spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

HomeNewsஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே ...

ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே …

ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே! 

கருப்பூரம் நாறுமோ..? கமலப்பூ நாறுமோ..?
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ..?
மருப் பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்,
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே.

– என்று ஆண்டாள் நாச்சியார் வெண் சங்கமான பாஞ்சஜன்யத்தைப் பார்த்துக் கேட்கும் இந்த இலக்கிய பக்திச் சுவை தனி ரகம்தான்!

andal

——————————————————————————
சங்க காலத் தமிழ் முதல் இந்தக் காலம் வரை… காதலன் அல்லது காதலியின் நினைவில், பிரிவினால் வாடும் இணையர், அவர்கள் பயன்படுத்திய பொருள்களைப் பார்த்து, தொட்டு அந்தப் பிரிவுத் துயரைப் போக்கிக் கொள்ள முயலுவர்.

குறுந்தொகையில் ஒரு பாடல்… புகழ்பெற்ற பாடல்… ஔவையார் பாடியது.
23வது பாடல்.

குறத்தி ஒருத்தி. ஊரெல்லாம் சுற்றி ஓர் ஊருக்கு வருகிறாள். அங்கே ஒரு இல்லத்தில் தலைவியானவள் தலைவிரி கோலமாக சோகத்தில் ஆழ்ந்திருந்தாள். குறத்தியின் பாடல் கேட்டு அவள் வெளியே வந்து எட்டிப் பார்த்தாள். அப்போது அவள் தோழி குறத்தியிடம் வந்து, ”முன்பு ஒரு முறை தலைவனின் மலையைப் பற்றிப் பாடினாயே அதைப் பாடேன்… என் தோழி அதைக் கேட்க வேண்டுமாம்!” என்றாள்.

அதைக் கேட்டு, தலைவியின் தாய் அதிர்ந்தாள். ”என்ன..? அவரின் மலையைப் பாட வேண்டுமா? அதை என் மகள் கேட்க விரும்புகிறாளா? யார் அவர்? இவள் ஏன் அதைக் கேட்க வேண்டும்” என்று எண்ணியவளாக, தோழியிடம் விளக்கம் கேட்டாள்.

அதற்கு தோழி, ”ஒரு நாள் இவள் தினைப்புனத்தில் காவல் காத்துக் கொண்டிருந்தாள். திடீரென ஒரு யானை வந்தது… புனத்தை அழிக்கத் தொடங்கியது. அதைப் பார்த்து இவள் அஞ்சினாள். அப்போது அழகும் திறனும் உடைய மன்னன் ஒருவன் அந்த யானையின் மேல் வேல் எறிந்து ஓட்டி இவளைக் காப்பாற்றினான். அன்று முதல் இவள் அந்த மன்னனின் நினைவாகவே இருக்கிறாள். அதுவே இவளின் உடல் மெலிவு முதலானவற்றின் காரணம்…” என்றாள்.

இப்படி, குறத்தியாகிய அந்த அகவல் மகள் பாடும் போது, “அவர் நன்னெடுங் குன்றத்தை இன்னும் பாடு’ என்று தோழி சொன்னாள். அவ்வாறு வரும் பாட்டு இது.

அகவல் மகளே, அகவல் மகளே,
மனவுக்கோப்பு அன்ன நன்னெடுங் கூந்தல்
அகவல் மகளே, பாடுக பாட்டே;
இன்னும் பாடுக, பாட்டே; அவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே.

தெய்வங்களை அழைத்துப் பாடும் குறப் பெண்ணாகிய அகவல் மகளே, நீ பாட்டுப் பாடு! இன்னும் பாட்டுப் பாடு! அவருடைய நல்ல உயர்ந்த மலையை முன்பு பாடினாயே, அந்தப் பாட்டைப் பாடு! என்றாள். காரணம்… அந்த மலையைப் பற்றி இவள் பாடி, அதைக் கேட்க, அந்த நினைவில் மன்னனின் எண்ணத்தை மனதில் நிலைத்திருக்கச் செய்து, அந்த நினைவு சுகத்தில் தன் தலைவி மூழ்கியிருக்கலாமே…” என்பது தோழியின் எண்ணம்.
இது போல், அகத்துறைப் பாடல்கள் நம் இலக்கியங்களில் அதிகம்.

————————————————–
இன்னொரு பாடல். குறிஞ்சியில் கபிலர் பாடிய பாடல். இதில், காதலன் வாழும் மலையை தொலைவில் இருந்தே பார்த்து, ஏக்கப் பெருமூச்சோடு தன் தாபத்தைத் தணித்துக் கொள்கிறாள் இந்தக் காதலி.

