்குளத்தில் பொதுமக்கள் நீராட காவல்துறையினர் அனுமதி மறுத்து உள்ளனர். இதற்கிடையே போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.