சென்னை: விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 8 குழந்தைகள் மரணம் அடைந்ததற்கு தமிழக அரசை கண்டித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் எட்டு பச்சிளம் குழந்தைகள் இரு நாட்களில் இறந்திருப்பது அதிர்ச்சியையும், வேதனையும் அளிக்கிறது. குழந்தைகளை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் மரணம் நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது. ஏற்கனவே தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் குழந்தைகள் இறந்த போது தமிழக அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான எண்ணிக்கையில் மருத்துவர்கள், நர்சுகள் இல்லை என்றும் மருத்துவமனைகளில் அவசர மருந்துகள் கூட இல்லை என்றும், நான் சுட்டிக் காட்டி இருந்தேன். ஆனால் அதன் பிறகும் இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் தற்போது இந்த சோகமும் நிகழ்ந்திருக்கிறது. தமிழத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும், குழந்தைகள் நல மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் பணியிடங்கள் முழுவதும் நிரப்பபடாமல் உள்ளதாலும், அரசு மருதுவமனைகளிலுள்ள உபகரணங்கள் தரம் குறைந்ததாகவும், சரிவர இயங்காததும் தான் காரணம் என்று பொது மக்கள் கூறுகின்றனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் வாயிலாக வரும் நிதியில் அரசு மருத்துவ மனைகளுக்கு வாங்கப்படுகின்ற உபகரணங்கள் தரமானதாக இல்லை எனவும், இதில் முறைகேடுகள் நடப்பதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. மக்களை பாதுகாக்க வேண்டிய மக்கள் நல்வாழ்வு துறையிலேயே ஊழல் நடக்கின்றது என்றால் அது மக்களின் உயிரோடு விளையாடுவதாகாதா? ஒரு துறையின் அமைச்சர் இருக்கும்போது நெறிமுறைகளின் படி அத்துறையின் செயலாளர் இந்த சம்பவத்திற்காக பதிலை அளித்தால், அத்துறையின் அமைச்சரைப்பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள். இவருக்கு துறையை பற்றி அதிகம் தெரிந்ததை விட அதிலிருந்து வரும் லஞ்ச பணத்தைப்பற்றி அதிகம் தெரிந்தவர் என்பதால் தான் விழுப்புரத்தில் வாய்த்திறக்கவில்லை போலும் என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள். இதுதான் தமிழக அமைச்சர்களின் இன்றைய நிலையாகும். எனவே மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு அரசு ஒதுக்குகின்ற நிதியில் முறைகேடின்றி தரமான உபகரணங்களையும், தேவையான அளவு மருந்துகளையும் வாங்குவதுடன், மருத்துவர்கள், நர்சுகள் என அனைத்து பணியிடங்களையும் நிரப்பி, முழு சுகாதாரத்துடன் அரசு மருத்துவமனைகளை பராமரிக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். – என்று கோரியுள்ளார்.
தெலுங்கு நடிகர் சங்க தேர்தல்: ஜெயசுதா தோல்வி
ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் சங்கத்துக்கு கடந்த மாதம் 29 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. இதில் ராஜேந்திர பிரசாத் 85 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட நடிகை ஜெயசுதா தோல்வி அடைந்தார். செயலாளர் மற்றும் 5 பதவிகளுக்கான தேர்தலிலும் ராஜேந்திர பிரசாத் அணியே வெற்றி பெற்றது. 702 வாக்குகள் கொண்ட இந்தத் தேர்தலில் 394 வாக்குகள் பதிவாகி இருந்தது. இதில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ராஜேந்திர பிரசாத்துக்கு 237 வாக்குகள் கிடைத்தன. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜெயசுதாவுக்கு 152 வாக்குகள் கிடைத்தன. முன்னதாக, நடிகை ஜெயசுதாவுக்கு இச்சங்கத்தில் தலைவராக இருந்த தெலுங்குதேச எம்.பி. முரளி மோகன் ஆதரவு தெரிவித்தார். ராஜேந்திர பிரசாத்துக்கு நடிகர் சிரஞ்சீவி குடும்பத்தினர் ஆதரவு தெரிவித்தனர்.
20ம் தேதி அஜித்தின் அதிரடி ஆரம்பம்
அஜித்தின் 56வது பட பூஜை சமீபத்தில் சாய் பாபா கோயிலில் நடைபெற்றது. விழாக்களில் தான் கலந்து கொள்ள மாட்டர் என்றால் படத்தின் பூஜைக்கு கூட கலந்து கொள்ளவில்லை.
அடுத்த மாதம் அஜித்தின் பிறந்த நாளன்று தல 56வது படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டது. தற்போது ஏப்ரல் 20ம் தேதி படப்பிடிப்பை துவங்க திட்டம் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் முதன் முறையாக அஜித்துடன் இணைந்து ஸ்ருதி ஹாசன் நடிக்கவுள்ளார். அனிருத் ஏற்கனவே அஜித் படத்திற்காக 5 பாடல்களுக்கு இசையமைத்து விட்டார் என்று மற்றொரு புறம் புகைய விட்டு வருகிறார்கள் அஜித் ரசிசகர்கள்.
தங்கம் கிராமுக்கு ரூ.9 குறைவு
சென்னை: தங்கம் கிராமுக்கு ரூ. குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.72 குறைந்து, ரூ.20,128 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,516–க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.340 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.36,765 ஆகவும், ஒரு கிராம் ரூ.39.30 ஆகவும் விற்பனையாகிறது.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி காவல் ஏப்.30 வரை நீட்டிப்பு
திருநெல்வேலி: நெல்லை வேளாண் பொறியாளர் தற்கொலை வழக்கு தொடர்பில் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் காவல் வரும் ஏப்.30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பெரியார் திடலில் மதவெறி அமைப்புகள் நடத்திய வன்முறைத் தாக்குதல்: வைகோ கண்டனம்
சென்னை: பெரியார் திடலில் தி.க.வினர் தாலியறுக்கும் போராட்டத்தை நடத்தியபோது, இந்து அமைப்பினர் சிலர் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தபோது நிகழ்ந்த வன்முறைகளுக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், திராவிடர் கழகம் கடைபிடித்து வருகின்ற கொள்கைகளின் அடிப்படையில், அண்ணல் அம்பேத்கரின் 125-ஆவது பிறந்தநாளான ஏப்ரல் 14-ஆம் தேதி, சில நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து இருந்தது. அரசியல் சட்டம் வழங்கி இருக்கின்ற அடிப்படை உரிமைகளான கருத்து உரிமை, பேச்சுஉரிமை திராவிடர் கழகத்திற்கும் பொருந்தும். அந்த வகையில்தான் பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் தாலி அகற்றும் நிகழ்ச்சியும், மாட்டுக் கறி உணவு அருந்தும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டன. தமிழக அரசு காவல்துறை இந்த நிகழ்ச்சிகளுக்குத் தடை விதித்தபோது, சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் சார்பில் முறையீடு செய்யப்பட்டது. உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது மட்டும் அன்றி, காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. எனவே, பெரியார் திடலில் ஏப்ரல் 14-ஆம் தேதி அன்று காலையில் நிகழ்ச்சிகள் தொடங்கி நடத்தப்பட்டன. தமிழக அரசின் மேல்முறையீட்டின்பேரில், உயர்நீதிமன்றம் மற்றொரு உத்தரவு பிறப்பித்ததால், காலை 10 மணி அளவில் பெரியார் திடலில் நடைபெற்று வந்த நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டு, திராவிடர் கழகத் தோழர்கள் அனைவரும் அமைதியாகக் கலைந்து சென்றனர். இதற்கு இடையே சிவசேனா உள்ளிட்ட இந்துத்துவ மதவெறி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பெரியார் திடலுக்குள் நுழைந்து வன்முறைத் தாக்குதலில் இறங்கி உள்ளனர். திராவிடர் கழக அலுவலகத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. வெடிகுண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பெரியார் திடலுக்குள் நுழைந்த மதவெறிக் கும்பல் திராவிடர் கழகத் தொண்டர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி அராஜகம் செய்துள்ளனர். தமிழக அரசின் காவல்துறை இந்துத்துவ மதவெறிக் கும்பலைத் தடுத்து நிறுத்தாமலும், பெரியார் திடலுக்குள் அத்துமீறி நுழைந்து வன்முறை வெறியாட்டத்தில் இறங்கிய சிவசேனா தொண்டர்களைக் கைது செய்து கடமை ஆற்றாமலும் வேடிக்கை பார்த்துள்ளனர். ஆனால், தங்கள் மீது தாக்குதல் நடத்த வந்த சிவசேனா, இந்துத்துவ வெறியர்களைத் தடுத்த திராவிடர் கழகத் தோழர்கள் மீது , காவல்துறை ஒருதலைபட்சமாக தடியடி நடத்தி இருக்கின்றது. இதில் படுகாயமுற்ற 15-க்கும் மேற்பட்ட திராவிடர் கழகத் தோழர்களைக் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தும் வேலூர் சிறையில் அடைத்துள்ள செயல் வன்மையான கண்டனத்துக்கு உரியது. பெரியார் திடலுக்குள் நுழைந்து மதவெறி கும்பல் தாக்குதல் நடத்த முயன்ற நிகழ்வு மிகவும் கவலை அளிக்கின்றது. தமிழ்நாட்டில் இந்துத்துவ, மதவெறி சக்திகளுக்கு எதிராக, கூர்மையான எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டுள்ள திராவிடர் கழகத் தோழர்களை உடனடியாகத் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். திராவிடர் கழக அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்திய சிவசேனா மதவெறி அமைப்புக்களைச் சார்ந்தோரைக் கைது செய்து சிறையில் அடைப்பதுடன், இனியும் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.
தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு
சென்னை: கல்வி உரிமைச் சட்டத்தின்படி தமிழகத்தின் தனியார் பள்ளிகளில் முறையான மாணவர் சேர்க்கை நடைபெறுவதில்லை. அதைத் தட்டிக் கேட்க கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “கடந்த மத்திய காங்கிரஸ் அரசு 6 முதல் 14 வயது நிரம்பிய அனைவருக்கும் கட்டாய கல்வி கொடுக்கும் வகையில் கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வந்தது. இச்சட்டத்தின்படி அனைத்து தனியார் பள்ளிகளும் ஒவ்வொரு வகுப்பிலும் 25 சதவீத இடங்களில் ஏழை எளிய மாணவர்களை சேர்க்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. இதற்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தமிழகத்தின் தனியார் பள்ளிகளில் முறையான மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதில்லை. அதை தட்டிக் கேட்பதற்கு கல்வித்துறையும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இச்சட்டத்தின்படி பெற்றோர் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க பெரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்த்துக் கொள்ளாமல், தனியார் பள்ளிகள் பல்வேறு சால் ஜாப்புகளை கூறி இழுத்தடித்து வருகின்றன. இதனால் பெற்றோர் எதிர்கொள்கிற வேதனைகளை வார்த்தைகளால் வடிக்க இயலாது. இதுகுறித்து தமிழக அரசு கடுகளவும் கவலைப்படுவதாக தெரியவில்லை. மத்திய கல்வி சட்டத்தின்படி 25 சதவீத ஒதுக்கீட்டை நிறைவேற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பதிலே தமிழக கல்வித்துறைக்கு என்ன தயக்கம்? ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? கடந்த 2013–14 கல்வியாண்டில் 25 சதவீத ஒதுக்கீட்டின்படி தமிழகத்தில் மொத்த இடங்கள் 1 லட்சத்து 43 ஆயிரம். ஆனால் 16 ஆயிரத்து 194 இடங்கள்தான் நிரப்பப்பட்டிருக்கின்றன. 25 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டிய தனியார் பள்ளிகள் 8.8 சதவீதம்தான் ஒதுக்கியிருக்கின்றன. தமிழகத்திலுள்ள 10 ஆயிரத்து 758 தனியார் பள்ளிகளில் 1392 பள்ளிகள் ஒரே ஒரு மாணவரைத்தான் 25 சதவீத ஒதுக்கீட்டின்படி சேர்த்துள்ள கொடுமை நடந்திருக்கிறது. தமிழ்நாட்டில்தான் இவ்வளவு குறைவான மாணவர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இச்சட்டப்படி பள்ளிகளுக்கு சேர வேண்டிய முழுக்கட்டணத்தை மத்திய அரசுதான் வழங்குகிறது. இந்நிலையில் இச்சட்டத்தின்படி ஒதுக்கீட்டை இந்த அரசு நிறைவேற்றவில்லை”
சத்துணவுப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்: வைகோ
குழந்தைகள் இறப்பு குறித்து விசாரணை தேவை: ராமதாஸ்
முருகனுக்கு பதில் மாரியம்மன்: ‘அம்மா’வுக்காக அமைச்சர்கள் எடுத்த இளநீர் காவடி!
கரூர்: அ.தி.மு.க வில் ஒவ்வொரு அமைச்சரும், அம்மாவிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் பக்தி என்ற பெயரில் பொதுமக்களையும், ஆண்டவனையும் கோயிலுக்கு வரும் பக்தர்களையும் வாட்டி வருவதை ஆங்காங்கே காண முடிகிறது.
அதன் தொடர்ச்சியாக முருகனுக்கு பிடித்த நேர்த்திக்கடனான காவடி எடுப்பது காலம் காலமாக தமிழர்கள் செய்து வந்த ஒரு நேர்த்திக்கடன் ஆனால் இன்று (17-04-15) கரூர் மாவட்டத்தில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான வி.செந்தில் பாலாஜி தலைமையில், நெடுஞ்சாலை துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அனைத்து தொண்டர்களும் அமராவதி ஆற்றில் இருந்து இளநீர் காவடி எடுத்து வந்து ஏதோ ஒரு முருகன் கோயிலுக்கு செல்வார்கள் என்று பொதுமக்கள் எதிர்பார்த்த நிலையில் கரூர் மாரியம்மன் கோயிலுக்கு சென்றனர். பக்தகோடிகளை மட்டுமில்லாமல் விஷ்வ இந்து பரிசத், இந்து முன்னணி, பாரதீய ஜனதா கட்சியினர் என பல்வேறு அமைப்பினரும், கட்சியினரும் இதற்கு கண்டன் தெரிவித்துள்ளனர். அதாவது எங்களது காலத்தில் முருகனுக்கு தான் பால்காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி என பல வகை காவடிகளை எடுப்பது வழக்கம்.
ஆனால் வழக்கத்திற்கு மாறாக அம்மா அம்மா என அம்மனையும், முருகனையும் இழிவு படுத்தும் விதமாக இந்த செயல் விளங்குவதாக பல்வேறு கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை சேலத்தில் இருந்து கரூர் நோக்கி வந்த அரசுப்பேருந்து போக்குவரத்து துறை அமைச்சர் ஊர் அருகே தளவாபாளையம் பகுதியில் தீடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது அதிர்ஷ்டவசமாக 26 பயணிகள் உயிர் தப்பினர். ஒரு வேளை அதற்காக இந்த காவடியா, இல்லை போக்குவரத்து துறை ஊழியர்களின் பேச்சுவார்த்தை சுமூக மாக முடிய வேண்டும் என இந்த காவடியா ? என பல்வேறு கட்சியினர் குழப்பத்தில் இருக்கின்றனர். கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு இளநீர் காவடி எடுத்தவர்களுக்கு ரூ 500 ம் அங்கப்பிரதட்சனை செய்தவர்களுக்கு ரூ 2 ஆயிரமும் வழங்கப்பட்டது.
இது மட்டுமில்லாமல் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த மாரியம்மன் திருக்கோயிலில் கோயில் கர்ப்பகிரகத்தை இது வரை எந்த தொலைக்காட்சியும், நாளிதழ்களில் வேலை பார்க்கும் புகைப்பட கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் எடுத்ததில்லை. எடுக்கவும் கூடாது என்று அங்கே போர்டும் வைக்கப்பட்டுள்ளது. அம்மாவை காப்பாற்ற நினைத்து அம்மனை களங்கப்படுத்தும் செயலாக இந்த செயல் இருந்ததாக உண்மையான பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து புரட்சித்தலைவி அம்மா வாழ்க என கோஷம் பாட மாரியம்மன் கோயிலை அமைச்சர் செந்தில்பாலாஜி அங்கப்பிரதட்சனம் செய்தார். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் கோயிலுக்கு வந்த பக்தர்கள் அம்மன் கோயிலா ? இல்லை அம்மா கோயிலா என்று குமுறுலுடன் சென்றனர். மேலும் இந்நிகழ்ச்சியினால் கரூர் ஐந்து ரோட்டில் இருந்து மாரியம்மன் கோயில் வரை போக்குவரத்து 3 மணிநேரம் பாதிக்கப்பட்டது.
அ.தி.மு.க வின் பொதுச் செயலாளர் அ.தி.மு.க தொண்டர்களுக்கு தயவு செய்து ஒரு அன்புக்கட்டளை இட வேண்டும் என்று பொதுமக்களும் சமூக நல ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். என்னவெனில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர் அல்லது அதிகார வர்க்கத்தில் நேர்த்திக்கடன், வேண்டுதல் என்ற பெயரில் பொதுமக்களுக்கு முழுவதும் இடைஞ்சல், முகம் சுளிக்கும் வகையில் கூட்டத்தை கூட்டி அம்மாவின் பெயரை களங்கப்படுத்துவது போல் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

