அரசியலின் அசிங்கமே..! தமிழகத்தின் களங்கமே…!

Reporters Diary அடடே... அப்படியா? உரத்த சிந்தனை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
thuglak karunanidhi rajaji - 2026

எம்.ஜி.ஆர் முதல்வராகி ஆறு மாதம் ஆகியிருந்தது. திமுக., தலைவர் கருணாநிதி பட்டென்று ஒரு கடிதம், முரசொலியில் எழுதினார். ‘உடன் பிறப்பே… பார்த்தீரா. நடிகரின் ஆட்சியை. ‘நாடெல்லாம் ஊழல். நாளெல்லாம் ஊழல்’ என்று!

அடுத்த நாள் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் இருந்த நாஞ்சில் மனோகரன் ‘தென்னகம்’ பத்திரிகையில் ‘ஏய் கருணாநிதி என்று தொடங்கி புரட்சித் தலைவர் ஆட்சியிலா ஊழல் என்று கேள்விக் கணைகளை வீசி, “அரசியலின் அசிங்கமே. தமிழகத்தின் களங்கமே” என்று பதிலடி கொடுத்திருந்தார்.

அடுத்த நாள் முரசொலியில் அனல் தகித்தது. ‘உடன்பிறப்பே. பார்த்தாயா? நடிகர் கட்சியின் நாளேட்டை படித்தாயா. மந்திரக்கோல் எழுதியதை பார்த்தாயா. யார் இந்த மந்திரக்கோல் (நாஞ்சில் மனோகரன்)? இருக்க இடமில்லாமல் படுக்க பாயில்லாமல் சத்தியவாணிமுத்துவின் வீட்டு தாழ்வாரத்தில் இருந்துகொண்டு மிஞ்சியதை வாங்கி உண்டு கழித்த மந்திரக்கோல் என்று தொடங்கி ‘நேற்று அப்படி இருந்த மந்திரக்கோலுக்கு இன்று அண்ணா நகரில் பத்து லட்ச ரூபாயில் பங்களா எப்படி வந்தது’ என்று போட்டு தாக்கியிருந்தார். 

மீண்டும் அடுத்த நாள் ‘தென்னகம்’ பத்திரிகையில் “ஏ கருணாநிதி என்று தொடங்கி ‘அண்ணாநகர் வீடு பத்து லட்சமா? விற்பதுக்கு நான் தயார். வாங்குவதற்கு நீர் தயாரா’ என்று கேட்டு எழுதி கருணாநிதி சொல்வதை அபாண்டம், அண்டப் புளுகு, வடிகட்டின பொய் என எழுதியிருந்தார்.

அடுத்த நாள் முரசொலியில் ‘உடன் பிறப்பே பார்த்தாயா. நடிகர் ஆட்சியின் மந்திரக்கோல் என்ன எழுதியிருக்கிறது. வீட்டை வாங்க தயாரா? என்று. கேட்கும் போதே உதிரம் கொதிக்கவில்லையா. தோள்கள் துடிக்கவில்லையா. அனுப்பு பணத்தை. வாங்கு வீட்டை’ என்று எழுதி முடித்தார்.

அடுத்த நாளில் இருந்து அந்த அப்பாவித் தொண்டன் பணம் அனுப்பிக் கொண்டே இருந்தான். அனுப்பும் பணம் வந்தபடியே இருந்தது. தினசரி ஒவ்வொருவரும் எவ்வளவு தொகை கொடுத்தார்கள் என்றும் எழுதினார். தங்கள் பெயரை தலைவர் குறிப்பிடுகிறார் என்றால் தொண்டன் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லை ஏது? தொடர்ந்து அனுப்பினான். பதிமூன்று லட்சம் ரூபாய் வரை பணம் சேர்ந்தது. ஆனால் அதன்பின்னர் வீடு வாங்குவது குறித்து மூச்சுப் பேச்சில்லை. 

சிறிது காலத்தில் அரசியல் காட்சிகள் மாறுகின்றன. எம்.ஜி.ஆரிடம் இருந்த நாஞ்சில் மனோகரன் திமுக பக்கம் திரும்பி வந்தார். அதே அண்ணா நகரில் ஒரு கூட்டம். கருணாநிதியும் நாஞ்சில் மனோகரனும் ஒரே மேடையில் இருந்தார்கள்.

மைக்கை பிடித்த கருணாநிதி ‘நாஞ்சில் மனோகரனை வானளாவப் புகழ்ந்தார். நாஞ்சிலாரைப் போல் உண்டா’ என்றார்.

கீழே அமர்ந்திருந்த திமுக., தொண்டன் வழக்கம்போல கை தட்டிக்கொண்டு இருந்தான்… உடன்பிறப்புகள் அசருவதேயில்லை… கைதட்டினார்கள் தட்டினார்கள்… தட்டிக் கொண்டே இருக்கிறார்கள்!

3 thoughts on “அரசியலின் அசிங்கமே..! தமிழகத்தின் களங்கமே…!”

  1. மக்கள் எப்போதுமே மானங்கெட்டவர்கள்

  2. எதுக்க் இந்த செய்திதாளுக்கு இந்த மானங்கெட்ட வேலை.. இப்போ கேவலமா ஆளுங்கட்சியினரின் கட்சியில் நடக்குது.. அத எழதுங்க பார்போம்… எழதமாட்டிங்க.. விஜயகாந்த் சொன்னது ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன்….

  3. டைம்ஸ் மாரி விட்டன .காட்சிகள் மாறிவிட்டன, அaனால் இந்த கைதட்டல் மாறவில்லை, ஓயவில்லை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.