
கோவையில் நகை பட்டறையில் யாரும் இல்லாத இரவு நேரத்தில் பட்டறைக்குள் புகுந்த வடமாநில பணியாளர் சுமார் 1,067 கிராம் எடை கொண்டு தங்க கட்டிகள், நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கோவை சண்முக நகர் பகுதியில் தங்க நகைகள் செய்யக்கூடிய பட்டறைகள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றது. இதே பகுதியில் மோகன் குமார் என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக நகை பட்டறை நடத்தி வருகின்றார். இவரது பட்டறையில் 4 பேர் பணி செய்துவந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு நகை பட்டறையில் வேலை முடிந்ததும் கதவை பூட்டிவிட்டு அனைவரும் சென்று உள்ளனர். அப்போது, பட்டறையில் வேலைபார்த்த மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பிரமோத் நோபா என்பவர் பட்டறையின் ஜன்னலை சிறிது திறந்து வைத்து சென்றுள்ளார். பின்னர், யாரும் இல்லாத நேரத்தில் பட்டறைக்குள் புகுந்த பிரமோத், சுமார் 1,067 கிராம் எடை கொண்டு தங்க கட்டிகள், நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இதுகுறித்து பட்டறை உரிமையாளர் மோகன் குமார் வெரைட்டிஹால் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இக்கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து வெரைட்டிஹால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இச் சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது