
ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தமுள்ள 238 வாக்குச்சாவடிகளில்
32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, அவற்றில் பணிபுரிய 260 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்தது.இந்தநிலையில் தேர்தல் நடத்தும் பணிகளை மாவட்ட தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின்போது பணிபுரியும் நுண் பார்வையாளர்களுக்கான முதல்நிலை பணி ஒதுக்கீட்டை தொடங்கி வைத்து மாவட்ட தேர்தல் அலுவலர் எச்.கிருஷ்ணன் உன்னி கூறியுள்ளதாவது,
இடைத்தேர்தல் நன்னடத்தை விதிகளை கண்காணிக்கும் வகையில், பறக்கும் படை மற்றும் நிலைகண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொகை மற்றும் ரூ.10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மதிப்புடைய பரிசுப்பொருட்களை எடுத்துசென்றால், அவை பறிமுதல் செய்யப்படுகின்றன.
பறக்கும் படையினரின் ஆய்வுபணி மற்றும் பறிமுதல் ஆகியவை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படுகிறது. வேட்பாளர்களின் தேர்தல் தொடர்பான விளம்பர செலவினங்களும் கண்காணிக்கப்படுகின்றன.
ஈரோடு கிழக்கு தொகுதியில், மொத்தமுள்ள 238 வாக்குச்சாவடிகளில், 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச் சாவடிகளை கண்காணிக்க, 260 தேர்தல் நுண்பார்வையாளர்கள் கணினி மூலம் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை துவங்கியது வரும் பிப்10ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் மாலை 3மணிக்கு வெளியாகிறது.