December 9, 2024, 3:13 AM
26.4 C
Chennai

வீரகேரளம்புதூர் – ஊத்துமலை ஜமீனில் சில சுவாரஸ்யங்கள்!

மஞ்சரி டைஜஸ்ட் இதழில் இதழாசிரியராக இருந்தபோது, கிராமத்துத் தகவல்கள், இலக்கியத் தகவல்கள் சிலவற்றை உங்களோடு ஒரு வார்த்தை 
என்ற பகுதியில் தொடர்ந்து எழுதி வந்தேன். அந்தத் தொடரில் இடம்பெற்ற ஒரு கட்டுரை இது. 
—————————————————————————————————-

“சாப்பாடு தேவாமிர்தம்”
அண்மையில் நெல்லை ஜில்லா, தென்காசிக்கு அருகிலுள்ள வீரகேரளம்புதூர் (வீ.கே.புதூர்) சென்றிருந்தேன். அங்கு பிரமாண்டமான நவநீதகிருஷ்ணஸ்வாமி கோயில் உள்ளது. எங்கள் தாத்தா ராம ஐயங்கார் இந்தக் கோவிலில் கைங்கரியம் செய்தவராம். குழந்தைப் பருவத்தில் நாங்கள் ஓடி விளையாடிய கோயில். பத்து தினங்கள் உற்ஸவம் வரும்போது, யானை உருவ மர பொம்மைகளைச் செய்வார்கள்… யாக சாலைக்குத் தேவைப்படும் வகையில். அவற்றை எங்களுக்குக் கொடுத்து விடுவார்கள். குழந்தைகளான நாங்கள் அவற்றை வைத்து விளையாடிய நினைவு உள்ளது. அங்கே ஓலைச்சுவடிகளும் நிறைய இருந்தன. அவற்றை மீண்டும் பார்த்து வரும் ஆவலில் அந்த ஊருக்குச் சென்றேன். 

கோவில் தற்போது கவனிப்பாரின்றி பாழ்பட்டிருக்கிறது. ஓலைச்சுவடிகள் கரையான்கள் அரித்தது போக சொற்ப அளவிலே எஞ்சியிருந்தன. சுவடிகளைப் படிக்கும் அறிவு ஓரளவு வந்த பிறகு இப்போது அவற்றில் ஒரு சிலவற்றை எடுத்துப் பார்த்தால், பெரும்பாலும் கணக்குகளே இருந்தன. ஏதேனும் இலக்கியப் பெட்டகங்கள் இருக்குமோ என்ற ஆவலில் தேடினேன். ஏமாற்றம்தான்!

வீரகேரளம்புதூர் என்ற இந்த ஊருக்கு ஒரு சிறப்பு உண்டு. அது தமிழ்காத்த, புலவர்களைப் புரந்த ஊற்றுமலை ஜமீன் ஊர் என்பதே! இந்த ஜமீனைப் பற்றி உ.வே.சா. தமது நினைவு மஞ்சரியில் குறிப்பிட்டுள்ளார்.

சொக்கம்பட்டி ஜமீனில் பெரியசாமி சின்னணைஞ்சாத் தேவர் தலைமை வகித்த காலத்தில் அவருடைய ஸ்தானாதிபதியாக இருந்தவர் பொன்னம்பலம் பிள்ளை. நல்ல புலவர்; புலவர்களை ஆதரிக்கும் புரவலர். அப்போது ஊத்துமலை ஜமீன்தார், சிவகிரி ஜமீனுக்கு உதவிவந்தார்.

பகை காரணத்தால் சேத்தூர் ஜமீன் சிவகிரி ஜமீனால் பாதிக்கப்பட்டிருந்தது. தமிழின் துணையால் பொன்னம்பலம் பிள்ளையுடன் நட்பு பூண்ட சேத்தூர் ஜமீன்தார், சொக்கம்பட்டி ஜமீன் படைமூலம் சிவகிரியைத் தாக்கி சின்னாபின்னப் படுத்துகிறார். சிவகிரிக்கு உதவி செய்த காரணத்தால் ஊத்துமலை ஜமீனும் நிர்மூலமாகியது. ஊத்துமலை ஜமீன்தார் உயிர்துறக்க, தனித்து விடப்பட்ட தம் இரு மகன்களுடன் ஜமீன்தாரிணி பூசைத்தாயார் தென்காசிக்கு வந்து விடுகிறார். அங்கு இந்த இரு சிறுவர்களும் பள்ளியில் பயில்கின்றனர்.

பெரியவர் பெயர் மருதப்பன்; இளையவர் பெயர் சீவலவத்தேவர். ஊத்துமலை ஜமீன் பரம்பரை பரம்பரையாகத் தமிழ் காத்து வந்தது. பல புலவர்கள் அங்கே தோன்றியிருக்கின்றனர். ஜமீன் அரண்மனையில் அடிக்கடி வித்வான்களின் பேச்சுகள் களைகட்டும். அப்போது பூசைத்தாயார் அவற்றைக் கூர்ந்து கவனிப்பார். எனவே செய்யுள்களின் சுவை தெரிந்து அனுபவிக்கவும், புதிய செய்யுள்களை இயற்றவும் அவருக்கு ஆற்றல் கூடிவந்தது.

ஒருநாள் சிறுவர்கள் இருவரும் பள்ளி சென்று கொண்டிருந்தபோது, தேரடியில் சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். இளையவரான சீவலவத்தேவர் அச்சிறுவர்களுடன் விளையாடப்போக, மூத்தவர் மருதப்பர் அவரைத் தடுக்கிறார். இளையவர் அடம்பிடிக்க, மூத்தவர் இவர் கன்னத்தில் இரண்டு “பளார்” கொடுத்து விடுகிறார். மாலை, பள்ளிவிட்டுவந்த சீவலவர் அண்ணன் அடித்ததை தாயாரிடம் சொல்லி தேம்பி அழ, இருவர் செய்ததும் தவறுதான் என்று சொன்ன பூசைத்தாயார், தம் குழந்தைகளின் நிலைக்கு வருந்தி அழுகிறார்.

எப்படி இருக்கவேண்டிய குழந்தைகள் இப்படி வாடுகின்றனரே என்று, தீவினை நொந்து ஒரு செய்யுளால் துயரத்தை வெளிப்படுத்துகிறார்…
தேரோடு நின்று தெருவோடு அலைகிற செய்திதனை
ஆரோடு சொல்லி முறையிடுவோம் இந்த அம்புவியில்
சீரோடு நாமும் நடந்துகொண்டால் இந்தத் தீவினைகள்
வாராவடா தம்பி சீவலராய மருதப்பனே…
– இச் செய்யுளைச் சொல்லும்போது பூசைத்தாயாரின் கண்களில் நீர்த்துளிகள் அரும்பின. தம்மால்தானே தாயார் அழுகிறார் என்று எண்ணிய சீவலவராயர், அன்னையின் துயர் துடைக்க எண்ணி அதற்கு வழிகேட்கிறார். சொக்கம்பட்டி ஜமீன் ஸ்தானாதிபதி பொன்னம்பலம் பிள்ளையின் தமிழ்ப் பற்றை நன்கு அறிந்திருந்த பூசைத்தாயார், யாரும் அறியாதபடி சென்று அவரைச் சந்திக்க வழிசொல்கிறார்.

ALSO READ:  TN Governor lambasts TN govt’s lackadaisical attitude in tackling drug menace

சீவலவரும், பிள்ளையின் வீட்டுக்குச் செல்கிறார். அவரை யாரென்று கேட்டு அடையாளம் தெரிந்து கொண்ட பிள்ளை, அவர்கள் நிலை கேட்டு மிக்க வருத்தமுற்று ஆவன செய்ய உறுதி கொள்கிறார். “நன்கு தமிழ் கற்றவர்; தமிழை அரவணைத்த ஜமீன்தாரிணி’ என்று பூசைத்தாயாரைப் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த பொன்னம்பலம்பிள்ளை, உடனே சொக்கம்பட்டி ஜமீனைச் சந்தித்து விஷயத்தை எடுத்துச் சொல்கிறார்.

“”தமிழைக் காத்த ஒரு ஜமீனை நாம் பாழ்படுத்திவிட்டோம்; நமக்கும் ஊத்துமலைக்கும் நேரடிப் பகை இல்லையே – அவர்கள் சிவகிரிக்கு உதவி செய்தார்கள் என்பதைத் தவிர! மேலும் அவர்கள் தங்களுக்கு ஒருவகையில் உறவினரும்கூட! ஊத்துமலை ஜமீன்தாரிணியும் இருபிள்ளைகளும் இப்போது உயிருடன் இருப்பதாகத் தெரிகிறது. நாம் தமிழைப் போற்றவாவது ஊத்துமலை ஜமீன் மீண்டும் தழைக்க உதவிசெய்ய வேண்டும்” என்று பொன்னம்பலம் பிள்ளை சொல்ல, பெரியசாமிச் சின்னணைஞ்சாத் தேவரும் “அப்படியே செய்யும்’ என்று சொல்லிவிடுகிறார்.

அதன்பிறகு ஊத்துமலை ஜமீன் மீண்டும் உருப் பெறுகிறது. தமிழ்த் தொண்டே, அந்த ஜமீன் மீண்டும் தழைக்கக் காரணமாயிற்று. இது பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நடந்த சம்பவம்.

இப்படிப்பட்ட வரலாற்றைத் தன்னுள்ளே கொண்டு இன்று இடிந்துபட்டு அரைகுறையாய் இருக்கும் அந்த அரண்மனையைக் கண்டபோது மனம்
துணுக்குற்றது. எந்த ஊருக்குப் போனாலும் அவ்வூரின் எழுபதைக் கடந்த பெரியவர்களுடன் ஏதாவது பேசிக் கொண்டிருப்பது என் வழக்கம். அதேபோல் அங்கே நவநீதகிருஷ்ணஸ்வாமி கோயில் அருகே இரா.உ.விநாயகம்பிள்ளை என்பாரிடம் பேசிக் கொண்டிருந்தேன். எண்பதைத் தொட்டிருப்பவர். பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலைபார்த்தவர். தமிழ் ஆர்வலர். ஜமீனைப் பற்றிய மேலும் பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தார். அவர் சொன்னதிலிருந்து இரண்டு விஷயங்களை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

ஊத்துமலை ஜமீன்தார் இருதாலய மருதப்பத்தேவர் நல்ல தமிழ்ப் புலவர். புலவர்களை ஆதரிப்பவர். அவருடைய ஆஸ்தான கவியாக இருந்தார் அண்ணாமலை ரெட்டியார். இருவருக்கும் தமிழால் நெருக்கம் அதிகம். ஒருமுறை வழக்கமான சமையல்காரர் எங்கோ சென்றுவிட, புதிய நபர் அந்தப் பொறுப்பை ஏற்றார். அவருடைய சமையலை ஜமீன் உட்பட அனைவரும் சாப்பிட்டனர். அப்போது தமது வழக்கமான “கிண்டல்’ தொனியில் அண்ணாமலை ரெட்டியார், இந்த சமையல்காரனின் சமையலில் “உப்பும் இல்லை; உரப்பும் இல்லை’ என்று தோன்றும் வகையில் ஒரு பாடலைச் சொன்னார்.

(இந்தப் பாடல் தமக்கு சரியாக நினைவில்லை என்றார் விநாயகம் பிள்ளை. இதே ஊரைச் சேர்ந்தவரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குநரும் தமிழறிஞருமான திரு.சா.வே.சுப்பிரமணியன் அவர்களைச் சந்தித்தேன். வீ.கே.புதூரையும் ஜமீனையும் பற்றி அவரும் நிறையச் சொன்னார். “1218 இல் வீரகேரளன் என்ற மலையாளதேச மன்னனால் உருவாக்கப்பட்டது இவ்வூர். தென்காசிக்கு அடுத்து இந்தப் பிரதேசத்தில் பெரிய ஊராக இருந்தது இதுதான். மருதப்பர் காலத்தில் 38 புலவர்கள் ஜமீனில் இருந்தனர். இந்தளவுக்கு தமிழ்ப் புலவர்கள் அதிகம் இருந்தது இந்த ஜமீனில்தான்!” என்றவர், இந்தப் புலவர்களின் பாடல்களைத் திரட்டிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். விரைவில் நமக்கு நல்லதொரு தமிழ் நூல் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.)

ஜமீனில் எல்லாம் இருக்க, ஒரு கவியின் வாயால் ஜமீன் உணவில் “உப்பு இல்லை; உரப்பு இல்லை’ என்று “இல்லை’ என்கிற வார்த்தை வந்துவிட்டதே என்று வருந்திய மருதப்பத்தேவர், சமையல்காரரைக் கூப்பிட்டு கண்டித்தார். நடுங்கிய சமையல்காரர், கவி ரெட்டியாரிடம் சென்று, “என்னங்க இப்படிப் பாடிட்டீங்க! ஜமீன் என்னைக் கோபித்துக் கொண்டார். அதை நீங்க என்னிடம் தனியாகச் சொல்லியிருக்கக் கூடாதா?’ என்றார்.

ALSO READ:  Police arrests professor for harassing student to join for drinking session with an amorous intent, while other is on run!

மறுநாள் வழக்கம்போல் சாப்பாடு. அன்றைய உணவைப் பற்றி கவி என்ன நினைக்கிறார் என்று தெரிந்துகொள்ள மருதப்பர் ஆசைப்பட்டு, “இன்றைய சமையல் எப்படி?’ என்று கேட்க, கவியோ “சாப்பாடு தேவாமிர்தம்’ என்று ஒரு பாடலையும் பாடினார். மருதப்பருக்கு சிரிப்பு.

“என்ன… சமையல்காரருக்குப் பயந்து பணிஞ்சுட்டீரோ? நேற்று உப்பும் இல்லை; உரப்பும் இல்லை என்றீர். இன்று தேவாமிர்தம் என்கிறீரே!” என்று நக்கலாகக் கேட்க, கவி சொன்னார்… “நான் நேற்று சொன்னதையேதான் இன்றும் சொல்கிறேன்…” என்றார். மருதப்பருக்கோ ஆச்சரியம்.
“தெளிவாகச் சொல்லும்” என்று கேட்க, அண்ணாமலை ரெட்டியார் சொன்னார்.. “தேவாமிர்தத்துக்கு ஏது உப்பும் உரப்பும்?”
நயமான விஷயம்தான். பாடல் தெரிந்தால் இன்னும் சுவைபட இதை அனுபவிக்கலாம்.

இன்னொரு நாள்… “ஜமீனில் தென்னைமரம் வைகுந்தத்தைவிட உயரம். தேங்காய்கள் வைகுந்தத்துக்கு மேலே காய்க்கின்றன. அதனால் அமிர்தத்தைவிட இனிப்பாயிருக்கின்றன” என்று பாடினார் கவி. மருதப்பருக்கு வருத்தம் ஏற்பட்டது. “என்னதான் நம் ஜமீனை உயர்த்திப் பாடலாம் என்றாலும், வைகுந்தத்தை இப்படி குறைத்துச் சொல்லலாமா?” என்று கேட்க, கவி சொன்னார்… “அங்கே பாருங்கள்… நவநீதகிருஷ்ணஸ்வாமி கோயில் நமக்கு வைகுந்தமல்லவா? கோயில் விமானத்துக்கு மேலே காய்த்திருக்கும் தேங்காய்களைப் பார்த்தால் நான் சொன்னதில் தவறில்லை என்பீர்கள்…”

ஆஹா! சரியாகத்தான் சொன்னார்… இதை எண்ணி மனத்தில் நகைத்துக் கொண்டே கோயிலைப் பார்த்தேன். கோயிலில் விமானம்தான் தெரிந்தது. கோபுரம் இல்லை. அப்படியே எதிர்ப்புறம் பார்த்தால் ஒரு பெரிய அலங்கார வளைவு. சில வருடங்களுக்கு முன் அந்த வளைவில் ஒரு கல்வெட்டைப் படித்தது நினைவில் வந்தது.

“ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் சக்ரவர்த்தியாக முடிசூடுவதை வரவேற்று ஜமீனின் ராஜவிசுவாசத்தை வெளிப்படுத்தும் வண்ணம் கட்டப்பட்ட வரவேற்பு வளைவு’ என்று அந்தக் கல்வெட்டு செய்தி தரும். அதை தற்போது பார்க்க ஆவலோடு அருகில் போனால்… ஏமாற்றம்! கல்வெட்டின் மீது பூப்புனித நீராட்டலும் காதுகுத்தலும் சுவரொட்டிகளாய் ஒட்டப்பட்டு செய்தி அறிவித்தன. சே! நம்மவர்களுக்குத்தான் என்னே அதீத அறிவு!

கல்வெட்டிலும் ஊர் வழிகாட்டும் பலகையிலுமா சுவரொட்டிகளை ஒட்டுவது? இந்த வரலாற்றுச் சின்னங்களெல்லாம் நாம் அடிமைப்பட்ட வரலாற்றைக் காட்டுவன அல்லவா? நாம் மீண்டும் அடிமைப்படாதிருக்க நம் சந்ததிக்கு உத்வேகமும் சுயமரியாதையையும் தருவன அல்லவா? இதே போன்ற வளைவுகளை தென்காசி, நெல்லைநகரம் (டவுன்) போன்ற இடங்களிலும் பார்த்திருக்கிறேன். இவை ஒரே காலத்தில் கட்டப்பட்டவை என்பதை அறிந்துகொண்டேன்.

இதன் வரலாற்று முக்கியத்துவத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதன் ஆஷ்துரையை சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட போது, அவன் சட்டைப் பையிஹருந்து கண்டெடுத்த கடிதத்தை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

வீரவாஞ்சியின் அந்தக் கடிதம்…
மிலேச்ச இங்கிலீஷ்காரர்கள் நம் பாரதநாட்டைக் கைப்பற்றியதோடு நம் இந்துக்களின் சநாதன தர்மத்தை அழிக்கின்றனர். ஒவ்வொரு இந்தியனும் வெள்ளையனை வெளியேற்றி ஸ்வராஜ்யத்தையும், சநாதன தர்மத்தையும் நிலை நாட்ட முயன்று வருகிறான். ராமன், கிருஷ்ணன், சிவாஜி, அர்ஜுனன் முதலியோர் முன்பு தர்மம் வழுவாது எல்லா மதத்தினரும் போற்றும்படி இந்த நாட்டை ஆண்டார்கள். ஆனால் இப்போது பசுமாட்டை அடித்து அதன் இறைச்சியைத் தின்னும் ஐந்தாம் ஜார்ஜ் என்ற மிலேச்சரை இந்தியாவின் சக்ரவர்த்தியாக முடி சூட்டப் போகிறார்களாம். 3000 சென்னை ராஜதானியர்களை சேர்த்திருக்கிறோம். ஐந்தாம் ஜார்ஜ் இந்தியாவில் காலடி எடுத்து வைத்ததும் அவரைக் கொல்ல சபதம் செய்திருக்கிறார்கள். அவர்களுடைய எண்ணத்தைத் தெரிவிக்கும் வகையில் அவர்களின் கடையனாகிய நான் இன்று இந்தச் செயலைத் துணிந்து செய்து முடித்தேன். இதுவேதான் இந்துஸ்தானத்திலிருக்கும் ஒவ்வொருடைய கடமையாகக் கருதவேண்டும்.
இப்படிக்கு
ஆர். வாஞ்சிஐயர், செங்கோட்டை.
– இந்தக் கடிதத்தையும், அந்தக் கல்வெட்டின் நோக்கத்தையும் ஒப்புநோக்கினால் அந்தக்கால அரசியல் சூழலும் நிர்பந்தங்களும் நமக்குப் புரியும். ஒவ்வொரு வருடமும், வாஞ்சிநாதன் தாய்நாட்டிற்காகத் தன் இன்னுயிரை அர்ப்பணித்த ஜூன் 17 ஆம் தேதியன்று காலை 10.50 க்கு செங்கோட்டையில் உள்ள வாஞ்சிநாதன் நடுகல்லுக்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செய்கிறார்கள்… “வாஞ்சி இயக்கம்’ நடத்திவரும் பி. ராமநாதன் என்பவர், பள்ளி மாணவர்களை ஊக்குவித்து, செங்கோட்டை பேருந்துநிலையம் முன்னுள்ள வாஞ்சி சிலைக்கு மாலை அணிவிக்கச் செய்து, வரலாற்று நிகழ்வினை எடுத்துச் சொல்கிறார்.

ALSO READ:  RSS Routmarch: HC tells police to finalise granting permission and routes by 30th noon!

வரலாற்று நிகழ்வினை இளையதலைமுறைக்குச் சொல்வது, தமிழ்ப் பாதுகாப்பு என்று இப்படிப் பார்த்தோம்; இலக்கியப் பாதுகாப்பு தொடர்பான ஒரு செய்தியையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
ஒரு சிற்றிதழ் வெளியீட்டு விழாவில், அந்த இதழைப் பாராட்டிவிட்டு, பொதுவாக இதழ்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, நிகழ்ச்சியில் எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் ஒன்றைச் சொன்னார்.

தீபம் இதழை நடத்திவந்த நா. பார்த்தசாரதி, ஒரு கட்டத்தில் மோசமான பொருளாதாரச் சூழலால் இதழைத் தொடர்ந்து நடத்தமுடியாமல், தலையங்கத்தில் இப்படித் தெரிவித்தார்…
“அநேகமாக இந்த இதழோ அல்லது அடுத்த இதழோ தீபத்தின் கடைசி இதழாக இருக்கும்.’

இதைப் படித்த ஒரு வாசகி கண்ணீர் மல்க ஒரு கடிதத்தையும் தமது ஒரு ஜோடி தங்க வளையல்களையும் அனுப்பி வைத்தார் அதுவும் பெயரை, வெளியிட விரும்பாமல்; பெயரை சுயமுகவரியை எழுதியனுப்பாமல்!

கடிதத்தைப் படித்து கண்கலங்கிய நா.பா., முகம் தெரியாத ஒரு சகோதரி தன் “உடன்பிறந்தானுக்கு அணிவிக்கும் கங்கணமாக’ எண்ணுவதாக அடுத்த தலையங்கத்தில் தெரிவித்து, அவர் மறையும் வரையிலும் இதழைத் தொடர்ந்து நடத்தி வந்தார்.

இதைத் தெரிவித்த திருப்பூர் கிருஷ்ணன், “நல்ல இலக்கிய இதழ்களைத் தொடர்ந்து வாங்கி ஆதரவளிப்பதே தரமான இதழியலுக்கும் இலக்கியத்துக்கும் செய்யும் தொண்டாக அமையும்’ என்றார்.

தாமும் ஓர் தமிழ்ப் புரவலரே என ஒரு தமிழ் நங்கை நல்ல