புதுதில்லி: தான் கேஜ்ரிவாலுக்கு முன்னர் கொடுத்த வேகன் ஆர் காரை திரும்பக் கேட்கிறார் அக்கட்சி நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்த ஆம் ஆத்மி தொண்டர் ஒருவர். ஆம் ஆத்மி கட்சியின் தொண்டரான தில்லியைச் சேர்ந்த குந்தன் ஷர்மா என்பவர் முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஒரு பைக்கும், நீல நிற வேகன் ஆர் கார் ஒன்றும் பரிசளித்திருந்தார். அந்தக் காரைத்தான் அரவிந்த் கேஜ்ரிவால் தினமும் பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்குள் அண்மைக் காலமாக நடந்து வரும் உள்கட்சி குழப்பங்களில் அதிருப்தி அடைந்த குந்தன் ஷர்மாவுக்கு, கட்சியின் அரசியல் விவகாரக் குழுவிலிருந்து யோகேந்திர யாதவையும் பிரஷாந்த் பூஷணையும் நீக்கியது மிகவும் வேதனையைக் கொடுத்துள்ளது. இதனால் தான் கொடுத்த பைக், கார், நன்கொடை நிதி அனைத்தையும் திரும்ப ஒப்படைக்குமாறு குந்தன் ஷர்மா, கேஜ்ரிவாலை தனது டிவிட்டர் பக்கம் மூலம் கேட்டுக் கொண்டார். “கட்சியின் லோக்பால் படி விசாரணை நடத்தாமல் யாதவ் மற்றும் பிரசாந்த் பூஷணை வெளியேற்றியது ஏன்?. தில்லியில் ஆட்சியை அமைப்பதற்காக நான் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிக்கவில்லை, தில்லியில் ஆட்சி அமைப்பதில் மாற்றத்தை ஏற்படுத்துவதே குறிக்கோள்,” என்று குந்தன் ஷர்மா தெரிவித்துள்ளார். நான் பரிசாக அளித்தவற்றை திரும்பக் கேட்கும் அளவுக்கு தரம் தாழ்ந்த நபரில்லை. ஆனாலும், கேஜ்ரிவாலின் கவனத்தை அடையவே இதனை நான் தெரிவித்துள்ளேன்.. என்று குந்தன் ஷர்மா குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், குந்தன் ஷர்மா, ஆம் ஆத்மி கட்சிக்கு தான் வழங்கிய நன்கொடை குறித்த தகவலை தெரிவிக்கவில்லை.
கேஜ்ரிவாலுக்கு கொடுத்த வேகன் ஆர் காரை திரும்பிக் கேட்கும் தொண்டர்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari