Home Blog Page 6088

ரயில்வே பாதுகாப்பு வாரம்: நாளை முதல்

தெற்கு ரயில்வே சார்பில் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் ரயில்வே பாதுகாப்பு வாரம், நாளை முதல் துவங்குகிறது. பொதுமக்கள், மற்றும் ஊழியர்களுக்கான பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்கக் கோரும் வகையில், ஏப்.18 சனிக்கிழமை துவங்கி, ஏப்.24 வரை ரயில்வே பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி செய்தி வெளியிட்டுள்ளார்.

ஏப்.30 வரை அக்ரி கிருஷ்ணமூர்த்தி காவல் நீட்டிப்பு

திருநெல்வேலி: நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் சிறைக் காவல் ஏப்.30 வரை நீட்டிக்கப் படுவதாக, நெல்லை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்ட போது, அவர்கள் இருவருக்கும் ஏப்ரல் 17ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது. எனவே, அவர்கள் இருவரும் இன்று பாளையங்கோட்டை சிறையில் காணொளிக் காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் இருவரையும் ஏப்.30 ஆம் தேதி வரை காவலில் வைக்குமாறு நெல்லை நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார். முன்னதாக, பொறியாளர் செந்தில் குமாரின் ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அதனைத்தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அடுத்து, தாமும் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாமா என்று நினைத்திருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி தன் முடிவில் இருந்து பின்வாங்கினார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அவர்களின் காவல் ஏப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

40வது மாடியில் இருந்து விழுந்தும் தப்பிப் பிழைத்த அதிசயம்!

40-floor-dubai-iphone40 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்தும் அதிசயமாக சேதம் ஏதும் ஏற்படாமல் பிழைத்து, ஒரு அதிசய விடியோவையும் பதிவு செய்துள்ளது ஐபோன் ஒன்று. துபையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் கேத்தலின் மரின். அவர் அண்மையில் அங்குள்ள ஒரு கட்டிடத்தின் 40 ஆவது மாடியில் இருந்து மேக மூட்டங்களை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, அவரது கை விரல்களின் நடுவி இருந்து, அவரது ஐபோன் தவறிக் கீழே விழுந்தது. சுமார் 500 அடி உயரம் என்பதால், அந்த ஐபோன் வேகமாகக் கீழே நோக்கிச் சென்று தரையில் மோதி உடைந்து சுக்குநூறாகச் சிதைந்து போயிருக்கும் என்று மிகவும் வருத்தப் பட்டார் கேத்தலின் மரின். இருந்தபோதும், சிதறிய துகள்களையாவது சேர்த்து வைப்போமே என்ற எண்ணத்தில், கீழே சென்று அதனை எடுத்துப் பார்த்தார். அப்போது, ஆச்சரியப் படும் விதத்தில், அந்த ஐபோன் ஒன்றும் ஆகாமல் அப்படியே கிடந்துள்ளது. ஒருவாறு அதனை மீண்டும் இயக்கி, அவர் எடுத்துக் கொண்டிருந்த புகைப்படங்களுடன் சேர்த்துப் பார்த்த போது, 40 மாடிகளில் கீழே விழும் விடியோ காட்சி அதில் பதிவாகியிருந்ததாம். இது குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட விடியோவில், வது மாடியில் இருந்து நழுவிக் கீழே விழுந்தாலும், காற்றில் பயணித்து 40 மாடிகளையும் பார்த்துவிடுவது என்ற முடிவில் என் போன் ஒரு பயணம் வந்தது. ஆனால், அதில் ஒரு கீறல் கூட இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றது.

அரசு ரகசியங்களை கசிய விட்டதாக சீன பெண் பத்திரிகையாளருக்கு 7 ஆண்டு சிறை

kaviuசீனாவில் அரசு ரகசியங்களைக் கசியவிட்டதாக மூத்த பெண் பத்திரிகையாளருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் மூத்த பெண் பத்திரிகையாளர்களில் ஒருவர் காவ் யூ. இவர் கருத்துச் சுதந்திரம் மற்றும் எழுத்துரிமைக்காகப் போராடியவர். சீனாவில் ஆளும் கட்சியாக உள்ள கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான சீன அரசையும், அரசு அதிகாரிகளையும் விமர்சித்து கட்டுரைகள் பல எழுதியவர். இந்நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த ‘ரகசியக் கோப்பு எண்-9’ என்பதை வெளிநாட்டில் இருந்து இயங்கிவரும் சீன ஊடகத்தின் இணையதளங்களுக்கு இவர் கசியவிட்டார் என்று இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்தக் கோப்பில், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் சித்தாந்த செயல்திட்டங்கள் தொண்டர்களுக்கு உத்தரவு பிறப்பித்து இடம்பெற்றிருந்தது. இந்தக் குற்றச்சாட்டின் பேரில் 2014 ஏப்.24 அன்று இவர் மீது தேச விரோதச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இவர் கைது செய்யப்பட்டு ஒரு வருடமாக இவர் மீது வழக்கு நடைபெற்றது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக உள்ளதால் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார். இந்நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக காவ் யூ அறிவித்துள்ளார்.

திரிணமுல் காங்கிரஸ் உள்கட்சி மோதலில் கடைகள் சூறை; கட்சியினர் வாகனங்கள் தீக்கிரை

kolkatta-fire-trinamuool-congress-workersஹவுரா: மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்ட உள்கட்சிப் பூசல் காரணமாக வன்முறை வெடித்தது. இதில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியினரின் லாரிகள், பைக்கள் உள்ளிட்ட வாகனங்களை எதிர்த் தரப்பு தீயிட்டுக் கொளுத்தியது. இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. 11 நாட்களுக்கு முன்னர், ஏப்.6ம் தேதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரு கோஷ்டிப் பகையாளிகளான வினய் சிங் மற்றும் ப்ரதீப் திவாரி இருவருக்குமிடையே துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. ரயில்வே யார்ட்டில் ஒப்பந்தம் தொடர்பாக இருதரப்புக்கும் விரோதம் மூண்டதாகத் தெரிந்தது. அப்போது இரு தரப்பும் சுட்டுக் கொண்டதில் வினய் சிங்கின் தம்பியும் மருமகனும் படுகாயம் அடைந்தார். அப்போது நடந்த மோதலில் துப்பாக்கியால் சுடப்பட்ட வினய் சிங்கின் தம்பி வினோத் சிங், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் கொல்கத்தாவின் ஹவுரா பகுதியில் கடைகளை அடித்து நொறுக்கி துவம்சம் செய்தனர். அவர்களின் அடாவடிக்கு பயந்து, பெரும்பாலான வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். அப்போது, அப்பகுதியில் வந்த 7 லாரிகள், ஒரு கார் என தீ வைத்து எரிக்கப்பட்டது. வன்முறை தலைவிரித்தாடவே, ஏப்.6ம் தேதி கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக் கோரி, வியாபாரிகள் திடீர் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒன் டைம் போனஸ்: டிசிஎஸ் ஒதுக்கியது ரூ.2,628 கோடி

TCSமும்பை: தங்கள் ஊழியர்களுக்கு ஒன் டைம் போனஸ் வழக்குவதற்காக, டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனம், தற்போது ரூ.2,628 கோடியை ஒதுக்கியுள்ளது. கடந்த 2004ம் ஆண்டில் இந்தியாவின் பங்கு பரிவர்த்தனைச் சந்தையில் பட்டியலிடப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, டிசிஎஸ் நிறுவனம், அதன் ஊழியர்களுக்கு ஒன் டைம் போனஸ் வழங்க உள்ளது. இதற்காக ரூ.2,628 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்திய நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வழங்கும் மிகப் பெரிய ஒன் டைம் போனஸ் இதுதான். டிசிஎஸ்ஸில் தற்போது பணிபுரியும் 2.5 லட்சம் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் எதிர்பாராத பரிசுமழையாக அமைந்துவிட்டது. அதுவும் இந்த ஒன் டைம் போனஸை ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே கொடுக்க உள்ளது ஊழியர்களுக்கு ஓர் அதிசய அதிர்ச்சியாகத்தான் இருக்கும். வருடத்துக்கு ஒரு வார சம்பளத்தை கணக்கிட்டு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. உலக அளவில் டிசிஎஸ் நிறுவன கிளைகளில் சுமார் 3,00,000 பேர் பணியாற்றி வருகின்றனர். நிறுவனத்தில் குறைந்தது ஓர் ஆண்டு பணியாற்றிய அனைத்து ஊழியர்களும் இந்த போனஸ் பெறத் தகுதி பெற்றவர்கள் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் மரணம்: மிஸ் நேபாள் போட்டி ஒத்தி வைப்பு

fanta-miss-nepalகாத்மாண்டு: நேபாள முன்னாள் பிரதமர் சூர்ய பகதூர் தாபாவின் மறைவை ஒட்டியும், இறுதிச் சடங்கு இன்று நடைபெறுவதை முன்னிட்டும், நேபாள அரசு இன்று அரசு முறை துக்கம் கடைப்பிடிப்பதாக அறிவித்திருந்தது. இதனால், அங்கே விழாக்கள் எதுவும் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இன்று மிஸ் நேபாள் 2015 போட்டிகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது ஓத்தி வைக்கப்பட்டது. பான்டா தி ஹிட்டன் டிரஷர் மிஸ் நேபாள் 2015 போட்டி சனிக்கிழமை நாளை மாலை 7.15க்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போட்டியில் 19 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்.

தில்லியில் காலமான நேபாள முன்னாள் பிரதமரின் உடல் தகனம்

bahadur-thapa-nepal-former-pmபுது தில்லி நேபாளத்தின் முன்னாள் பிரதமர் சூர்ய பஹதூர் தாபா காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெற்றது. நேபாளத்தில் 5 முறை பிரதமராகப் பதவி வகித்தவர் சூர்ய பகதூர் தாபா. புற்றுநோய் காரணமாககடந்த மார்ச் 29 இல் புது தில்லி அருகே குர்காவ்னில் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 1990க்கு முன்னர் நேபாளத்தில் மன்னர் ஆட்சி முறை இருந்த போது, இவர் மூன்று முறை ரப்பர் ஸ்டாம்ப் பிரைம் மினிஸ்டர் என்ற அளவில் பதவி வகித்தார். 1990ல் பல கட்சி ஆட்சி கொண்டுவரப்பட்ட பிறகு, இவர் ராஷ்டிரீய பிரஜாதந்த்ரா கட்சியை உருவாக்கி, அதன் மூலம் இரு முறை பிரதமராகப் பதவி வகித்தார். இவருக்கு ஒரு மகன், மூன்று மகள்கள். இவரது மகன் சுனில் பஹதூர் தாபா, நேபாள வர்த்தக அமைச்சராக உள்ளார். தாபாவின் மனைவி சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். இந்நிலையில் தில்லி மெடேந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி அவர் வியாழக்கிழமை நேற்று காலமானார். அவருக்கு வயது 87. இதையடுத்து அவரி்ன் உடல் விமானம் மூலம் நேபாளத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவரின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற்றது. முன்னதாக, ஐந்து முறை பிரதமராக இருந்த சூர்ய பகதூர் தாபா மறைவுக்கு இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இரங்கல் தெரிவித்திருந்தார். நேபாள அரசு இன்று இவரின் இறுதிச் சடங்கு நடைபெறுவதை ஒட்டி, அரசு முறை துக்கம் கடைப்பிடிப்பதாக அறிவித்திருந்தது.

இலங்கையில் மோசமான வாழ்க்கைச் சூழல்: அகதிகளாக மீண்டும் வந்த 5 பேர் கண்ணீர்

ராமநாதபுரம்: இலங்கையில் இன்னும் மோசமான வாழ்க்கைச் சூழல்தான் உள்ளது என்று கூறி, அங்கிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தமிழகத்துக்கு அகதிகளாக வந்துள்ளனர். இலங்கையில் உள்நாட்டுப் போர் தீவிரமாக இருந்த நேரத்தில், இலங்கை திரிகோணமலையைச் சேர்ந்த சத்தியசீலம், மனைவி பரமேஸ்வரி, மகள்கள் விடுதலைச் செல்வி, மேரி, அஞ்சலிதேவி ஆகியோர் இந்தியாவுக்கு அகதிகளாக வந்தனர். 1999ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை ராமேஸ்வரம் அகதி முகாமில் தங்கியிருந்த அவர்கள், 2010 மார்ச்சில், இலங்கைக்குச் செல்ல விரும்பினர். இதை அடுத்து, அதற்கான சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் இலங்கைக்குச் சென்றனர். பின்னர் இலங்கையில் கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வந்த அவர்கள், அங்கே தங்களுக்கான வாழ்வியல் சூழ்நிலைகள் இன்னும் மோசமாகத்தான் இருப்பதாகவும், எனவே அங்கிருந்து மீண்டும் அகதிகளாக வந்துள்ளதாகவும் தெரிவித்தனர். தனுஷ்கோடி கடற்கரை அருகில் உள்ள அரிச்சல்முனைக்கு வந்து சேர்ந்த அவர்கள், தங்களுக்கு இலங்கையில் இத்தனை ஆண்டுகளாக வசிப்பதற்கு ஒரு வீடு கூட வழங்கவில்லை என்று கண்ணீருடன் தெரிவித்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது, இலங்கையில் இருந்து படகில் வருவதற்கு ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 25 ஆயிரம் செலுத்தியதாகவும் அவர்கள் போலீஸாரிடம் கூறியுள்ளனர்.

இலங்கை தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வன்முறை: விசாரணை நடத்த ஐ.நா. வலியுறுத்தல்

Ban Ki-moonகொழும்பு: இலங்கையில் தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வன்முறை தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. சபை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக ஐ.நா. செயலர் பான் கீ மூன் ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு அளித்துள்ள அறிக்கையில்… இலங்கை அரசைப் பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளில் மறு குடியேற்றம் உள்பட முன்னேற்ற நடவடிக்கைகள் சிலவற்றை மேற்கொண்டுள்ளது. இலங்கை ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறைக் குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசு உரிய விசாரணைகளை முன்னெடுத்து நடத்தத் தவறிவிட்டது. இலங்கைத் தமிழ்ப் பெண்கள் மீது, போருக்கு பிறகான 5 ஆண்டு காலப் பகுதியில் கடத்தல்கள், தடுத்து வைத்தல், பாலியல் அத்துமீறல்கள், பாலியல் வன்முறைகள் ஆகியன அதிகரித்துள்ளன. ராணுவ மயமாக்கும் திட்டத்தின்கீழ் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது பாலியல் வன்முறைகள் அத்துமீறி நிகழ்த்தப் பட்டன. இறுதிப் போர் காலப் பகுதியில் தமிழ்ச் சமூகப் பெண்கள் மீது இலங்கை ராணுவத்தினர் பாலியல் வன்முறைகளை மேற்கொண்டனர். ராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டு, 2014ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட பெண்களின் சாட்சியங்கள் இவற்றை நிரூபிக்கின்றன. இனவாத அடிப்படையில் இடம்பெற்ற இந்த வன்முறைகள், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ்ப் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்டன. இந்நிலையில் இலங்கையில் புதிதாகப் பதவியேற்றுள்ள அரசு, அப்போதைய ராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறைகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மாற்று நடவடிக்கைகளையும் பொருளாதார உதவிகளையும், குறிப்பாக போரின் போது கணவரை இழந்த பெண்ணை ஆதாரமாகக் கொண்ட குடும்பங்களுக்கு உரிய உதவிகளைச் செய்ய வேண்டும். -என்று கூறியுள்ளார்.