790862 tutuicrn lovers death - 2026

மகள், மருமகனை வெட்டிக் கொடூரமாக கொலை செய்த தந்தை..

நெல்லை

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே காதல் திருமணம் செய்த 26 நாளில் புதுமண தம்பதியை வெட்டிக்கொலை செய்த பெண்ணின் தந்தை.மகளின் காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை ஆத்திரத்தில் தனது மகள், மருமகன் என்றும் பாராமல் அவர்களை அரிவாளால் வெட்டிக் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

790862 tutuicrn lovers death - 2026

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள வீரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துகுட்டி ( 50), விவசாயி. இவர் சொந்தமாக வேன், மினி லாரி வைத்து வாடகைக்கு விட்டு வருகிறார். இவருடைய மகள் ரேஷ்மா (20), கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர்களது வீட்டுக்கு எதிர்வீட்டில் வசித்து வந்தவர் வடிவேல் மகன் மாணிக்கராஜ் (26). கூலி தொழிலாளி. ரேஷ்மா, மாணிக்கராஜ் இருவரும் உறவினர்கள். இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களது காதல் விவகாரம் தெரியவரவே, தனது மகளின் காதலுக்கு முத்துகுட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அவர் தனது மகளுக்கு மற்றொரு வரன் பார்த்து திருமண நிச்சயம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந்தேதி காதலர்கள் இருவரும் தங்களது ஊரில் இருந்து வெளியேறி மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று அங்கு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அங்கேயே தங்கியிருந்து வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுமண தம்பதி இருவரும் சொந்த ஊரான வீரப்பட்டி கிராமத்துக்கு வந்தனர். அங்கு மாணிக்கராஜின் வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று மாணிக்கராஜின் தாயார் மகாலட்சுமி, வேலைக்கு சென்று விட்டார். இதனால் புதுமண தம்பதியர் மட்டும் வீட்டில் இருந்தனர். மாலையில் வேலை முடிந்ததும் மகாலட்சுமி வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது அவர் கண்ட காட்சி அதிர்ச்சியில் உறைய வைத்தது. அதாவது வீட்டில் அவரது மகன் மாணிக்கராஜூம், மருமகள் ரேஷ்மாவும் அரிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.

அதை பார்த்து மகாலட்சுமி கதறி அழுதார். இதுகுறித்து உடனடியாக எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகம்மது மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். இதையடுத்து புதுமண தம்பதியின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், மகளின் காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த முத்துகுட்டி ஆத்திரத்தில் தனது மகள், மருமகன் என்றும் பாராமல் அவர்களை அரிவாளால் வெட்டிக் கொடூரமாக கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த பயங்கர இரட்டைக்கொலை குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான முத்துகுட்டியை வலைவீசி தேடி வருகின்றனர். திருமணமான 26 நாளில் புதுமண தம்பதியை பெண்ணின் தந்தையே வெட்டிக்கொன்ற பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.