Home Blog Page 6090

ராஜீவ் கொலைவழக்கு: மறுவிசாரணை கோரிய மனு தள்ளுபடி

மதுரை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை மறுவிசாரணை செய்ய உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சாந்தகுமரேசன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இவர்கள் விடுதலையானால் மகிழ்ச்சி அடைவேன் என ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரி ரகோத்தமன் கூறினார். இந்த விசாரணையின்போது சிபிஐ இயக்குநராக இருந்த டி.ஆர்.கார்த்திகேயன், இந்த வழக்கில் குற்றவாளிகளின் தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்றும், அமெரிக்காவின் சிஐஏக்கு இதில் பங்குண்டு என்றும் கூறினார். எனவே, இந்த வழக்கை மறுவிசாரணை செய்யுமாறு உத்தரவிட வேண்டும் … என கூறப்பட்டிருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எஸ்.மணிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கை மறுவிசாரணை செய்யக் கோரி இந்த நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடியாது. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. தேவையென்றால் மனுதாரர் உச்ச நீதிமன்றத்தை நாடலாம் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

ஆக்ரா அருகே சர்ச் மீது தாக்குதல்: கிறிஸ்துவர்கள் போராட்டம்

church-agra-vandalised ஆக்ரா: ஆக்ரா அருகே சர்ச் ஒன்றின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து கிறிஸ்துவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கே போலீசார் குவிக்கப்பட்டனர். உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே பிரதாப்பூர் பகுதியில் ஆங்கிலேயர் காலத்து பழைமையான புனித மேரி சர்ச்சில் பங்குத்தந்தை தாப்ரேயின் குருபட்ட வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது. நள்ளிரவில் விழா முடிந்த பின்னர் சர்ச்சைப் பூட்டி விட்டு அனைவரும் சென்று விட்டனர். நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் சர்ச்சுக்கு வந்து, அங்கே திடீரெனத் தாக்குதல் நடத்தி, சிலைகளையும் சேதப்படுத்தியுள்ளனர். பின்னர் சர்ச் கதவைத் திறக்க முயன்றுள்ளனர். ஆனால் கதவு திறக்காததால், சர்ச் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களை அடித்து நொறுக்கினர். இந்த நிலையில் சர்ச்சில் வைக்கப்பட்டிருந்த அலாரம் ஒலித்துள்ளது. இதை அடுத்து, அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனராம். சர்ச் அலாரம் ஒலித்ததைக் கேட்டு பங்குத்தந்தை தாப்ரே அங்கு விரைந்துள்ளார். சர்ச் தாக்கப் பட்டிருந்ததைக் கண்டு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். இதனிடையே சர்ச் தாக்கப்பட்ட செய்தி அப்பகுதியில் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் அங்கு வந்து கூடினர். தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டித்தும், அவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தியும் போராட்டமும், பேரணியும் நடத்தினர். இதனால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை அடுத்து பாதுகாப்புக்காக அங்கே போலீசார் குவிக்கப்பட்டனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய மர்ம நபர்களைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நேதாஜி இயற்கையாகத்தான் மரணம் அடைந்தார்: அனுஜ்தார்

புது தில்லி: நாட்டின் விடுதலைக்காக இந்திய தேசிய ராணுவம் அமைத்து ஆங்கிலேயருக்கு எதிராக போரை நடத்திய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1985ஆம் ஆண்டு இந்தியாவின் பைசாபாத் நகரில் இயற்கையாகத்தான் மரணமடைந்தார் என்று எழுத்தாளர் அனுஜ்தார் கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இரண்டாம் உலகப் போர் நேரத்தில், ஜப்பான் செல்லும் வழியில் தைவானில் விமான விபத்தில் இறந்துவிட்டார் என்று கூறப்பட்டு வந்தது. அதே நேரம், சுபாஷ் ரஷ்யா அதிபராக இருந்த ஸ்டாலினால் கைது செய்யப்பட்டு சைபீரியா சிறையில் கொடூரமாகக் கொல்லப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவின் பைசாபாத் நகரில் 1985ஆம் ஆண்டு வரை நேதாஜி உயிரோடு இருந்தார் என்றும், அவர் இயற்கையாகவே மரணம் அடைந்தார் என்றும் புதிய தகவலைக் கூறி, எழுத்தாளர் அனுஜ் தார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். . “India’s biggest cover up” என்ற நேதாஜி தொடர்பான புத்தகத்தில் அனுஜ்தார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே நேதாஜி உறவினர்கள் நேருஜியால் உளவு பார்க்கப்பட்டனர் என்ற செய்தி பரபரப்பைக் கிளப்பிய நிலையில், நேதாஜி குறித்து தொடர்ச்சியாக பல தகவல்கள் வெளி வந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

விழுப்புரம் மருத்துவமனையில் 8 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு; அமைச்சர் ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 பச்சிளம் குழந்தைகள் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் தொடர்ந்து உயிரிழந்தன. அந்த மருத்துவமனைக்கு அமைச்சர் நேரில் சென்று விசாரித்தறிந்தார். விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கத்தில் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டில் அனுமதிக்கப்படிருந்த சீர்ப்பனந்தல் கிராமத்தைச் சேர்ந்த முனியன்-கோவிந்தம்மாள் தம்பதியரின் 4 நாள் ஆன ஆண் குழந்தை, ஏமப்பேரைச் சேர்ந்த ராகேஷ்-பார்வதி தம்பதியரின் 2 நாள் ஆன ஆண் குழந்தை, கெங்கராயநல்லூரைச் சேர்ந்த இளையராஜா-கலா தம்பதியரின் ஆண் குழந்தை, உளுந்தூர்பேட்டை ஜனார்த்தனன்-இந்திரலேகா தம்பதியின் பெண் குழந்தை ஆகியவை புதன்கிழமை அதிகாலை அடுத்தடுத்து உயிரிழந்தன. இதை அடுத்து சென்னையில் இருந்து மருத்துவக் குழுவினர் இங்கே ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் தொடர்ச்சியாக குழந்தைகள் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த சங்கராபுரம் கடம்பூரைச் சேர்ந்த பரத்-ரேவதி தம்பதியரின் 12 நாள் ஆன ஆண் குழந்தை புதன்கிழமை மாலையிலும், சாலாம்பாளையத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த்-ரம்யா தம்பதியரின் 17 நாள் ஆன ஆண் குழந்தை இரவிலும் உயிரிழந்தது. பின்னர் விருத்தாசலத்தை அடுத்த தொட்டில்மேட்டைச் சேர்ந்த சிவசக்தி-முருகன் தம்பதியரின் 4 நாள் ஆன பெண் குழந்தை இரவு 11 மணியளவில் இறந்தது. இந்த மூன்று குழந்தைகளும் குறைப் பிரசவத்தில் எடைக் குறைவாகவும், மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் உளுந்தூர்பேட்டை அன்பு புதன் அன்று தனது பெண் குழந்தையை இங்கே சேர்த்துள்ளார். அவரது குழந்தையும் வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளது. இதயத் துடிப்பு குறைவாக இருந்த நிலையில், அது உயிரிழந்துள்ளது. இவ்வாறு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரு நாள்களில் அடுத்தடுத்து 8 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அங்கே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இங்கே சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகமானால் மேல் சிகிச்சைக்குக் கொண்டு செல்ல வசதியாக இன்குபேட்டர் வசதியுடன் கூடிய 2 ஆம்புலன்கள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தை அடுத்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வு-குடும்ப நலத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வந்து பார்வையிட்டனர். உடனடியாக மருத்துவர்களிடம் விவாதித்தனர். பின்னர் குழந்தைகள் வார்டுக்குச் சென்று சிகிச்சை பெறும் குழந்தைகள் உடல்நிலை குறித்து இருவரும் கேட்டறிந்தனர்.

அதிமுகவுடன் கூட்டணியா?: வாய்ப்பில்லை என்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்

கோயமுத்தூர் : அ.தி.மு.க.,வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார். பொள்ளாச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மோடி பிரதமரான பின், தமிழகத்தில் பாஜக உறுப்பினர்களாக இணைபவர்கள் எண்ணிக்கை, பல மடங்காக அதிகரித்துள்ளது. ஐந்து மாதங்களில் சுமார் 33 லட்சம் பேர் இணைந்துள்ளனர். தேர்தலைச் சந்திக்கும் வல்லமையும், துணிவும் பாஜக., மற்றும் அதன் கூட்டணிக்கு உள்ளது. எனவே, அதிமுக.,வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். மேலும், பொள்ளாச்சி- கோவை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்படும்; கோவை மேற்கு மண்டலத்தில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும். நிலம் கையகப்படுத்தும் மசோதா, குறைகள் களையப்பட்டு, மாற்றங்களுடன் நிறைவேற்றப்படும். நிலத்தின் சந்தை மதிப்புக்கு ஏற்றதுபோல், இழப்பீடு வழங்கப்படும். விவசாயிகள் நிச்சயமாக இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள். கையகப்படுத்தப்படும் நிலம் தனியாருக்கு அளிக்கப்படாது; அரசு மற்றும் பொதுத் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்… என்றார்.