அன்னாய்! வாழிவேண்டு அன்னை! கானவர்
கிழங்கு அகழ் நெடுங்குழி மல்க, வேங்கைப்
பொன்மலி புதுவீத் தாஅம் அவர்நாட்டு
மணிநிற மால்வரை மறைதொறு இவள்
அறைமலர் நெடுங்கண் ஆர்ந்தன பனியே.

அன்னையே, நீ வாழ்வாயாக! நான் சொல்லும் இதனைக் கேட்க விரும்புவாயாக… அன்னையே, குறவர்கள் கிழங்குகளைப் பறித்தால் அங்கே ஆழமான குழிகள் உண்டாயின. அந்தக் குழிகள் நிறையும்படி, வேங்கை மரத்தின் பொன்னிறம் மிக்க புதிய மலர் உதிர்ந்து இறைந்து கிடக்கிறது. அப்பேர்ப்பட்ட நிலத்தை உடைய தலைவருடைய நாட்டில், நீலமணி போன்ற நிறத்தையுடைய பெரிய மலையும் உண்டு. அந்த மலை மறையும் போதெல்லாம், பாத்தியிலே வளர்ந்த மலர் போன்ற இவளுடைய நீண்ட கண்களில் நீர்த் துளிகள் நிரம்புகின்றன… – என்று காதலியின் துயரத்தை வெளிப்படுத்துகிறாள் தோழி.

மாலையில் மறையும் வரை அந்த மலை இவள் கண்களில் பட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த மலையைப் பார்த்து, தன் தலைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் எண்ணத்தை உள்ளத்தில் போட்டு வைக்கிறாள் தலைவி. மாலையில் அது மறையத் தொடங்கும்போது, தலைவியின் கண்கள் பிரிவினால் கண்ணீரைச் சிந்துகின்றன.

———————————————-

இப்படி, பக்தி இலக்கியத்திலும் தமிழ் இலக்கிய மரபை ஒட்டி, ஆண்டாள் பாடியதே நாச்சியார் திருமொழி. திரு என்றாள் லட்சுமி என்பார்கள். நாச்சியார் திருவாகிய தேவி ஆண்டாளே மொழிந்த மொழி என்பதால் இந்தத் திருமொழி சிறப்பு வாய்ந்தது. மானிடவர்க்கு என்று பேச்சுப் படின் வாழகில்லேன்… என்று, தெய்வக் காதலில் கரைந்தவள். அதுவும் கண்ணன் என்னும் கருந்தெய்வத்தின் மீதான காதலில் கரைந்தவள் ஆண்டாள் நாச்சியார்.

இதில்தான் மேற்சொன்ன கற்பூரம் நாறுமோ பாடலில், கண்ணனின் கை விட்டு நீங்காது இருக்கும் வெண்சங்கத்திடம் கண்ணனின் திருவாய்ச் சுவை பற்றிய அனுபவத்தைக் கேட்கின்றாள் ஆண்டாள்.

திரு ஆழி எனப்படும் சக்கரம் மிகவும் மேன்மை வாய்ந்தது. சக்கரப் படை கொண்டே கண்ணன் பகைவரின் சிரம் அறுத்தான். சங்கத்தின் முழக்கம் கேட்டால் பகைவரின் தொடைகள் இரண்டும் நடுக்கமுறும். அவ்வளவு பயத்தை பகைவருக்குத் தோற்றுவிக்கத் தக்கது போர்க்களத்தில் சங்கத்தின் பேரொலி.

இதில், சக்கரமானது பகைவரை அழிப்பதற்காக அவ்வப்போது பகவானின் கையை விட்டு நீங்கி, தன் செயலை முடித்து, மீண்டு வந்து பகவானின் கையைச் சேரும். இப்படி, கண நாழிகை நேரமேனும் பகவானை விட்டு நீங்கியிருக்கும்படி நேர்கிறது சக்கரத்துக்கு. ஆனால், சங்கின் நிலை அப்படி அல்ல. அது, பகவானின் கையை விட்டு எப்போதும் நீங்காதது. எந்த நேரமும் பகவானின் கையிலேயே இருக்கும். ‘அகலகில்லேன் நிறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பன்’ என்று நம்மாழ்வார் பாடியபடி, பரந்தாமன் மார்பிலிருந்து அகலாமல் எப்படி மகாலட்சுமி உறைகிறாளோ அப்படி, ஒரு நொடிப்பொழுதும் பகவானின் கரத்தை விட்டு நீங்காத வரம் பெற்றது வெண்சங்கம்.

அந்தப் பாஞ்சஜன்யப் பெருஞ் சங்கம், இன்னொரு பேறும் பெற்றது. எதிரிகளைக் கலங்கடிக்க, இந்த சங்கத்தினை தன் வாயில் வைத்து ஊதி, பேரொலி எழச் செய்வான் கண்ணன். இப்படி, கண்ணனின் திருப் பவளச் செவ்வாயில் படும் பேற்றினைப் பெற்றது, வெண்சங்கம்.

அந்த வெண்சங்கத்தை நினைத்தபடியே… கண்ணனின் நினைவுகளில் மூழ்கிப் போனாள் ஆண்டாள். வெண்சங்கம் பெற்ற பேற்றினை தானும் பெற வேண்டும். அதற்கு முன்னோட்டமாகத்தான், அதன் அனுபவத்தை இப்படிக் கேட்கிறாள்… மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே!

andal+temple
nandavanam

———————————————
ஒருமுறை ஸ்ரீபெரும்புதூர் வரத யதிராஜ ஜீயரைக் காணச் சென்றிருந்தேன். அவரிடம் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தபோது, தமிழின் அருமை பெருமைகளையும், ஆண்டாளின் பக்தி இலக்கியம் பற்றியும் சில தகவல்களைச் சொன்னார். அப்போது அவர் சொன்ன ஒரு தகவல் என் நெஞ்சில் ஆழப் பதிந்தது.

ஒருநாள்… மடத்துக்கு வெளியே சிறுவர் குழாம் விளையாடிக் கொண்டிருந்தது. சத்தம் அதிகமாக இருக்கவே ஜீயர் ஸ்வாமி அவர்களை அழைத்து, என்னடா விளையாடுகிறீர்கள்… என்று அமைதியாகக் கேட்டிருக்கிறார். அவர்கள், தாத்தா, நாங்க ஒன் ஃபோர் த்ரீ சொல்லி விளையாடுகிறோம்… என்றார்களாம். அதென்னடா என்று கேட்டபோது, ஒருவன் அதன் விளக்கத்தைச் சொன்னானாம்…

(சில வருடங்களுக்கு முன் ‘ஆசை’ என்று ஒரு திரைப்படம் வந்தது. அதில் காதலர்கள் இருவரும் ‘ஐ லவ் யு’ என்பதை, ‘ஒன் ஃபோர் த்ரீ ‘ என்று சொல்லிக் கொள்வார்கள். ஐ என்பது ஓர் எழுத்து., லவ் என்பது நான்கு எழுத்து. யு என்பது மூன்று எழுத்து. இதை சுருக்கமாக 143 என்பார்கள் காதலர்கள்).

இதைக் கேட்டவுடன் ஜீயருக்கு வருத்தம் ஏற்பட்டதாம். சினிமா பார்த்து கெட்டுப் போகிறார்களே… என்று எண்ணியவர், அவர்களை அழைத்து அமரவைத்து, ஆண்டாளின் கதையை அவர்களுக்குச் சொன்னாராம்.
இதென்னடா ஜுஜுபி… ஆண்டாள் அந்தக் காலத்துல கண்ணனுக்கு சொன்னாளே ஒன் ஃபோர் த்ரீ… அது மாதிரி வருமாடா… என்று கேட்டு ஒரு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி, ஆண்டாள் சரிதத்தை சிறுவர்கள் மனதில் படும்படி சொன்னாராம்.

முடிவில் ஆண்டாளின் வாழி திருநாமத்தையும் சொன்னாராம்…

திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே…
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே…
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே…
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே…

– என்ற இடத்தைச் சொல்லி, எப்படி ஆண்டாள் கண்ணனுக்கு நூற்று நாற்பத்து மூன்று என்ற ஒன் ஃபோர் த்ரீ சொல்லியிருக்கிறாள் என்பதை இந்தப் பாட்டில் சொல்லி வைத்திருக்கிறார்கள் பார்த்தீர்களா..? என்று சிறுவர்களைப் பார்த்து ஒரு கேள்வியும் கேட்டாராம்…

இதைக் கேட்ட போது, எனக்கு சிரிப்பாகவும் இருந்தது; சிலிர்ப்பாகவும் இருந்தது. ஆண்டாள் பாடியருளிய நாச்சியார் திருமொழி பாசுரங்கள் 143. எப்படி திருப்பாவை-முப்பது பாடல்களோ அப்படி. அதனால்தான், திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே என்றும், ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே என்றும் வாழி திருநாமத்தில் பாடிவைத்தார்கள்.

ஆனால், ஜீயர் ஸ்வாமி சிறுவர்களுக்கு ஆண்டாளைப் பற்றிச் சொல்ல, இதை ஒரு கருவியாக எடுத்துக் கொண்டதைப் பார்த்தபோது… எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா… என்று தோன்றியது.

எப்படி இருந்தாலும், நம் தமிழ் இலக்கியத்துக்கு பலம் சேர்த்த அந்த ஆண்டாள் அம்மைக்கு நாமும் வாழ்த்துப் பாடுவோம்…

ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே!

அன்பன், 
செங்கோட்டை ஸ்ரீராம்

2 COMMENTS

  1. அருமையான பதிவு.
    நன்றி.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe