spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

HomeNewsசெங்கோட்டை சித்தர் ஸ்ரீஆறுமுக சுவாமிகள்

செங்கோட்டை சித்தர் ஸ்ரீஆறுமுக சுவாமிகள்

செங்கோட்டை மண்ணின் புனிதர்
சித்தர் ஸ்ரீஆறுமுக சுவாமிகள்!

சிவன்கோட்டை… சிவனடியார்கள், சித்தர்கள், மகான்கள், தவசீலர்கள் நிறைந்திருந்த பூமி. சுற்றிலும் மகான்களின் ஜீவ சமாதிகள். கேரளத்தின் திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த இந்தச் சிறிய நகரம், 1956-ஆம் ஆண்டுதான் தமிழகத்தின் திருநெல்வேலி ஜில்லாவுடன் இணைக்கப்பட்டது. 800 ஆண்டுகளுக்கு முன் நல்லூர்ராஜா ஆட்சி செய்த பகுதி இது என்கிறது சரித்திரம். நகருக்கு மேற்குப் புறத்தில் நல்லூர்கால் பகுதியில் கோட்டை அமைத்து, மகாதேவர் கோயில், தீர்த்தக் குளம் போன்றவற்றை அமைத்தாராம். இப்போது காலம் சிதைத்த எச்சங்களே உள்ளன. சிவன்கோட்டையே காலப்போக்கில் மருவி, செங்கோட்டை ஆனதாம்!

arumugasami+samadhi+path2

அன்றைய திருவாங்கூர் சமஸ்தானமே ஆன்மிக பூமியாக விளங்கியது. சமஸ்தானத்தின் நுழைவுப் பகுதியாக செங்கோட்டை இருந்ததால், அங்கே துவார பாலகர் சிலைகள் வைக்கப்பட்டன. இந்த அமைப்பை வேறு எங்கும் காணமுடியாது. இதைக் கடந்துதான், ஆரியங்காவு, அச்சங்கோயில், சபரிமலை என கேரளத்தின் புனிதத் தலங்களுக்குச் செல்ல வேண்டும்.

சென்னை, மதுரை, திருநெல்வேலி என எல்லா ஊர்களில் இருந்தும் செங்கோட்டைக்கு பஸ் வசதி உள்ளது. ரயில் வசதியும் உண்டு. ஊரின், காவல் நிலைய நிறுத்தத்தின் அருகில், பழைய சினிமா தியேட்டர் ஒன்று. அதை ஒட்டி, சாலையில் வலப்புறம் ஆற்றுப் பாலத்துக்கு முன்னதாக ஒரு சிறிய சிமென்ட் பாதை. சுற்றிலும் பச்சைப் பசேலென வயல். அடுத்து பொதிகை மலையின் வண்ணமயமான தோற்றம் மகிழ்ச்சியை அளிக்கிறது.

senkottai+entrance+path

இயற்கையை ரசித்தபடியே அதில் செல்கிறோம். சற்று தொலைவில் ஆற்றங்கரையில் அழகான ஆலயம்… அது, சற்குரு ஆறுமுக சுவாமிகளின் சமாதி ஆலயம்.

ஒரு சிவாலயத்துக்கு உண்டான அம்சங்களோடு திகழ்கிறது. கருவறை கோஷ்டங்களில் தட்சிணா மூர்த்தி, முருகன், பிரம்மா சிலைகள். சமாதி ஆலயத்தின் இடப்புறம் ஒரு புற்று. ஆறுமுக சுவாமிகளுக்கு பாம்புகளோடு நெருங்கிய பழக்கம் இருந்ததாம். முன்னே ஒரு மண்டபம். அதைக் கடந்து உள்ளே சென்றால், சுவாமிகளின் சமாதி கருவறை. மேலே லிங்கப் பிரதிஷ்டை ஆகியுள்ளது.

arumugasami+samadhi+path

நந்தி, பலிபீடம் எல்லாம் உள்ளன. அதனால், பிரதோஷ பூஜையும் நடக்கிறது. பூஜைக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள். நாடி வருபவர்களின் வேண்டுதல் களை நிறைவேற்றி, இன்றும் தன் ஆன்மிக சாதனையின் மகிமையை எடுத்துக் காட்டுகிறார் சுவாமிகள்.

arumugasami+samadhi+temple+backside

சற்குரு ஆறுமுக சுவாமிகளின் சரித்திரம்… சாதாரண மனிதராக வெளித் தெரிந்த ஒருவர், மகானாகப் பரிமளித்த உன்னத சரித்திரம்.
சைவ வேளாண் மரபில் வந்த பெரியநாயகம் பிள்ளை, தில்லை நடராஜப் பெருமான் மீது தீராக் காதல் கொண்டவர். இதே ஊரைச் சேர்ந்த பொன்னம்மாளை இவருக்கு மணம் முடித்து வைத்தனர். வருடங்கள் சென்றன. இல்லறம் நல்லறமாக நடந்ததாயினும் குலம் தழைக்க குழந்தைப் பேறு இன்றி இருவரும் மனவருத்தம் கொண்டனர். தெய்வம் பல வணங்கியும், தலம் பல சென்றும் நாட்கள் சென்றதுதான் மிச்சம். ஒருநாள் திடீரென தீர்த்த யாத்திரைக்குக் கிளம்பினர்.

பல்வேறு புண்ணிய நதிகளில் நீராடி, திருச்செந்தூர் கடலில் நீராடி முருகப் பெருமானைத் துதித்து தங்கள் குறை தீர மனமுருகி வேண்டினர் அந்தத் தம்பதி. முருகனும் அருள் புரிந்தான்.

கொல்லம் ஆண்டு 959 (கி.பி.1784) சித்ரா பௌர்ணமியில், சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தது ஆண் குழந்தை. முருகன் கருணையால் பிறந்த குழந்தை ஆதலால், ஆறுமுகனின் பெயரையே வைத்தனர். அந்தக் குழந்தையே, நூறு வயது பூவுடலுடன் இருந்து, சித்துகள் பல புரிந்து, புத்தரைப் போல், வள்ளலாரைப் போல் பௌர்ணமியில் தோன்றி பௌர்ணமியிலேயே ஸித்தியான சித்தபுருஷர் ஸ்ரீஆறுமுக சுவாமிகள்.

இவர் பிறந்த பிறகு, சீனிவாசன், சிதம்பரநாதன் என இரு ஆண்களும், கல்யாணி என்ற பெண் குழந்தையும் உடன் பிறந்தனர். ஆறுமுகப் பெருமான் பிள்ளைக்கு இளவயதில் நற்கல்வி கொடுக்கப்பட்டது. வளர்ந்து வாலிப வயதடைந்த இவருக்கு தகுந்த பணியும் கிடைத்தது. அருகில் உள்ள சீவநல்லூர் கிராமத்தின் கிராம அதிகாரி பணிதான் அது!

ஆறுமுகப் பெருமான் பிள்ளையின் நிர்வாகத் திறனால் செழித்து வளர்ந்தது சீவநல்லூர். கொல்லம் ஜில்லா கலெக்டரும், செங்கோட்டை தாசில்தாரும் இவரைப் புகழ்ந்தனர். இந்த நிலையில், புளியரை கிராமத்தைச் சேர்ந்த ஆரியவடிவு என்ற பெண்ணை இவருக்கு மணம் முடித்து வைத்தனர்.
இல்லறமும் அரசுப் பணியும் நல்ல முறையில் தொடர்ந்தது ஆறுமுகம் பிள்ளைக்கு! இல்லறத்தின் பயனாக, பொன்னம்மாள், உலகம்மாள் என இரு பெண் குழந்தைகள் பிறந்தனர். வெளிப் பார்வையில் இவர் அதிகாரி; இல்லறவாசி! இருந்தாலும், அவர் மனத்துள் ஏதோ ஓர் தனிமை. தாம் இந்த உலகில் பிறந்தது, குழந்தைகளை வளர்ப்பதற்கும், வரி வசூலிக்கவும் மட்டுமா என்ற இனம் புரியாத எண்ணம் உள்ளத்தில்!

கிராம அதிகாரியான இவரிடம், தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த கைலாசம் என்பவர் தண்டல்காரராகப் பணியாற்றினார். இட்ட வேலையை முகம் கோணாது செய்பவர்; சிவ பக்தர். மொத்தத்தில் பிள்ளைக்கு வலது கரமாகவே இருந்தார்!

ஒரு நாள் மாலை நேரம்! கணக்குப் பேரேட்டுக் கட்டுகளைச் சுமந்து சீவநல்லூரில் இருந்து வந்தனர் இருவரும். சற்று தொலைவு வந்ததும், ”ஐயா, வயிறு சற்று சரியில்லை. அதோ அந்தத் தோப்புக்குள் சென்று இதோ வந்துவிடுகிறேன்…” என்று சொல்லிவிட்டு, பேரேட்டுக் கட்டுக்குக் காவலாக பிள்ளையவர்களையே நிறுத்திவிட்டுச் சென்றார் கைலாசம்.
நேரம் ஆனது. இருள் கவியத் தொடங்கியது. பாதையில் தனி ஆளாக நின்றிருந்த பிள்ளையவர்கள், கைலாசத்துக்கு என்ன ஆனதோ என்று எண்ணி, அவரைத் தேடி தோப்புக்குச் சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி, அவரை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

அப்படி என்ன கண்டார் அவர்..?

தோப்பில் உள்ள ஓடைக்கு அருகே, ஒரு பள்ளத்தில் கைலாசம் பத்மாசனம் போட்டு, வாயுஸ்தம்பம் மூலம், தரை மட்டத்திலிருந்து உயர்ந்து அந்தரத்தில் நிஷ்டை கூடி இருப்பதைக் கண்டார். தன்னிடம் பணியாற்றும் கைலாசமா இது. அவருக்கு அதிர்ச்சி. சாதாரண வேலையாள் இல்லை; இவர் ஒரு ஞானவான் என்று உணர்ந்தவர், தனது தேடல் இங்கேதான் முடிவடைய வேண்டும் என்று எண்ணினார்.

கைலாசத்துக்கு அருகே தானும் அமர்ந்தார். ஒரே ஒரு கண நேரம் கண் மூடி தியானித்தார். உலகம் சுழல்வது போல் இருந்தது. பல பிறவிகள் நினைவில் வந்து போயின. மனம் அலைக்கழிப்புக்கு உள்ளானது. எவையெல்லாமோ தன்னை விட்டு விலகுவது போன்ற மயக்கம். தலையில் இருந்து பெரும் சுமையை இறக்கி வைத்த உணர்வு. கண் திறந்து பார்த்தார். ஆனால், கைலாசம் இன்னும் தன்னுணர்வு வந்தபாடில்லை.

சாலையை நோக்கி நடந்தார். நடையில் அமைதி தெரிந்தது. கைலாசம்- தன் பார்வையில் ஒரு பணியாள்தான்! பிறப்பிலும் தொழிலிலும் தன்னைவிட தாழ்ந்த நிலையில் உள்ளவர். ஆனால், ஆண்டவன் பார்வையில் எவ்வளவு உயர்ந்தவர்! ஆத்மானுபவம் பெற்றும் எந்த கர்வமும் இன்றி எத்தனை பணிவு?! இறைவன் முன் சாதி பேதம் ஏது? திருப்பாணாழ்வாரும் திருநாளைப்போவாரும் இறைவனே போற்ற இருந்தவர்கள் ஆயிற்றே! – நினைக்க நினைக்க ஆறுமுகம் பிள்ளைக்கு ஞானம் மெள்ளப் புலப்படலாயிற்று.

அங்கே… கைலாசம் நிஷ்டை கலைந்து எழுந்தார். சாலையின் ஓரத்தே எஜமானரை நிறுத்திவிட்டு வந்த நினைவு எழுந்தது. பதைபதைப்புடன் ஓடி வந்தார். ”மன்னிக்கணும் ஐயா. நேரம் ஆகிவிட்டது.” என்றார்.
”கைலாசம்… உமக்கு நேரம் ஆகி விட்டது; எனக்கு நேரம் வந்துவிட்டது. நடந்ததை அறிந்தேன். எனக்கும் அந்த ஆத்மானுபவத்தை அருள வேண்டும். உண்மை நிலையை உபதேசிக்க வேண்டும்” என்று ஆறுமுகம் கைகூப்பி வணங்கினார் கைலாசத்தை!

”எஜமான்! இது பாவம். நான் தகுதியற்றவன்…” என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார் கைலாசம். ஆனால் பிள்ளையவர்கள் விடவில்லை. வேறு வழியின்றி அப்போதே பரம்பொருளை நினைத்து, சீவனைச் சிவமாக்கி புருவ மத்தியில் நிறுத்தி பிரம்மோபதேசத்தை பிள்ளையவர்களின் காதில் ரகசியமாக உபதேசித்தார் கைலாசம்.

இருள் மண்டிய குகையிலிருந்து பர ஒளி உலகுக்கு வந்த உணர்வு அவருக்கு! ஒரு நிமிட உபதேசத்தில் அவர் உலகமே மாறியது.

சில நாட்களில் இவரின் தந்தை உலக வாழ்விலிருந்து விடை பெற்றார். ஆறுமுகம் பிள்ளையின் அலுவலகப் பணியும் ஆத்ம விசாரமும் தொடர்ந்தது. இந்த நாட்களில் சில மகான்களின் தொடர்பும் கிடைத்தது. கடையம் அய்யம் பட்டர், கோடகநல்லூர் சுந்தர சாஸ்திரி, ஆம்பூர் ஹரிஹர சாஸ்திரி, இலத்தூர் ராமஸ்வாமி சாஸ்திரி ஆகிய மகான்கள், பிள்ளையின் சாவடியில் கூடி, ஆன்மிக விசாரம் செய்தனர். இது, இவரது ஆன்மிகப் பயிருக்கு நல்ல உரமாக அமைந்தது.

சுவாமி சிவானந்தர், ஒருமுறை இமயத்தை நோக்கி பயணப் பட்டார். வழியில் காசிக்குச் சென்றார். இந்தி மொழி புதிது. வடநாட்டுப் பழக்கவழக்கங்களும் தெரியாது. ஒரு கடைக்குச் சென்று பால் கேட்டார். அங்குள்ள வழக்கப்படி ஒரு மண்சட்டியில் பால் கொடுத்தான் கடைக்காரன். பாலைக் குடித்தபின், நம்மூர் வழக்கப்படி அதைக் கழுவி மீண்டும் கடைக்காரனிடம் கொடுத்தார் சிவானந்தர். அவ்வூர் வழக்கம்- அதைத் தூக்கி எறிந்துவிடுவது. சிவானந்தருக்கு இது தெரியாது. இவர் மீண்டும் அவனிடம் கொடுக்க முயல, கடைக்காரன் கோபத்துடன் கத்தினான்… ”தூக்கி எறி…”

அந்த ஒற்றை வார்த்தையே சிவானந்தருக்கு உபதேசமானது. அவ்வளவுதான்! அனைத்தையும் தூக்கி எறிந்து இமயத்தில் அமர்ந்தார். நெல்லை மாவட்டத்தின் பத்தமடையில் தோன்றி இமயத்தில் கரைந்த ஆன்மிக ஜோதி இவர்.

இங்கும் அப்படித்தான்! வைராக்கிய உணர்வு வரப்பெற்ற பிள்ளையவர்கள், தம் 35-ஆம் வயதில், பந்தம் பாசம் அறுத்து அனைத்தையும் தூக்கி எறிந்து வீதியில் இறங்கினார். கால்போன போக்கில் நடந்தார். தென்கயிலாயமான குற்றால மலை ஏறினார். செண்பகாதேவி அருவிப் பக்கம் சென்றார். அங்கே ஸ்ரீபராசக்தி கோயிலை ஒட்டி அருவிக்கரையில் இருந்த குகையை நோக்கிச் சென்றார். முற்றும் துறந்த முனிவர்கள் கூடும் குகை இது. அன்று அய்யம் பட்டர், ஹரிஹர சாஸ்திரி, சுந்தர சாஸ்திரி என மகான்கள் கூடியிருந்தனர். சுந்தரசதஸ் என்று அதற்குப் பெயர். இதனுள் சென்று அமர்ந்தாலே, அலைபாயும் மனது ஒருமுகப்பட்டுவிடும்.

agasthiar+temple
shenbagadevi+falls+and+cave

அன்று சித்ரா பௌர்ணமி. ஞானவாராஹி அன்னையின் அருளைப் பெற தவத்தில் ஈடுபட்டனர் அனைவரும். மூவரும் குகைக்கு உள்ளேயும், ஆறுமுக சுவாமிகள் குகை வாயிலிலும் அமர்ந்து மோனத் தவம் புரிந்தனர். நள்ளிரவு. சலசலத்து ஓடும் அருவி நீர் சப்தம் தவிர வேறு ஏதுமில்லை. திடீரென அந்த நள்ளிரவில் குகையை நோக்கி உறுமியபடி பாய்ந்தது ஒரு புலி. அதன் கண்களில் தீ ஜ்வாலை. சித்தத்தை பரவெளியில் நிறுத்தி உணர்வற்ற நிலையில் இருந்த சுவாமிகளைக் கவ்விச் சென்ற புலி, சற்று தொலைவில் இருந்த சித்தர் குகையில் விட்டுச் சென்றது. இந்த சித்தர் குகைக்கு அருகில் உள்ளது சித்தர் ஓடை. சித்த புருஷர்கள் கூடுமிடம். அந்த குகையில், புரியாத மொழியில் கல்வெட்டுகளில் ஏதேதோ எழுதப்பட்டிருக்கும்.

shenbagadevi+falls+dakshinamurthy+cave

பௌர்ணமி நிலவின் வெளிச்சத்தில் அந்தக் கானகம் நிறைந்திருக்க, சிறிது நேரத்தில் தன்னுணர்வு வரப்பெற்ற சுவாமிகள் மெள்ளக் கண் திறந்து பார்த்தார். அவ்வளவுதான்! காண்பதற்கரிய காட்சியைக் கண்டு சித்தம் லயிக்க நின்றார். அவர் கண்ட காட்சி…

dakshinamurthy+cave
agasthiar+and+lobamuthra
dakshinamurthy+swami+in+cave

குகைக்குள், அன்னை காட்சி தந்தாள். எதற்காகத் தவம் இருந்தாரோ அது நிறைவேறக் கண்டார். அந்தக் கணமே அவருள் ஒரு பேரொளி கிளர்ந்து எழுந்தது. ஞான வைராக்கிய சித்தராக எழுந்து நின்றார் சுவாமிகள். ஆனந்தக் கூத்தாடினார். அவ்வளவில் அந்தக் காட்சி மறைந்தது. ஒரு ஞானியாக மலையில் ஏறியவர், ஞானச் சித்தராக இப்போது கீழிறங்கினார்.

in+the+cave

இவருடைய நடவடிக்கைகள் வீட்டினருக்கு ஒரு புதிராகவே இருந்தது. சுவாமிகளின் தம்பி சீனியாப்பிள்ளை, இவருக்கு பைத்தியம்தான் பிடித்துவிட்டது என்று எண்ணி வீட்டில் ஓர் அறையில் கால் விலங்கிட்டு அடைக்கவும் செய்தார். ஒரு கட்டத்தில் சுவாமிகளின் மனம் நோக, அந்தக் கணத்தில் கால்விலங்குகள் தெறித்து விழுந்தன. அறைக்கதவு திறக்க, சிங்கமென கர்ஜித்து வெளியேறினார். இவருடைய பரிபாஷையைக் கேட்டு, இவரிடம் மகிமை இருப்பதாக உணர்ந்த குடும்பத்தினர், பிறகு மன்னிப்பு வேண்டினர்.

ஆறுமுக சுவாமிகளின் மகத்துவம் எங்கும் பரவியது. அன்பர்கள், பல்வேறு ஊர்களில் இருந்தும் வந்து தரிசித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கைகாட்டி சுவாமிகள் வந்தார். மகான்களின் தொடர்பால், அந்தச் சாவடியே பரிபாஷைகளின் கூடாரமாக மாறியது. அன்னை பராசக்தி அருளால் முக்கால ஞானமும் அஷ்டமா சித்துகளும் கைவரப் பெற்றார் சுவாமிகள்.

சுவாமிகள், கடைவீதியில் நடந்துவரும்போது, வியாபாரிகள் கடையை விட்டு கீழே இறங்கி கைகட்டி நிற்பார்கள். சுவாமிகள் ஏதாவது ஒரு கடையின் கல்லாப் பெட்டியில் இருந்து ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து யாருக்காவது கொடுப்பார். அன்று அந்தக் கடையில் வியாபாரம் அமோகம்தான்!

அநேகமாக யாரிடமும் பேசுவதில்லை சுவாமிகள்; பேசினாலும் மழலைச் சொல்தான்! கந்தல் துணிதான் உடுப்பு. சில நேரங்களில் அவதூதர் கோலம். எப்போதும் பாம்பு களுடன்தான் விளையாட்டு. ‘டேய் சங்கரா’ என்று அழைப்பார். எங்கிருந்தெல்லாமோ வரும் பாம்புகள், அவர் மேனியில் ஊர்ந்து விளையாடும். யாரேனும் வந்தால்… ”டேய் பாவிகள் வந்தாச்சு, கிளம்புங்க!” என்பார். அவ்வளவில் அவை மறைந்துவிடும்.

சுவாமிகள் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் அதிக நாட்கள் தங்கியிருக்கிறார். அதனால் அங்கு இவருக்கு பக்தர்கள் அதிகம். மேலும், குற்றாலம்- செண்பகாதேவி அருவிக்கு அருகில் உள்ள அகத்தியர் குகை, தட்சிணாமூர்த்தி குகை, சித்தர் குகைகளில் அதிகம் தியானத்தில் இருந்திருக்கிறார். இங்கே சூட்சும ரூபமாக சித்தர்கள் இன்றும் வருகிறார்களாம்.

அந்த குகையை தரிசிக்கும் ஆவலில் நாமும் செண்பகாதேவி அருவிக்குச் செல்கிறோம். ஐப்பசி மாத மழையில் அருவியில் நிறையவே தண்ணீர். செண்பகாதேவி அருவியில் இருந்து தேனருவி செல்லும் கரடுமுரடான பாதையில் சிறிது தூரம் செல்கிறோம். ஒரு பாம்புப் புற்று. அதைக் கடந்து சற்று தூரம் மேலே ஏறினால், ஒரு செங்குத்தான பாறையின் அருகில் பாதை தெரிகிறது. அருகே விநாயகர் சந்நிதி ஒன்று. வணங்கி சற்று கீழே இறங்கிச் சென்றால், செண்பகாதேவி அருவிக்கு நீர் வரும் பாதை. மிகவும் ஆபத்தான பகுதி. இங்கிருந்துதான் மலையின் இரண்டு பெரிய பாறைகளுக்கு நடுவே நீர் ஓடி அருவியாக விழுகிறது. அதன் அருகில் குகையின் வாசல். தற்போது, ‘இரும்பு கேட்’ போட்டு பூட்டியிருக்கிறார்கள். செண்பகாதேவி கோயிலில் இருந்து சாவியை வாங்கி வந்திருந்தோம்.

குகைக்குள் ஒரே இருட்டு. குரங்கார் ஓரிருவர் நம்மைப் பின்தொடர, கையில் இருந்த செல்போன் டார்ச் வெளிச்சத்தில் உள்ளே செல்கிறோம். முகப்பில் சிவலிங்கம், அம்பிகை உருவங்கள்… சித்தர்கள் போன்ற சிலாரூபங்கள். உள்ளே அரைகுறை டார்ச் வெளிச்சத்தில், அகத்தியர், லோபமுத்திரை மற்றும் சிவலிங்கத் திருமேனிகளை தரிசிக்கிறோம். இன்னும் சற்று உள்ளே சென்றால், ஒரு மேடையில் தட்சிணாமூர்த்தி விக்கிரகம். என்றோ சாத்தப்பட்ட பூமாலை… வாடியிருந்தது. கற்பூரம் கொளுத்தி, வெளிச்சம் வர வழி ஏற்படுத்தி, அந்த வெளிச்சத்தில் தட்சிணாமூர்த்தி ஸ்வாமியையும் அகத்தியரையும் தரிசித்து, கொண்டு சென்ற பழத்தை நிவேதனம் செய்து, அமர்கிறோம். அங்கே சூட்சும ரூபமாக எழுந்தருளும் சித்தர் சுவாமிகளை தியானிக்கிறோம்.

கற்பூரம் எரிந்து முடிந்த சற்று நேரத்தில் இருளும் புகையும் சூழ, தட்டுத் தடுமாறி எழுந்து வெளியே வருகிறோம். வெளியேறும் இடத்தின் இடப்புறம், அந்த குகைக்குள்ளேயே ஒரு சிறிய குகை. அதனுள் கைத்தடி, சிறிய பாய், மாகாளி அன்னையின் விக்கிரகம் எல்லாம் இருக்கிறது. இங்குதான் குற்றாலம் மௌன சுவாமிகள் தவம் செய்தார். ஆறுமுக சுவாமிகள் உள்ளிட்ட சித்தர்கள் தவம் செய்த புனிதமான குகையில் இருந்து, சித்தர்களின் அருளால் எந்தவித ஆபத்தும் இன்றி வெளியே வருகிறோம். நைவேத்திய பழங்களை குரங்கார் சுற்றம் சூழ வந்து நம் கையில் இருந்து வாங்கிச் சென்றார். மனத்துள் ஆறுமுக சுவாமிகள் நிறைந்திருக்க, அவருடைய மகிமைகளை எண்ணியவாறே கீழிறங்கினோம்.

செங்கோட்டையில் கோர்ட் பிள்ளை குடும்பத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம், கைலாசம் இருவரும் ஒரு பொது வேலையாக கொல்லத்துக்குச் சென்றார்கள். அதற்கு முன் சுவாமிகளை சந்தித்து, பிரச்னைகளைச் சொல்லி ஆசி வழங்கும்படி கேட்டார்கள்.

சுவாமிகளும் ”நல்லது நடக்கும். சென்று வாருங்கள்” என்றார். பிறகு அவர்கள் சென்ற வழியில், ஆரியங்காவு, தென்மலை, புனலூர், கொல்லம் என ஒவ்வோர் இடத்திலும் சுவாமிகளும் தென்பட்டார். அங்கெல்லாம் அவர் திருவடிகளில் விழுந்து வணங்கினராம்.

மதுரையில் செல்வந்த ரெட்டியார் ஒருவரின் மகனுக்கு திருமணம். அன்றிரவு அவன் பாம்பு தீண்டி இறந்தான். மிகுந்த துக்கத்துடன் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று உடலை சிதையில் வைத்தனர். அப்போது அந்த வழியாக சுவாமிகள் சென்றதைப் பார்த்து, அன்பர் ஒருவர் இந்த விஷயத்தைச் சொல்லி ஆறுதல் அளிக்குமாறு வேண்டினார்.

சுவாமிகள் வந்து பார்த்து, சடலத்தின் மீது எச்சிலை உமிழ்ந்து, ”சீ போ… எழுந்திரு” என்று சொல்லிச் சென்றார். அதிசயப் படும்படி சிதையிலிருந்து அவன் எழுந்தான். சுவாமிகளைத் தேடினால், அவரை எங்கும் காணமுடியவில்லை. பிறகு செங்கோட்டைக்கு வந்து அவரை வணங்கி மூட்டை நிறைய நாணயங்களை சமர்ப்பித்தார் ரெட்டியார். சுவாமிகளோ, ”நீ ஆட்கொல்லியுடன் அல்லவா வந்திருக்கிறாய். நில்லாதே போ…” என்றார்.

அவர் வற்புறுத்தவே, ”சரி… நீயே இந்த நாணயங்களை தெருக்களில் எறிந்துவிட்டுப் போ” என்றார். அவரும் மறு பேச்சின்றி அப்படியே செய்தாராம்!
ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்விளாகத்தில் இருந்த அந்தணர் ஒருவரின் மகன், தன்னுடைய மனைவியோடு மாடியில் உறங்கும்போது பாம்பு தீண்டி இறந்தான். தெருவே துக்கத்தில் இருந்தது. அப்போது ஓர் வேலையாக அப்பகுதிக்குச் சென்ற செங்கோட்டை கங்காதர ஐயர் (இசைமேதை எஸ்.ஜி.கிட்டப்பாவின் தந்தை), இதைக் கண்டு மிகவும் மனம் வருந்தி அருகே இருந்த கோயிலுக்கு வந்தார். அங்கே சுவாமிகள் இருப்பது கண்டு வணங்கி, விஷயத்தைச் சொல்லி ஏதாவது பரிகாரம் வேண்டினார். சுவாமிகள், ”அவன் அநியாயமாகப் போகிறான்…” என்றாராம். உடனே கங்காதர ஐயர், ஓடிச் சென்று அவர்களிடம் சுவாமிகளின் மகிமையைக் கூறி, அவரை அழைக்குமாறு சொன்னார். சுற்றிலும் இருந்தவர் கள், ‘மாண்டவனாவது… மீள்வதாவது?’ என்று இவரை கேலி செய்தனர்.

சரி பார்ப்போமே என்று பையனின் மாமனார், ஆறுமுக சுவாமிகளை அழைத்து மன்றாட, சுவாமிகள் வந்து பார்த்துவிட்டு, எப்படி மனைவியுடன் மாடியில் படுத்திருந்தானோ அதே கோலத்தில் படுக்க வைக்கச் சொன்னார். சற்று நேரத்தில் எங்கிருந்தோ வந்த பெரிய பாம்பு ஒன்று படமெடுத்தபடி சுவாமிகள் முன் நின்றது.

அவர் கையசைக்க, அது மாடிக்குச் சென்று அவனின் காலில் கடிபட்ட இடத்திலிருந்து விஷத்தை உறிஞ்சி சுவாமிகள் முன் வைக்கப்பட்ட பசும்பாலில் கக்கிச் சென்றது. அந்தப் பையனும் எழுந்து அமர்ந்தானாம்!
சேத்தூர் ஜமீனைச் சேர்ந்த பக்தர்கள், சுவாமிகளுக்கு ஒரு மகாபிஷேகம் செய்ய விரும்பினர். சுவாமிகள் சிரித்தார். இருப்பினும் அன்பர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்தார்.

ஜமீன் சங்கிலி வீரப்ப பாண்டியரும் உடனிருக்க அபிஷேகம் துவங்கியது. 107 குடம் நீரால் அபிஷேகம் செய்து, 108வது குடத்து நீரை அபிஷேகம் செய்யத் தொடங்கினர். சுமார் இரண்டு மணி நேரம் அந்தக் குடத்தில் இருந்து தண்ணீர் விழுந்துகொண்டே இருந்தது. குடத்தைக் கையில் பிடித்தவர்களுக்கு கை வலி ஏற்பட்டு சுவாமிகளிடம் கெஞ்சினர். சுவாமிகள் ”தண்ணீர் போதும்” என்றவுடன் குடத்து நீர் நின்றது. இறுதியில் சுவாமிகளை பல்லக்கில் தன் இல்லத்துக்கு வருமாறு ஜமீன்தார் வேண்டினார். ”எல்லாம் நீ போய்ச் சேரு” என்றார் சுவாமிகள். மன விசனத்துடன் ஜமீன் தன் வீட்டுக்குச் செல்ல, அங்கே திண்ணையில் அமர்ந்திருந்தார் சுவாமிகள். அவருக்கு ஆச்சரியம். எப்படி இவ்வளவு விரைவாக அவரால் வரமுடிந்தது என்று!

ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகில் உள்ள திருவண்ணாமலையில் பெருமாள் கோயில் உள்ளது. அந்த மலையின் அடிவார ஊருக்கு சுவாமிகள் சென்றார். ஊர் மக்கள் சுவாமிகளை வணங்கி, மூன்று வருடங்களாக மழை பொய்த்துப் போய் வறட்சி தாண்டவமாடுவதைச் சொல்லி, ஏதாவது செய்யும்படி கோரினர். மனம் இரங்கிய சுவாமிகள், சுனையில் இருந்து சேற்றை எடுத்து உடல் முழுதும் பூசிக்கொண்டு, ஒரு பாறையில் அமர்ந்து தியானித்தார்.

சுட்டெரித்தது வெயில். இதெல்லாம் பகல் இரண்டு மணிவரைதான். அடுத்து எங்கிருந்தோ சேர்ந்தது மேகக் கூட்டம். நல்ல மழை பெய்தது. சுவாமிகளின் உடலில் பூசிய சேறு கரைந்து ஓடியது. அருகில் இருந்த குளங்கள் நிரம்பும் வரை தொடர்ந்து தியானத்தில் இருந்த சுவாமிகள் ஓரிரு நாட்கள் கழித்தே பழைய நிலைக்கு வந்தாராம்.

அன்பர்கள் யாரேனும் வறுமையால் வாடினால் சுவாமிகளுக்குப் பொறுக்காது. ஏதாவது வழிசெய்வார். ஸ்ரீவில்லிபுத்தூர் சாலியர் தெரு கீழப்பட்டியில் பேச்சியம்மாள் என்ற மூதாட்டி இருந்தாள். சுவாமிகளுக்குப் பணிவிடை செய்வதை பாக்கியமாகக் கருதினாள். நாளாக நாளாக வேலை செய்து சம்பாதிக்க உடல்நிலை இடம் கொடுக்காமல் தவித்தாள்.

சுவாமிகளை வணங்கி தன் இயலாமையைச் சொன்னாள். அவரும், ”நீ கடைக்குச் சென்று வாங்கும் பொருள்களுக்குத் தேவையான பணம் உன் வீட்டில் இருக்கும், போ” என்றார். அதன்படியே இருக்க, அவள் வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது. ஒருநாள் திடீரென, ஒரு விபரீத ஆசை அவளுக்கு! சுவாமிகளிடம் சென்று, ”சுவாமி இப்படி தினந்தோறும் நாலணா தருவதற்கு பதில், ஒரு மாதத்துக்குத் தேவையானதை மொத்தமாக அருளுங்களேன்…” என்றாள்.

மௌனமாகச் சென்ற சுவாமிகள், வெளியே மண்ணில் சிறுநீர் கழித்தார். அந்த மண் தங்கமாக மின்னியது. சுவாமிகள் சொன்னார்… ”பார்த்தாயா..! அவ்வளவும் தங்கம். போதுமா?” என்று சொல்ல, அவள் ஒன்றும் பேசாது நின்றாள். பிறகு சுவாமிகள், ”இது ஆட்கொல்லி. இதை நீ வைத்திருந்தால் உன் உறவினர்களே உன்னைக் கொன்றுவிடுவார்கள். பேசாமல் கிடைப்பதை வைத்து நிம்மதியாக இரு” என்று சொல்லிச் சென்றாராம்!