மெட்ரோ ரயில் பணிகளை விரைந்து முடிக்காவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம்

சென்னை: மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை விரைந்து முடிக்காவிட்டால், திமுக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று அக் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் சென்னை கொட்டிவாக்கத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின்… ஆந்திரத்தில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கருணாநிதி உள்பட அனைவரும் கண்டித்தனர். ஆனால் முதல்வர் பன்னீர்செல்வம் கண்டிக்கவில்லை. 3 நாள்களுக்குப் பிறகு மென்மையாக ஓர் அறிக்கை வெளியிட்டார். தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர்ப் பிரச்னையைப் போக்கஅதிமுக அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. கோடைகாலம் என்றால் தண்ணீர் பிரச்னை வரத்தான் செய்யும். திமுக ஆட்சியிலும் பிரச்னை இருந்தது. ஆனால், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பிரச்னை தீர்க்கப்பட்டது. திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பதற்காகவே வேலூர் குடிநீர்த் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பேரவையில் 110-ஆவது விதியின் கீழ் நெமிலி அருகே கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடங்கப் போவதாகக் கூறினர். அந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரவில்லை. கிழக்கு கடற்கரைச் சாலையில் பேரூரில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் கொண்டுவருவதாகக் கூறினர். அதையும் செய்யவில்லை. திமுக ஆட்சின்போது, சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலங்கள் கொண்டு வந்தோம். மெட்ரோ ரயில் திட்டத்தையும் கொண்டு வந்தோம். அந்தப் பணிகளும் மந்தமாகச் செயல்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை உடனடியாக முடிக்காவிட்டால் மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவோம். அது சிறை நிரப்பும் போராட்டமாக இருக்கும் என்றார்.

“கொஞ்ச நாளைக்கு உங்களோடையே இருக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு.!

18698_10153209347029244_3030028360467212073_n (பாலகிருஷ்ண ஜோஷி) (இது 2011-ல் போஸ்டானது. மறுபதிவு) ஜோஷி என்ற வடக்கத்தி பையன் பெரியவாளிடம் ரொம்ப பக்தி. அவனுக்கு பெரியவாளை தரிசனம் பண்ணியதிலிருந்து ஊருக்கு போகவே மனசில்லை. அவன் நமஸ்காரம் பண்ணிவிட்டு எழுந்ததும் அவனைப் பற்றி விஜாரித்து விட்டு, “இந்த ஊர்ல இருக்கற கோவில் எல்லாத்தையும் தரிசனம் பண்ணிட்டு ஊருக்கு போ” என்றார். பாலக்ருஷ்ண ஜோஷி சற்று தைரியமாக “நன்னா புரியறது பெரியவா. உங்க உத்தரவுப்படியே எல்லாக் கோவிலையும் தரிசனம் பண்ணிட்டு, திரும்ப மடத்துக்கே வந்துடறேன்” பெரியவா லேசுப்பட்டவரா என்ன? சிரித்துக் கொண்டே ” அதான் பிரசாதமெல்லாம் இப்பவே குடுத்துடப் போறேனே! திரும்ப எதுக்கு மடத்துக்கு வரப் போறே? ஓஹோ…….ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டு மத்யான்னம் மடத்துல சாப்டுட்டு பஸ் ஏறலாம்னு முடிவு பண்ணிட்டியாக்கும்? பேஷ்.! பேஷ்!” என்றார். ஜோஷியின் கண்களில் கண்ணீர் கட்டி நின்றது “ஏம்பா அழறே?” “கொஞ்ச நாளைக்கு உங்களோடையே இருக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு. அதனாலே…………” “என்ன…..மடத்துலேயா? இங்க சன்யாசிகள்னா தங்குவா! ஒன்னாட்டம் பசங்களுக்கு இங்க என்ன வேலை? ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டு ஊர் போய் சேரு” சாஷ்டாங்கமாக பெரியவா சரணத்தில் விழுந்தான் “பெரியவா அப்படி சொல்லப்படாது. நேக்கு மடத்துல தங்கி, ஒங்களுக்கு கொஞ்ச நாள் கைங்கர்யம் பண்ணனும்னு ரொம்ப ஆசையா இருக்கு” “நேக்கு கைங்கர்யம் பண்ண நெறைய பசங்கள் இருக்கா. நீ கெளம்பற வழியப் பாரு” ஜோஷி மடத்தைவிட்டுப் போகவில்லை. நான்கு நாட்கள் விடாமல் பெரியவா கண்ணில் படுவதுபோல், அவர் அறை வாசலில் கால் கடுக்க நிற்பான், அவர் போகுமிடமெல்லாம் போவான். ஐந்தாம் நாள் “நீ இன்னும் மெட்ராஸ் போகலை?” தெரியாதவர் போல் கேட்டார். “இல்லை பெரியவா. நான் மெட்ராஸ்லேர்ந்து கெளம்பறச்சே ஒரு சங்கல்பம் பண்ணிண்டு கெளம்பினேன்” “அப்படி என்ன சங்கல்பமோ?” கிண்டலாக கேட்டார் “கொஞ்ச காலம் உங்களோட பாதாரவிந்தங்கள்ள சேவை பண்ணறதுதான் பெரியவா” “சாத்தியமில்லாத சங்கல்பத்தை பண்ணிக்கப்படாது” அங்கிருந்து போய் விட்டார். ஜோஷி மனஸ் தளரவேயில்லை. ரெண்டு நாள் கழித்து தரிசனம் குடுத்துக் கொண்டிருந்தபோது அவனைப் பார்த்த பெரியவாளின் மனஸ் நெகிழ்ந்தது. “ஒங்கப்பாவுக்கு உத்தியோகமா? வியாபாரமா?” “வைர வியாபாரம் பெரியவா” “ஒன்னோட குணத்துக்கு பிற்காலத்ல நீயும் பெரியா வைர வியாபாரியா வருவே. அப்போ……நீ நேர்மையான வைர வ்யாபாரிங்கற பேரை வாங்கணும். சரி! சரி! ஒன் ஆசைப்படியே கொஞ்ச நாள் மத்த பசங்களாட்டம் கைங்கர்யம் பண்ணிட்டு போ” பச்சைக் கொடி காட்டினார் பெரியவா. இரவில் பெரியவா சயனிக்கும் அறைக்குள்ளேயே படுத்துக் கொள்ளும் பாக்யம் பெற்றான். ஒரே சந்தோஷம்! மூன்றாம் நாள் பெரியவா சொன்னார் ” பாலக்ருஷ்ண ஜோஷி…..நீ இனிமே ஒரு கார்யம் பண்ணி ஆகணும்! பகல் பூர எங்கூட இருந்து மத்தவா மாதிரி கைங்கர்யம் பண்ணு. ராத்திரி வேளைல மட்டும் நீ இங்க படுத்துக்க வேணாம்…….” சொல்லி முடிப்பதற்குள் பதறிப்போன ஜோஷி “பெரியவா அப்படி மட்டும் சொல்லிடாதீங்கோ! நானும் மத்தவா மாதிரி இந்த ரூம்லேயே படுத்துக்கறேன். க்ருபை பண்ணணும்” அழுதான். “நான் காரணமாத்தான் சொல்றேன். நீ கேக்கணும்” “சரி கேக்கறேன்” மனசில்லாமல் ஒத்துக் கொண்டான். “அப்டி சொல்லு. ராத்திரி நேரா சமையல்கட்டுக்கு போ! அங்க அடுப்புக்கு பக்கத்ல ஒரு பெரிய மர பெஞ்ச் கெடக்கும். அதுல சௌகர்யமா படுத்துண்டு தூங்கு. விடியக்காலம் எழுந்து பல் தேச்சு, ஸ்நானம் பண்ணிட்டு இங்க கைங்கர்யத்துக்கு வந்துடு…….என்ன புரியறதா?” கறாராக கட்டளையிட்டார். மற்ற பையன்கள் இங்கே இருக்க, தன்னை மட்டும் சமையல்கட்டுக்கு ஏன் அனுப்பினார்? மனஸ் பாரமாக, ஒரு பையனிடம் “ஏண்டா, உங்கள்ள யாரையாவது பெரியவா இதுவரைக்கும் ராத்திரி கோட்டை அடுப்பங்கரைல போய் தூங்க சொல்லியிருக்காளா?” “சேச்சே! எங்க யாரையும் பெரியவா அப்படி சொன்னதே கெடையாது” முகத்தை சுளித்துக் கொண்டு பதில் சொன்னான். ஜோஷிக்கு ஒரே அவமானம். கேவி கேவி அழுதுகொண்டே வெறிச்சோடிக் கிடந்த அடுப்பங்கரை பெஞ்சில் படுத்துக் கொண்டான். ஒன்றும் சாப்பிடவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. விடிந்து ஸ்நானம் பண்ணிவிட்டு, காமாக்ஷி அம்மன் கோவில் சந்நிதியில் உட்கார்ந்து கொண்டான். பெரியவா கைங்கர்யத்துக்கு போகணும் என்று தோன்றவில்லை. மத்யான்னம் மடத்துக்கு வந்து சாப்பிட்டான் திரும்ப காமாக்ஷியிடமே போய் உட்கார்ந்தான். இரவு மடத்து அடுப்பங்கரை. பெரியவா பக்கமே போகவில்லை. மூன்றாம் நாள் காலை பெரியவா ஒரு பையனிடம் “ஏண்டாப்பா, ரெண்டு நாளைக்கு முன்னாடி பாலக்ருஷ்ண ஜோஷின்னு ஒரு பையன் கைங்கர்யம் பண்ண வந்தானே………அவனை காணோமே? எங்கடா போய்ட்டான்? ஒருவேளை சொல்லிக்காம மெட்ராஸ் போயிட்டானோ?” “இல்லே பெரியவா. இங்கதான் இருக்கான்” “பின்ன ரெண்டு நாளா காணோமேடா……….போய் அவனை அழைச்சிண்டு வா”. வந்தான். பெரியவா முன்னால் கூனிக்குறுகி நின்றான். “வா கொழந்தே! எங்க ரெண்டு நாளா ஒன்னை இந்தப் பக்கமே காணோம்? ஒடம்பு கிடம்பு சரி இல்லியோ?”. பதிலே இல்லை. குழந்தைத்தனமான சிரிப்புடன் “என்கிட்டே ஏதாவது வருத்தமோ……..கோபமோ?” “கோபமெல்லாம் இல்லை பெரியவா………மனசுக்கு கொஞ்சம் வருத்தம்” “வருத்தமா! எம்பேர்லையா!!!” ஆச்சர்யமாக கேட்டார். “சொல்லு சொல்லு. ஒன் வருத்தத்தை நானும் தெரிஞ்சுக்கணுமோல்லியோ!……” “வேற ஒண்ணும் இல்லை பெரியவா! மொதல் ரெண்டு நாள் என்னையும் ராத்ரிலே மத்த பையன்களோட இங்கியே படுத்துக்கச் சொன்னேளா…..ரொம்ப சந்தோஷமா இருந்தது. திடீர்னு முந்தாநாள் கோட்டை அடுப்புக்கு பக்கத்ல பெஞ்ச்ல போய் படுத்துக்கோ’ …ன்னு சொல்லிட்டேளே! நான் இவாள மாதிரி இந்த பக்கத்து பிராமணனா இல்லாம, குஜராத்தி பிராமணனா இருக்கறதாலே என்னை அங்க போய் படுத்துக்கச் சொல்லிட்டேளோ.ன்னு மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிடுத்து. அதான் ரெண்டு நாளா இங்க வரலை. என்னை மன்னிச்சுடுங்கோ பெரியவா” கதறிவிட்டான். பெரியவா நிலைமையை புரிந்து கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். மிச்ச பசங்களை வெளியே போகச் சொன்னார். பரம வாத்சல்யத்துடன் ஜோஷியை பக்கத்தில் கூப்பிட்டு ” அடடா…….பாலகிருஷ்ணா……..நான் ஒன்னை கோட்டை அடுப்புக்கிட்ட பெஞ்ச்ல படுத்துக்க சொன்னதுக்கு, நீ இப்பிடி அர்த்தம் பண்ணிண்டுட்டியா? அடப்பாவமே……..நான் அப்டி எல்லாம் நெனச்சுண்டு அதை சொல்லலேப்பா……சின்னப் பையன் தப்பாப் புரிஞ்சுண்டுட்டியே ! இதுக்கு விசேஷ காரணமெல்லாம் இல்லேடா ஜோஷி……..நல்ல வேளை. சொன்னியே…அதுக்கு ஒரே காரணம். இதோ பாருடா”……என்று கூறி, தான் இடையில் கட்டியிருந்த வஸ்த்ரத்தை தொடை வரை நகர்த்தி காட்டினார். ஆச்சார்யாளின் தொடைகளில் அடை அடையாய் கொசுக்கடி தழும்புகள்!! “கொழந்தே! ஜோஷி……..இதெல்லாம் என்னன்னு தெரியறதோ நோக்கு? ராத்திரி வேளைல கொசு கடிச்ச தழும்பு. நான் ஒரு சந்நியாசி. பொறுத்துக்குவேன். நீ….கொழந்தை! ரெண்டு நாள் ராத்திரி நீ கொசுக்கடில ரொம்ப ஸ்ரமப்பட்டதை பாத்தேன். என்னாட்டம் நோக்கும் சேப்பு [சிவப்பு] ஒடம்பு. அவஸ்தைப்படாம நீயாவது சௌக்யமா தூங்கட்டுமேன்னுதான் பத்ரமான எடத்துக்கு ஒன்னைப் போகச் சொன்னேன். அடுப்பு உஷ்ணத்துக்கு கொசு அங்க எட்டிக் கூட பாக்காது! நன்னா தூங்குவே! நீ என்னடான்னா……..வேற விதமா, விபரீதமா நெனச்சுண்டுட்டியே!……” பெரியவா முடிக்கவில்லை..”ஹோ” வென்று கதறி அழ ஆரம்பித்துவிட்டான் ஜோஷி. “பெரியவா என்னை மன்னிச்சேன்னு சொல்லுங்கோ. ஒங்களோட கருணையை புரிஞ்சுக்காம நான் ஏதேதோ ஒளறிட்டேன்” காருண்யமூர்த்தி கைதூக்கி ஆசிர்வதித்தார் “ஜோஷி. பிற்காலத்ல நீயும் சிறந்த வைர வியாபாரிய வருவே. ஞாயமான வெலைக்கு வித்து நல்லபடி வியாபாரம் பண்ணு” ஆசிர்வதித்தார் ……………………………………………………………………………………. பின் குறிப்பு. மேற்படி பாலக்ருஷ்ண ஜோஷியிடம் என் மனைவி மூக்குத்தி வாங்கியிருக்கிறாள்.2000 ஆண்டு காலமாகி விட்டார். இந்த விவரம் அவர் மகன் ஸ்ரீதர் ஜோஷியிடம் கேட்டு அறிந்தேன்.பார்க்டவுனில் கடை இருக்கு. வரகூரான்.நாராயணன்.

மோடி – இந்தியாவின் தலைமை சீர்திருத்தவாதி: ஒபாமா புகழ்ந்ததற்கு மோடி நன்றி

வாஷிங்டன்: இந்தியாவின் தலைமை சீர்திருத்தவாதி மோடி என்று அமெரிக்க அதிபர் ஒபாமா குறிப்பிட்டுள்ளதற்கு மோடி அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ‘டைம்’ பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் செல்வாக்குமிகுந்த மனிதர்கள் பட்டியலில், பிரதமர் மோடி இடம் பிடித்துள்ளார். அதில் அவரை, ‘இந்தியாவின் தலைமை சீர்திருத்தவாதி’ என்று அமெரிக்க அதிபர் ஒபாமா எழுதி, மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘டைம்’ பத்திரிகை ஆண்டுதோறும் உலகின் செல்வாக்கு மிகுந்த மனிதர்களைத் தேர்வு செய்து வெளியிட்டு வருகிறது. 2015 ஆம் ஆண்டுக்கான செல்வாக்கு மிகுந்த மனிதர்கள் பட்டியலில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் ஒவ்வொரு தலைவரைப் பற்றியும், மற்றொரு தலைவர் குறிப்பு எழுதியுள்ளனர். அந்த வகையில் பாரதப் பிரதமர் மோடியைப் பற்றி ‘இந்தியாவின் தலைமை சீர்திருத்தவாதி’ என்ற தலைப்பில், அமெரிக்க அதிபர் ஒபாமா குறிப்பு எழுதியுள்ளார். அதில், சிறுவனாக இருந்தபோது, நரேந்திர மோடி தனது குடும்பத்துக்கு ஆதரவாக தந்தைக்கு டீ விற்பனை செய்ய உதவியுள்ளார். இன்றைக்கு அவர் உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர். அவரது வாழ்க்கை வறுமையில் இருந்து பிரதமர் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது. இது இந்தியாவின் எழுச்சி, ஆற்றல், திறனைக் காட்டுகிறது. இந்தியாவில் வறுமையை நீக்குவது, கல்வி மேம்பாடு, பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் அதிகாரம் வழங்குதல், பருவ நிலை மாற்றத்துக்கு மத்தியிலும் இந்தியாவின் உண்மையான பொருளாதார வளத்தை சீர் தூக்குவதற்கு லட்சிய திட்டங்களை வைத்துள்ளார் மோடி. இந்தியாவைப் போன்று, அவர் நவீனத்தையும், பழமையையும் கடந்து செல்கிறார். யோகா பயிற்சி செய்கிற அவர், இந்திய மக்களுடன் டுவிட்டரில் தொடர்பு கொள்கிறார். டிஜிட்டல் இந்தியாவை அவர் கற்பனை செய்து பார்க்கிறார். அவர் வாஷிங்டன் வந்த போது, அவருடன் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் நினைவுச் சின்னத்துக்கு சென்றேன். நாங்கள் மார்ட்டின் லூதர் கிங், மகாத்மா காந்தி ஆகியோரின் போதனைகளை பிரதிபலித்தோம். எங்கள் நாடுகளில் உள்ள பன்முகத் தன்மையின் பின்னணி, மத நம்பிக்கை எப்படி போற்றிப் பாதுகாக்கத் தக்க வலிமை வாய்ந்தவை என்பதை இருவருமே விவாதித்தோம். மேலும், 100 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் இணைந்து வாழ்வது, உலகுக்கே ஊக்கம் தரக்கூட்டிய எழுச்சியூட்டும் முன்மாதிரி என்று மோடி விவரித்துள்ளார் என்று ஒபாமா அந்தக் குறிப்பில் எழுதி உள்ளார்.  

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் புகழாரத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதில் தெரிவித்துள்ளார். ‘டைம்’ பத்திரிகைக்கும், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் மோடி தெரிவித்துள்ள நன்றிக் குறிப்பில், அன்புள்ள ஒபாமா, உங்கள் வார்த்தைகள் இதயத்தைத் தொட்டு, எழுச்சியூட்டின. நன்றி டைம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மனைவி கொலைக்கு பழி தீர்க்க 4 கொலைகள்: 20 ஆண்டுக்குப் பின் தொழிலதிபர் கைது

சென்னை: தனது மனைவியைக் கொன்றவர்களைப் பழிதீர்க்கும் விதமாக, 4 கொலைகளைச் செய்த தொழிலதிபர் 20 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டார். மிரட்டி பணம் பறிக்க முயன்ற கூட்டாளியால் அவர் சிக்கியது குறிப்பிடத்தக்கது. சென்னை கொருக்குப்பேட்டை இளைய முதலி தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராமச்சந்திரன்(55). இவர் மகன் பிரகாஷ்(27) கடந்த 11 ஆம் தேதி கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் தன் தந்தையைக் காணவில்லை என புகார் அளித்தார். அவரது புகாரி பேரில் போலீசார் விசாரித்து வந்தனர். திடீரென ஏப்.13ஆம் தேதி தனது தந்தை ராமச்சந்திரனை யாரோ கடத்தியுள்ளதாக போலீஸில் மீண்டும் பிரகாஷ் புகார் அளித்தார். இதை அடுத்து காணாமல் போனவர் குறித்த வழக்கு கடத்தல் வழக்காகப் பதிவு செய்யப்பட்டு, ராமச்சந்திரனை போலீஸார் தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில், ராமச்சந்திரனின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரித்தனர். அதில், அவர் கொடுங்கையூர் பகுதியில் இருப்பது தெரிந்து அங்கே சென்று ராமச்சந்திரனை மீட்டனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தன் நண்பர் தியாகராஜன்(56) என்பவருடன் சேர்ந்து கடத்தல் நாடகம் ஆடியது தெரியவந்தது. கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரான அன்புஞானத்துரை என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியின் கொலைக்கு பழிக்குப் பழியாக 4 கொலைகளைச் செய்ததாகவும், அதற்கு தான் உதவியதாகவும், தற்போது கருத்து வேறுபாடால் பிரிந்து விட்டதால் அன்புஞானத்துரையை மிரட்டி பணம் பறிக்கவே இந்த நாடகம் ஆடியதாகவும் அவர் போலீஸாரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், பிடிபட்ட இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று மேலும் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது போலீஸாருக்கு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. தொழிலதிபர் அன்புஞானத்துரையின் நெருங்கிய நண்பர் ராமச்சந்திரன். 20 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த அன்புஞானத்துரையின் மனைவி ஜான்சிராணி மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். வீட்டில் இருந்த 60 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணம் அப்போது கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் நடத்திய விசாரணையில், தொழில் போட்டி காரணமாக அன்புஞானத்துரையின் மனைவி கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இது தொடர்பாக மாரியப்பன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தக் கொலை வழக்கில் இருந்து 1996ஆம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்தார் மாரியப்பன். இதை அறிந்து, தனது மனைவி கொலைக்கு பழி தீர்க்க எண்ணிய அன்பு ஞானத்துரை, ராமச்சந்திரனின் துணையுடன் மாரியப்பனை வெட்டிக் கொன்று, உடலை கூடுவாஞ்சேரி பகுதியில் புதைத்துவிட்டார். ஜான்சிராணியைக் கொலை செய்த கூலிப்படையைச் சேர்ந்த முத்து என்பவரை 1998ஆம் ஆண்டு கொலை செய்தார். மாரியப்பன் சிறையில் இருந்தபோது, ஏற்கெனவே திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ராமச்சந்திரனின் மற்றொரு நண்பரான முருகன் என்பவரிடம், அன்புஞானத்துரையின் மனைவியை தான் கொலை செய்யவில்லை என்றும், அவருடைய தம்பிதான் கூலிப்படை வைத்து கொலை செய்தார் என்றும் மாரியப்பன் கூறியிருந்தார். மாரியப்பன் கொலை செய்யப்பட்டதும் முருகன் சிறையில் இருந்தபடியே அன்புஞானத்துரையை மிரட்டி பணம் பறித்துள்ளார். இந்நிலையில், 1999ஆம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்த முருகனையும் அன்புஞானத்துரை கொலை செய்தார். பின்னர் 2002ஆம் ஆண்டு அன்புஞானத்துரையின் தம்பி பால்அன்பழகன் சென்ற கார் மீது லாரியை மோதி கொலை செய்துவிட்டு, விபத்தில் அவர் இறந்ததாக நாடகம் ஆடினார். இந்தத் தகவல்கள் அனைத்தும் ராமச்சந்திரனை விசாரித்ததில் தெரியவந்தது. இதையடுத்து 4 கொலைகள் செய்ததாக தொழிலதிபர் அன்புஞானத்துரையை போலீசார் கைது செய்தனர். மேலும், கொலைக்கு உதவியதாக ராமச்சந்திரனையும் கைது செய்தனர். இந்தக் கொலை வழக்குகள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 20 ஆண்டுகளாக நடந்த 4 கொலை வழக்குகளில் சிக்காமல் இருந்து வந்த தொழிலதிபர், மிரட்டி பணம் பறிக்க முயன்ற முன்னாள் கூட்டாளியின் கடத்தல் நாடகத்தால் வசமாக சிக்கிக் கொண்டார்.

ரூ. 1 கோடி சாக்லேட் மூலப் பொருளுடன் கன்டெய்னர் லாரி கடத்தல்: 2 பேர் கைது

lorry-containerசென்னை: சென்னையில் ரூ.1 கோடி மதிப்புள்ள சாக்லேட் மூலப் பொருள்களுடன் கன்டெய்னர் லாரியைக் கடத்தியதாக கிடங்கு உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை பாரிமுனை, அங்கப்பநாயக்கன் தெருவைச் சேர்ந்தஜோ சப் (44) வெளிநாடுகளுக்கு பொருள்களை அனுப்ப அனுமதி பெற்றுத் தரும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் சென்னை பொன்னேரியில் உள்ள தனியார் சாக்லேட் மூலப்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து இத்தாலியில் உள்ள சாக்லேட் நிறுவனத்துக்கு சாக்லேட் மூலப் பொருள்களை அனுப்ப இருந்தார். இதை அடுத்து ஏப். 8-ஆம் தேதி 5 கன்டெய்னர் லாரிகளில் பல கோடி மதிப்புள்ள மூலப் பொருள்களை ஏற்றி சென்னை துறைமுகத்துக்கு அனுப்பினார். ஆனால் இதில் ஒரு லாரி மட்டும் துறைமுகத்தைச் சென்று அடையவில்லை. இதுகுறித்து ஜோசப் விசாரித்ததில், அந்த லாரி ரூ. 1 கோடி சாக்லேட் மூலப் பொருளுடன் கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. லாரி கடத்தல் குறித்து புழல் காவல் நிலையத்தில் ஜோசப் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த லாரி கடத்தப்பட்டு, புழல், எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள அ.சகாயராஜ் (30) என்பவரது கிடங்கில் நிறுத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அங்குச் சென்று, அந்த கன்டெய்னர் லாரியை பறிமுதல் செய்து சகாயராஜையும் கைது செய்தனர். அவரிடம் பெற்ற தகவலின்படி, லாரியைக் கடத்தியதாக மாதவரம், பொன்னியம்மன்மேடு முனுசாமிநகரைச் சேர்ந்த தி.சச்சின் குப்தா (28) என்பவர் கைது செய்யப்பட்டார். இந்தக் கடத்தல் தொடர்பாக மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.