வாஷிங்டன்: தமிழ்நாட்டைச் சேர்ந்த, சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழரான ராஜ ராஜேஸ்வரி நியூயார்க் நகர் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ளார். சென்னையில் பிறந்து 16ஆவது வயதில் அமெரிக்காவுக்குச் சென்றவர் ராஜ ராஜேஸ்வரி. இவர்தான் இப்போது, நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள முதல் இந்திய அமெரிக்கர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவருக்கு தற்போது 43 வயதாகிறது. ராஜ ராஜேஸ்வரி இதற்கு முன் ரிச்மண்ட் கவுண்டியின் மாவட்ட அரசு வழக்கறிஞராக 16 ஆண்டுகள் பணி புரிந்துள்ளார். அவரை நியூயார்க் நகர மேயர் பில் டி ப்ளாசியோ, நியூயார்க் நகர குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதியாக நியமனம் செய்தார், அவர் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். நீதிபதியாக தான் நியமிக்கப்பட்டது குறித்து அவர் கூறுகையில், இதை ஒரு கனவு போன்று உணர்கிறேன். இது என் கற்பனைக்கும் எட்டாதது. நான் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவள். இப்பதவியை தந்ததற்காக நன்றி தெரிவிக்கிறேன். எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நான் மேயரிடம் கூறியபோது, இது என் அமெரிக்கக் கனவு மட்டுமல்ல, வேறு எங்கோ ஒரு நாட்டின் மூலையில் இருந்து அமெரிக்காவுக்குக் குடிவரும் ஏதோ ஒரு பெண்ணுக்கு இது தன்னாலும் முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கும். . என்று கூறினார். தற்போது, இரண்டு ஆண் இந்திய நீதிபதிகள்உள்ளனர். ஜெயமாதவன் நியூ யார்க் நகர ஹவுசிங் கோர்ட்டிலும், அனில் சி சிங், நியூ யார்க் நகர சுப்ரீம் கோர்ட்டிலும் பதவியில் உள்ளனர். சட்டத்துறை மட்டுமல்லாமல், அமெரிக்காவில் நடைபெறும் இந்திய கலாசார நிகழ்வுகள், ஆலய திருவிழாக்களில் பங்கேற்றுள்ள ராஜராஜேஸ்வரி பரத நாட்டியம் மற்றம் குச்சிப்புடி நடனங்களையும் அரங்கேற்றியுள்ளார். தனது தாயார் பத்மா ராமநாதன் பெயரால் பத்மாலயா டான்ஸ் அகாதெமியும் நடத்தி வருகிறார். இதன் மூலம் கலாசார நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
சென்னைப் பெண் நியூயார்க்கின் முதல் இந்திய அமெரிக்க நீதிபதி
நாம் தமிழர் சார்பில் கண்டன போஸ்டர்
தென்காசி நாம் தமிழர் கட்சி சார்பில் ,ஆந்திராவில் செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக கூறி தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி கொன்றவர்களை கண்டிக்கும் வகையில் தென்காசி ,பாவூர்சத்திரம் பகுதியில் கண்டன போஸ்டர்கள் ஓட்டபட்டுள்ளன
சரக்கு வாகனம்- பைக் மோதல்; இரட்டையர்கள் படுகாயம்
பாவூர்சத்திரம்; பாவூர்சத்திரம் புது மார்கெட் அருகே சரக்கு வாகனம் மோதியத்தில் எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த இரட்டையர்கள் குருங்கவனம் ஊரைச்சேர்ந்த கணபதி என்பவரின் மகன்கள் இராமர்[20],லட்சுமணன் [20] என்பவர்கள் மீது மோதியதில் இருவருக்கும் காயம் ஏற்ப்பட்டதையடுத்து நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்
அசத்திய ஆலங்குளம் டி.எஸ்.பி
பாவூர்சத்திரம்; பாவூர்சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆலங்குளம் போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கு மற்றும் பாவூர்சத்திரம் சப் இன்ஸ்பெக்டர் சாமுவேல்ராசையா மற்றும் போலீசார் திடீர் வாகனசோதனை நடத்தினர். அப்போது அங்கு நின்றிருந்த மினிபஸ் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை அழைத்து அவர்கள் சீருடை, லைசென்ஸ், பேட்ஜ், உள்ளதா எனவும் அவர்களின் தோற்றம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து சோதனை நடத்தினர். அப்போது ஒரேஒரு ஓட்டுனர் மட்டுமே ,நேம் பேட்ஜ் மற்றும் அனைத்து உரிய ஆவணங்களுடன் இருந்தார், அவரை பாராட்டிய போலீஸ் துணைசூப்பிரண்டு சங்கு ரொக்கபரிசு வழங்கினார். அதேபோல் மற்ற ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் பஸ் நிலையத்திற்குள் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களில் முறையான ஆவணங்கள் இல்லாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்துடன் அங்கு கடைகள் வைத்திருப்பவர்கள் பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் நடந்து கொள்ள அறிவுறுத்தினார். அதே போல் சந்தேகப்படும்படியாக நபர்கள் யாராவது நடமாடினால் உடனே போலீசுக்கு தகவல் கொடுக்கவும் அங்குள்ள கடைஉரிமையாளர்கள் ,ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களிடம் எடுத்து கூறினர். டி.எஸ்.பி.யின் செயலை பொதுமக்கள் மனதார பாரட்டினர்.
புதுகை திருவரங்குளம் கோயிலில் பிரதோஷம் : பக்தர்கள் பரவசம்
தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மத்திய அரசு மாற்றும்: பியூஷ் கோயல்
சென்னை: தமிழக மக்களின் குறைகளைக் கேட்டு போக்குவதற்காக, மத்திய அரசின் அமைச்சர்கள் அதிகாரிகள் அடங்கிய குழு வரும் மே 2 அல்லது 3ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாக மத்திய மின் துறை இணை அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். சென்னை விமான நிலையம் வந்திருந்த பியூஷ் கோயல், பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழக மக்களின் குறைகளைப் போக்குவதற்காக, மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கிய குழு வரும் மே மாதம் தமிழகம் வரவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை வகுத்துள்ளார். உற்பத்தித் துறை, ஜவுளித்துறை, மீனவர்கள் நலன் தொடர்பான துறைகளில் நலத் திட்டங்கள் பல செயல்படுத்தப் படவுள்ளது, பிரதமர் மோடி, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு மின்சாரம் கிடைக்கும் வகையில் ரூ.3,000 கோடி முதலீட்டில் மின் திட்டங்களை வகுத்துள்ளார். தமிழகம் தேவைப்படும் மின்சாரம் இல்லாமல் சிக்கித் தவித்து வருகிறது. தமிழகத்துக்கு 6,000 மெகா வாட் மின்சாரம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என்று கூறினார்.
விழுப்புரம்: 8 குழந்தைகள் பலியான மருத்துவமனையை அமைச்சர் ஆய்வு
விழுப்புரம்: விழுப்புரத்தை அடுத்த முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகளும் நுரையீரல் தொற்று பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகளும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தன. இந்நிலையில் நேற்று காலை தொடங்கி அடுத்தடுத்து 8 குழந்தைகள் உயிரிழந்ததால் அங்கே பதட்டம் ஏற்பட்டது. இதை அடுத்து குழந்தைகள் உயிரிழந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆய்வு செய்தார். அப்போது, சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, ”குழந்தைகள் இறப்பு இயற்கையான முறையில் நிகழ்ந்துள்ளது. மருத்துவமனையில் உரிய வசதிகள் உள்ளன. எனவே வேறு எந்தக் காரணமும் இல்லை” என்றார்.
மாயமான மலேசிய விமானம்: தேடும் பரப்பை விரிவுபடுத்த நடவடிக்கை
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானமான எம்.எச்.370 விமானம் காணாமல் போய், ஓர் ஆண்டுக்கு மேலாகியும் அதனைத் தேடும் பணி இப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும், குறிப்பிடத்தக்க பலன் ஏதும் இல்லை. இந்தியப் பெருங்கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, ஓராண்டுக்கு முன்னர் காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டிருக்கும் மூன்று நாடுகள் , அடுத்த மாதத்துக்குள் இந்த முயற்சியில் வெற்றி கிடைக்காவிட்டால், தேடும் கடல் பரப்பை இரு மடங்கு விரிவாக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளன. முதலில் தேடும் எல்லையாக சுமார் 60,000 சதுர கி.மீ., பரப்பு நிர்ணயிக்கப்பட்டது. இந்தப் பரப்பில் மட்டும் தேடியுள்ள குழுவினர், இதுவரை மலேசிய விமானத்தைக் கண்டுபிடிக்க முடியாமல், விமானத்தின் சிதறிய பாகங்களோ அல்லது வேறு எந்த விதத் துப்புமோ கிடைக்காமல் தடுமாறி வருகின்றன. கோலாலம்பூரில் சீனா, ஆஸ்திரேலிய மற்றும் மலேசிய நாடுகளின் அமைச்சர்கள் சந்தித்துப் பேசிய பின்னர், இந்த விமானம் இந்த இடத்தில் பறந்திருக்கலாம் என்று அனுமானித்த வான்பாதையின் வழியாக, மேலும் 60,000 கிமீ பரப்பளவுள்ள கடல் பரப்பில் தேடுவதை விரிவாக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, அந்தமானை ஒட்டிய ஒரு சிறுதீவுப் பகுதியில் அந்த விமானம் பறந்ததைப் பார்த்ததாக, தீவு வாசிகள் கூறியிருந்தனர். ஆனாலும் அந்தப் பகுதியிலும் எந்தவிதத் துப்பும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. மாயமான விமானத்தின் கதி என்ன என்பது குறித்து கண்டுபிடிக்காமல் ஓயப் போவதில்லை என்று மூன்று நாடுகளும் முடிவு செய்துள்ளன.
ஆந்திரப் படுகொலை; அதிமுக அரசு மௌனம்: விஜயகாந்த் கண்டனம்
சென்னை: ஆந்திர வனப்பகுதியில் நடந்த படுகொலை சம்பவத்தில் ஆளும் அதிமுக அரசின் மெளனத்தை கண்டிப்பதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டார். அவரது அறிக்கையில், ஆந்திர வனப்பகுதியில் (07.04.2015) அன்று அதிகாலை ஆந்திர வனத்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் நடத்திய துப்பாக்கி சூடு தற்காப்பிற்காக நடத்தப்பட்டதென்று ஆந்திர மாநில காவல்துறையும், வனத்துறை அதிகாரிகளும், கூறியபோதும், அந்த படுகொலை நடந்த நேரம், இடம், பலியானவர்கள் உடம்பில் காணப்பட்ட தீக்காயங்கள் எந்த ஒரு ஆந்திர போலீசார் மீதும் ஒரு சிறுகீறல் கூட இல்லாதது இறந்தவர்கள் பக்கத்தில் போடப்பட்டிருந்த செம்மரகட்டைகளில் எழுதபட்டிருந்த எண்கள் என அனைத்துமே இந்த படுகொலை திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது என்பதை ஊர்ஜிதபடுத்தும் விதமாக இருந்தது. இதை ஆந்திர மனித உரிமை சங்கம் ஆந்திர உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதில் உள்ள உண்மையை உணர்ந்துகொண்ட ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதிகள் மனசாட்சியோடும், நீதிமன்றத்தின் மாண்பை, நிலைநிறுத்தும் பொருட்டும், துப்பகிசூடு நடத்திய காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய ஆந்திர அரசை வலியுறுத்தியது. அதன் பேரில் கொலை வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சம்மந்தப்பட்டவர்கள் யாரும் இது வரையில் கைது செய்யப்படவில்லை. தவறு செய்தவர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிமுக அரசு கடிதம் மட்டுமே எழுதிவிட்டு கைகட்டி வேடிக்கை பார்ப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இது படுகொலைதான் என்று நிரூபிப்பதற்கு இறந்தவர்களில் ஆறுபேரின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்வது மிகவும் முக்கியமான சாட்சியாகும். ஆனால் இதை ஒரு பொருட்டாகவே எண்ணாமல் மக்கள் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்பதைபோல தமிழக அரசு மெளனம் சாதிப்பது, இந்த இருபது பேரில் யாராவது ஒருவர் தமிழக அமைச்சருக்கோ, முதலைமைச்சருக்கோ சொந்தமானவர்கள் என்றால் இப்படி இருப்பார்களா என்பது போன்று மக்கள் மனதில் ஆயிரம் கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தப் படுகொலை சம்பந்தமாக தெரிந்த விஷயங்களை சாட்சியங்களாக இரண்டு பேர் கூறியிருக்கிறார்கள். ஆந்திராவிற்கு தினக்கூலிகளாக வேலைக்கு செல்பவர்கள் பெரும்பாலும் தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்களை சேர்ந்தவர்கள். எனவே இந்த படுகொலை பற்றி இன்னும் அதிகமாக உண்மைகளை தெரிந்த பொதுமக்கள் நீதிமன்றத்திலோ, தமிழகத்தை சார்ந்த சமூக ஆர்வலர்களின் உண்மையறியும் குழுவிடமோ அல்லது காவல்துறையிடமோ தெரிவிக்கலாம் என்றும் தெரிவிப்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே இப்படுகொலை பற்றி தெரிந்தவர்கள் இது போன்ற படுகொலைகள் இனிமேல் நடைபெறாவண்ணமும், இறந்த தமிழர்களின் குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிற காரணத்தினால் அவர்களுக்கு அரசின் மூலம் வேலை வாய்ப்பு மற்றும் இழப்பீட்டு தொகை போன்ற நிவாரணங்கள் கிடைக்க வழி செய்யும் பொருட்டு மேற்கூறியவர்களிடம் உண்மைகளை தெரிவிக்கவேண்டும் என்று பொது மக்களை தேமுதிக சார்பில் கேட்டுக்கொள்கிறேன். – என்று கூறியுள்ளார்.
கணவனுடன் தகராறு: ஓடும் பஸ்ஸில் இருந்து குதித்து பெண் தற்கொலை
சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கணவருடன் ஏற்பட்ட தகராறில், ஓடும் பஸ்சில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மடத்துப்பட்டியைச் சேர்ந்த மாயராஜ் மனைவி சண்முக பிரியா(26). இந்தத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மாயராஜ் சாத்தூர் – விளாத்திகுளம் செல்லும் தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக மாயராஜ் பணி முடிந்து வீட்டுக்கே வருவதில்லையாம். மேலும் வீட்டுச் செலவுக்கும் பணம் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சண்முக பிரியா கணவர் வேலை பார்க்கும் இடத்துக்குச் சென்றுள்ளார். அங்கே மாயராஜைப் பார்த்து வீட்டுக்கு ஏன் வரவில்லை? எனக் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, சாத்தூர்- விளாத்திகுளம் பஸ்சில் மாயராஜ் ஏறியுள்ளார். அப்போது சண்முகப் பிரியாவும் அதே பஸ்சில் ஏறி, நீ வீட்டுக்கும் வருவதில்லை. குடும்பச் செலவுக்கும் பணம் கொடுப்பதில்லை, என்ன பிரச்னை என மாயராஜிடம் கேட்டுள்ளார். அதற்கு மாயராஜன் நீ வீட்டுக்குச் செல், நான் பிறகு வந்து சொல்கிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வேதனை அடைந்த சண்முக பிரியா ஓடும் பஸ்சில் இருந்து திடீரென குதித்ததில், அவருக்கு படுகாயம் ஏற்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அங்கே பெரும் பரபரப்பையும் அனுதாபத்தையும் ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் குறித்து இருக்கன்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