திருவனந்தபுரத்தில், அனைவருக்கும் இலவசமாக உணவு அளிக்கும் இடமான ஊட்டுப்புரை இருந்தது. ஆறுமுக சுவாமிகள், அய்யம்பட்டர், ஹரிஹர சுவாமிகள் மூவரும் அங்கே செல்வது வழக்கம். அப்போது, இவர்கள் கையில் ஒரு சாராய பாட்டிலும் இருக்குமாம். இது ஊட்டுப்புரை விதிமுறைகளுக்கு முரணானது.

எனவே இவர்களைப் பற்றிய புகார் சமஸ்தானத்துக்குச் சென்றது. அன்று திருவாங்கூரை ஆண்ட இசைமேதையான ஸ்வாதித் திருநாள் மகாராஜா ராமவர்மா, இவர்களை அழைத்தார். அப்போதும் அய்யம் பட்டர் கையில் சாராய பாட்டில். மன்னர் விசாரித்தபோது, ஆறுமுக சுவாமிகள் ஒரு பாத்திரம் எடுத்துவரச் சொன்னார். அதில் சாராயத்தை ஊற்றி, மன்னரிடம் கொடுத்தார். பாத்திரத்தில் பால் இருந்தது கண்டு வியந்த மன்னர், சுவாமிகளின் உன்னதத்தை அறிந்து, எப்போது இவர்கள் வந்தாலும் இல்லையென்று சொல்லாமல் உணவு வழங்க கட்டளையிட்டாராம்!

ஒருநாள், சுவாமிகள் செங்கோட்டை குண்டாற்றுப் பாலத்தில் அமர்ந்திருந்தார். நீராடிவிட்டு வந்த பெண்கள், சுவாமிகளைக் கண்டதும், தங்களுக்கு குழந்தையில்லாத குறையைக் கூறி, விமோசனம் வேண்டினர்.

சுவாமிகள், தன் உணவில் இருந்து ஒரு பிடி எல்லோருக்கும் எடுத்துக் கொடுத்து, வீட்டு உணவில் சேர்த்து உண்ணும்படி கூறினார். அந்தக் கூட்டத்தில் ஆறுமுகம் செட்டியார் என்பாரின் இரண்டாவது மனைவி சிதம்பரத்தம்மாளும் இருந்தார். எல்லோரும் சுவாமிகள் சொன்னபடி செய்ய, சிதம்பரத்தம்மாளுக்கு மட்டும் அதை உண்ணத் தோன்றவில்லை. அப்படியே கழுநீர்ப் பானையில் போட்டார்.

காலம் கழிந்தது. சிதம்பரத் தம்மாளைத் தவிர, மற்ற அனைவருக்கும் குழந்தை பிறந்தது. சுவாமிகளிடம் மீண்டும் சென்ற அம்மாள், குழந்தைப் பேறு வேண்டிக் கேட்டபோது, ”அதற்கு ஏன் இங்கு வந்தாய்? உன் வீட்டு கழுநீர் பானையிடம் கேள்.” என்றாராம் சுவாமிகள்.

சுவாமிகள் நூறு வயதை எட்டியதும்(கி.பி.1884), தாம் வந்த பணி நிறைந்துவிட்டதை உணர்ந்து, சமாதிக்கு தயாரானார். ஆனி மாதம் அனுஷம் கூடிய பௌர்ணமி நாளில், தான் எப்போதும் அமரும் நாற்காலியில் அமர்ந்தவாறே, சமாதி நிலை அடைந்தார். அவருடைய சமாதி தங்கள் இடத்தில் அமைய வேண்டும் என்று பலரும் போட்டியிட்டனர். இறுதியில் திருவுளச்சீட்டில், குண்டாற்றங்கரைத் தோப்பு என்று முடிவானது. அங்கே சுவாமிகளின் சமாதி அமைக்கப்பட்டு, சிவலிங்கப் பிரதிஷ்டையும் ஆனது. தற்போது சமாதிக் கோயிலாகக் காட்சி தருகிறது. சுவாமிகள் சமாதியாகி தற்போது, 125 ஆண்டுகள் ஆகிறது.

arumugasami+samadhi+backside+path
arumugasami+samadhi+entrance
arumugasami+samadhi+lingam
arumugasami+samadhi+side+view
dakshinamurthy
samadhi+

சுவாமிகளின் வம்சாவளியைச் சேர்ந்த ஆறுமுகம் (98940 90863) மற்றும் இசக்கி (90424 44156) இருவரும் சமாதிக் கோயிலில் தவறாமல் பூஜைகளைச் செய்து வருகிறார்கள். சுவாமிகளின் சரிதத்தை நமக்குச் சொன்ன நல்லாசிரியர் வி.ஜனார்த்தனனுக்கு நன்றி கூறி, சுவாமிகளின் கோயிலை வலம் வந்தோம்.

photos: senkottai sriram
கட்டுரை: செங்கோட்டை ஸ்ரீராம்

1 COMMENT

  1. அருமையான கட்டுரை, ஒரே மூச்சில் வாசித்து விடச் செய்கிறது. எத்துணை மகான்கள் நம் திருநாட்டில்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe