திருநெல்வேலி: நெல்லை வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அக்ரி கிருஷ்ணமூர்த்தியுடன் பேச சிறை வார்டன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சிறையில் உள்ள அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் வார்டன்கள் பேச சிறை நிர்வாகம் திடீர் தடை விதித்து உள்ளது. அதன்படி, அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் நெருங்கி பேச வேண்டாம் என்று வார்டன்களுக்கு ரகசிய உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது. மேலும், தேவையில்லாமல் ரோந்து சென்று அவரை கண்காணிக்க வேண்டாம் எனவும், அவருக்கு பொருட்கள் எதுவும் வாங்கிக் கொடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மதுரை நகரத்தார் மகளிர் சங்கத்தினருக்கு கரூரில் வரவேற்பு
மதுரை நகரத்தார் மகளிர் சங்கத்தை சார்ந்த 100 மகளிர், வள்ளிக்கண்ணு மாணிக்கம் தலைமையில் ஆன்மீக சுற்றுலாவாக கரூர் பசுபதீஸ்வரர் கோயில், வழிபாட்டிற்கு வந்தனர். அவர்களுக்கு கரூர் நகரத்தார் சங்கத் தலைவர் சுப.செந்தில்நாதன் தலைமையில் சங்க கட்டிடத்தில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. செயலாளர் மேலை.பழநியப்பன், கரூவூரின் சிறப்புகளை விளக்கி பேசினார். மதுரை மகளிர் சங்க நிர்வாகிகள் கரூர் சங்க நிர்வாகிகளிடம் நினைவு பரிசினை வழங்கினர். நகரத்தார் சங்க காப்பாளர் சுப.லெட்சுமணன், பொருளாளர் கே.எம்.குமார், துணை செயலாளர் கரு.ரத்தினம், வங்கி லட்சுமணன், அகல்யா.மெய்யப்பன், ஏ.ஆர்.அண்ணாமலை, ராம்.மெய்யப்பன், வாங்கல் சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஜாமீன் மனு தாக்கல் செய்ய அக்ரி கிருஷ்ணமூர்த்தி விருப்பம்
திருநெல்வேலி: நெல்லை வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வேளாண் துறையில் டிரைவர்கள் நியமனத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் முத்துகுமாரசாமி. அமைச்சர், அதிகாரிகளின் நெருக்கடியே இதற்குக் காரணம் என கூறப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு சிறையில் முதல் வகுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை சிறையில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் விசாரணைக் கைதிகளையும், செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் தண்டனைக் கைதிகளையும் அவர்களது உறவினர்கள் சந்தித்து பேச வழி உண்டு. எல்லா நாட்களிலும் வழக்கறிஞர்கள் சந்திக்க அனுமதி உண்டு. அதனால், சிறையில் இருக்கும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அவரது வழக்கறிஞர் தினமும் சந்தித்து பேசி வருகிறார். பொறியாளர் செந்தில்குமார் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இதுவரை அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யவில்லை. அவரது வழக்கறிஞர் தினமும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை சந்தித்து இது தொடர்பாக ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அக்ரி கிருஷ்ணமூர்த்தி அடுத்த வாரம் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யலாம் என்று கூறப்படுகிறது.
தந்தை, மாமன், சகோதரனால் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான இளம்பெண்!
மேற்கு வங்க மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் தன் குடும்ப உறவுகளாலேயே பாலியல் சித்ரவதைக்கு ஆளானதாக புகார் மனு அளித்துள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ள துப்கவுரி காவல் நிலையத்தில் 16 வயது இளம் பெண் ஒருவர் புகார் அளித்த புகாரில், தந்தை, தாய் மாமன் மற்றும் சகோதரன் என மூவரும் கடந்த 2 வருடங்களாக தன்னை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தியதாகவும், இதில் 2 முறை கர்ப்பமடைந்து அதை கலைத்து விட்டதாகவும், மன உளைச்சல் தாங்க முடியாமல் 4 முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறியுள்ளார். மேலும் இது குறித்து தனது தாயிடம் எடுத்துக் கூறியும், அவர் அதைப் பெரிதாகக் காதில் போட்டுக் கொள்ளாமல், “அவர்கள் ஒன்றும் அந்நியர்கள் இல்லை, உன் உறவினர்கள்” என்று சமாதானம் சொன்னதாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் தனது பள்ளி ஆசிரியர்களில் ஒருவரிடம் தான் அனுபவிக்கும் கொடூரத்தை அந்தப் பெண் கூற, பதறிப்போன ஆசிரியர்கள் அந்தப் பெண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அவர் குடும்ப உறுப்பினர்கள் மீது புகார் கொடுக்கச் செய்துள்ளனர். இதையடுத்து அந்த 3 பேரையும் கைது செய்த போலீசார், தலைமறைவான அந்தப் பெண்ணின் தாயைத் தேடி வருகின்றனர்.
திட்டமிட்டபடி உத்தமவில்லன் வெளியாகும்: ரமேஷ் அரவிந்த்
சென்னை: எதிர்ப்புகள் வந்தாலும், திட்டமிட்டபடி உத்தமவில்லன் படம் வெளியாகும் என்று கூறியுள்ளார் ரமேஷ் அரவிந்த். கமலஹாசன் நடித்து, ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள திரைப்படம் உத்தமவில்லன். இதில் இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாகக் காட்சிகள் இருப்பதாகவும், அவற்றை நீக்கிவிட்டு படத்தை வெளியிட வேண்டும் என்றும் இந்து மத அமைப்புகள் புகார் கொடுத்துள்ளனர். இந்தக் குற்றச்சாட்டை மறுத்து அப்படத்தின் இயக்குனர் ரமேஷ் அரவிந்த் விளக்கம் அளித்துள்ளார். அவர் இதுகுறித்துக் கூறியபோது, உத்தமவில்லன் படத்தில் யாருடைய மனதையும், மத உணர்வுகளையும் புண்படுத்தும் காட்சிகள் எதுவும் இல்லை. 8–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு நாடகக் கலைஞருக்கும் தற்கால கலைஞருக்கும் இடையிலான வாழ்க்கை சார்ந்த படமாகவே இது இருக்கும். இந்தப் படத்தைப் பார்த்து தணிக்கைக் குழுவினர் ’யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். திட்டமிட்டபடி படம் வெளியாகும் என்றார்.
கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: வலுக்கும் கோரிக்கை
சென்னை: கமல்ஹாசன் நடித்து வெளிவரவிருக்கும் படம் உத்தமவில்லன். இந்தப் படத்தில், இந்துக்களின் உணர்வுகளைக் கொச்சைப் படுத்தி பாடல் காட்சிகள் வரிகள் உள்ளதாகவும், அவற்றை நீக்காமல் படத்தை வெளியிடக் கூடாது என்றும், தேச ஒற்றுமைக்குக் குந்தகம் ஏற்படுத்தும் கமல் ஹாசனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் இந்து அமைப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். விஸ்வரூபம் படத்தை அடுத்து கமல்ஹாசன் நடித்து வெளிவர உள்ள உத்தம வில்லன் படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தை நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். மே 1 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படம் குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. உத்தம வில்லனில் இடம்பெறும் வில்லுப்பாட்டு பாடல் காட்சியில் பாடல் வரிகளில் இந்து கடவுளை விமர்சித்து இருப்பதாகவும், அந்த சர்ச்சைக்க்குரிய காட்சியை நீக்காமல் படத்தை வெளியிடக் கூடாது என்றும் கூறி ஹிந்து அமைப்பினர் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் இந்திய தேசிய லீக் கட்சியும் இப்போது களத்தில் குதித்துள்ளது. இன்று சென்னை பெரு நகர காவல் ஆணையரைச் சந்தித்த அக்கட்சியின் பொறுப்பாளர் நாசர் ஒரு புகார் மனுவைத் தந்துள்ளார். அதில், நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து மதங்களை இழிவுபடுத்தி வருகிறார். முன்பு விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தினார். இப்போது உத்தம வில்லன் படத்தில் இந்துக்களின் உணர்வுகளைக் காயப் படுத்தியுள்ளார். ஒரு நடிகராக அவர் தன் வேலையைப் பார்க்காமல், தொடர்ந்து மதங்களையும் அவற்றை மதிக்கும் மக்களையும் காயப்படுத்தி வருகிறார். எனவே சமூக அமைதி, நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் கமல் ஹாசனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அப்ரைஸல் என்ற அளவுகோல் எதற்கு? உண்மையின் பின்னே உறையும் சோகம்!
இந்திய உற்பத்தி நிறுவனங்களில் ஏதாவது ஒன்றில் அக்கவுன்ட்ஸ் அல்லது அலுவலகப் பணிகளில் கொஞ்சம் நல்ல பெயரோடு வேலை செய்தாலே போதும்… வருஷாவருஷம் குறைந்தது பத்து சதமாவது இன்க்ரீமென்ட் என்று வந்துவிடும். தீபாவளிக்கு போனஸ் வந்துவிடும். அது ஒரு கடமையாகவே கருதப்படும். நான் வேலை பார்த்த ஒரு ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் 2008ம் வருடத்தில் பொருளாதார பஞ்சம் வந்தபோது கம்பெனி ரூ. 100 கோடி அளவுக்கு நஷ்டமானது. ஆனாலும் தொழிலாளர்களுக்கு 10% சம்பள உயர்வு கொடுக்கப்பட்டது. அதற்கு முதலாளி சொன்ன காரணம் தொழிலாளர்கள் தான் எனது “ப்ரெட் அண்ட் பட்டர்”. சம்பள உயர்வு கொடுத்தே ஆக வேண்டும் என்பது. ஆனால் பிபிஓ., ஐடி நிறுவனங்களில் இந்த ‘ப்ரெட் அன்டு பட்டர்’ சமாச்சாரம் எல்லாம் கிடையாது. தொழிலாளர்கள் மீது முதலாளிக்கு “எனக்காக உழைப்பவர்கள்” என்கிற குறைந்தளவு சென்ட்டிமெண்ட் என்பதும் கிடையாது. காரணம் தொழிலாளர்கள் என்பவர்கள் யார் ? அவர்கள் வாழ்க்கைச்சூழல் என்ன என்பதெல்லாம் மேலை நாட்டில் வாழ்ந்து கொண்டு நம் நாட்டவர்களுக்கு உத்தரவு மட்டுமே போட்டு வேலை வாங்குபவர்களுக்கு தெரியாது. அவர்களுக்கு ‘எண்’ கணக்கு மட்டும் தான் வேண்டும். தொழிளாலர்களின் வாழ்க்கை கணக்கு பற்றி அக்கறை கிடையாது. கறிவேப்பிலை போல வேண்டுமென்றால் சேர்த்துக் கொள்ளவும் வேண்டாமென்றால் தூக்கி எறியவும் தயங்குவதில்லை. அப்ரெய்சல் என்றால் என்ன? ஒருவனை தர மதிப்பீடு செய்வது. எப்படி செய்கிறார்கள்? ‘ஒழுங்கா ஆபீஸ் வர்ரானா? டிசிப்ளீனா இருக்கானா? பொறுப்பா வேலை செய்றானா? இங்க்லீஷ் நல்லா பேசி கஸ்டமரை கவர்கிறானா? முக்கியமாக மேனேஜர் சொல்வதை ஏன் எதற்கு என்று கேட்காமல் ராப் பகலானாலும் நேரம் காலம் பார்க்காமல்…. முடியாது என்று எதையுமே சொல்லாமல் வேலை செய்கிறானா?’ இப்படி பல இத்யாதிகள். இவற்றையெல்லாம் வைத்து ஒரு ஆளுக்கான மதிப்பீட்டை அந்த மேனேஜர் நிர்ணயிக்க வேண்டும். அவர் நிர்ணயிக்கும் மதிப்பீட்டை வைத்து தான் ஒருவனது எதிர்காலமே அடங்கும். அந்த நபரிடம் என்றைக்காவது முறைத்துப் பேசி ஒரு நாள் ஒரு நேரம் மட்டுமாவது சண்டை போட்டுவிட்டால் தொலைந்தது சங்கதி. அப்புறம் நம் எல்லா மதிப்பிட்டு ரேட்டிங்கும் அவன் கையில். “ஏன் எனக்கு இந்த வருஷம் சம்பளம் ஒசத்தலை?” என்று கேட்டால் போதும், “ஆங் உனக்கு சரியா ரேட்டிங் வர்லை.. நீ லேட்டா வர்ர.., நீ கோ அப்பரேட்டிவ்வா இல்லை… நீ ஆபீஸ் டீசன்ஸி மெயின்டெயின் பன்றதில்லை,… சொன்னதை கேட்டு வேலை செய்யாததால பொரொடக்டிவிடி அடிவாங்குது’ என்று தனக்கு தோன்றுதெல்லாம் சொல்லி கேட்டவர் வயிற்றில் அடிப்பார்கள். இதே ஒரு மேனஜருக்கு சொம்படித்து கைக்கூலியாக இருப்பவனாக இருந்தால் அவன் செய்யும் வேலையிலேயே என்ன குறை இருந்தாலும் பரவாயில்லை, அவனது நிறைகள் தான் மேனேஜர் அல்லது டீம் லீடர் கண்களுக்கு தெரியும். இப்படி தனி மனிதர்களின் சொந்த விருப்பு வெறுப்புக்களுக்கு உட்பட்டே பலரது சம்பாளமும் அது சார்ந்த அவரது சொந்த வாழ்வும் இருக்கிறது. நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு கட்டாயம் இன்னென்ன காரியங்கள் செய்தாக வேண்டும் என்கிற வரை முறை பிபிஓ ஐடி நிறுவனங்களுக்கு இல்லை அல்லது அவ்வாறு இருக்கும் சட்டங்களில் இருந்து பல நிறுவனங்கள் பல்வேறு ஓட்டைகள் வழியாக விலக்கு பெற்று விடுவதால் பிபீஓ ஐடி தொழிலாளர்களின் வாழ்வும் எதிர்காலமும் கேள்விக்குரியதாகவே இருக்கின்றது. தொடர்ந்து சில வருஷங்களுக்கு சம்பள உயர்வை வேண்டுமென்றே கொடுக்காமல் இருந்தால் அவர்களாகவே போய்விடுவார்கள் என்கிற கணக்கில் சிலருக்கு குறிவைத்து குடுக்க மாட்டார்கள். அப்படியும் வெக்கம் சூடு சொரனை இல்லாமல் இருப்பதையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டுமே என்று பேசாமல் இருந்து விட்டால் இன்னும் மோசம். அவன் தான் கேக்கலையே எதுக்கு குடுக்கனும் என்பார்கள். மேற்கொண்டு சிலருக்கும் மட்டும் கொடுக்கலாம் என்று இவர்கள் தேர்வு செய்யும் ஆட்கள் யாராக இருக்கும் என்றால், அந்த மேனேஜருக்கும் டீம் லீடருக்கும் தினசரி சொம்படிக்கும் மிக நல்லவர்களுக்காக மட்டும் தான் இருக்கும். பெர்பாமன்ஸ் அப்ரைசல் என்பதே பிடித்தவனுக்கு குடு பிடிகாதவனை துறத்து என்கிற ஓரவஞ்சனை திட்டம் தானே ஒழிய உண்மையிலேயே திறமை உள்ளவனுக்கு எதுவும் கிடைக்குமா என்பது சம்பந்த பட்ட இட ஆட்களை பொறுத்து மட்டுமே! ஒரு மனிதன் எட்டு மணிநேரம் செய்ய முடிகிற வேலை என்பதற்கு மாறாக மூன்று மடங்காக வேலை வாங்கி பலகோடி ரூபாய்களுக்கான உழைப்பு சுரண்டலை செய்துவிட்டு ஆனால் பெர்பார்மன்ஸ் இல்லை உனக்கு கிடையாது, உனக்ககு ஆயிரம் குடுத்தால் அதிகம் என்று சொல்லுவதெல்லாம் மிகப்பெரிய அயோக்கியத்தனம். ஆனால் அதைதான் பிபிஓ ஐடி நிறுவனங்கள் செய்கின்றன. ஒரு பிபிஓ நிறுவனத்தில் ஆவரேஜ் பணியாளர் என்று ஒருவரை சொல்வதே ஒரு நாளைக்கு சராசரியாக ஒருவர் செய்ய முடிகிற வேலையில் இருந்து மூன்று மடங்கு வேலையை திணித்து அதை எவ்வளவு வேகமாக அவரை வைத்து செய்து வாங்க முடியுமோ அப்படி வேலை செய்ய வைத்தால். அதை மூச்சு முட்ட சமாளித்து செய்யும் ஒருவர்தான் ஆவரேஜ் தொழிலாளி. அந் நபரே ஓரிரு வருஷங்கள் மாடு மாதிரி உழைத்துவிட்டு ‘அய்யோ ரொம்ப குத்தாதீங்க இதுக்கு மேல முடியலை’ என்று விழிபிதுங்கி நின்றால் அவன் பிலோ ஆவரேஜ் அல்லது ‘Non-Performer’. அவனை மேற்கொண்டு கம்பெனியில் வைக்கலாமா வேண்டாமா என்கிற டிஷ்கஷன் ஓடும். பின் தொடர்ந்து அப்ரைசல் என்கிற அயோக்கியத்தனம் மூலமாக அவன் புறக்கனிக்கப்படுவான். ஒன்றும் தரப்பட மாட்டாது. ‘நீ சரி இல்லை. உன்னால் கம்பெனிக்கு ஒன்றும் லாபமில்லை , வேறு வேலை தேடுவது உனக்கு நல்லது என்று நேரடியாக சொல்லிவிடுவார்கள். ஆக அத்தகைய அதீத உடல் உழைப்பால் கண் பார்வை கெட்டுப்போய், தலை முடி கொட்டிப்போய், ராத்தூக்கம் போய், ஷுகர், பிரஷர் ,ஹார்ட் ப்ராப்ளம் என எல்லா வியாதியையும் வாங்கிகொண்டு ஒரு ‘நான் – பெர்ஃபார்மர்’ என்ற கெட்ட பெயருடன் வெளியேறுவதை தவிர அந்த அடிமாட்டு தொழிலாளிக்கு வேறு கதி கிடையாது. ஏற்கனவே அடிமாடான இவனுக்கு வெளியே வேலையும் செய்ய தெரியாது. எதிர்காலம் கேள்விக்குறிதான்??? ஒருமனிதன் ஒரு நாளில் சராசரியாக இவ்வளவு நேரம் மற்றும் இவ்வளவு வேலை தான் செய்ய முடியும் என்கிற அளவு கருதியே எட்டு மணி நேரம் என பணி நேரம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இன்றை பிபிஓ ஐடி நிறுவங்களில் குறைந்த பட்சம் 10 மணிநேர வேலையாக அது மாறிவிட்டது. சிலருக்கு அதுவும் 24*7 என்ற ரீதியில் எந்நேரம் பார்த்தாலும் லேப்டாப்பும் கையுமாக ஏதாவது ஒரு கஸ்டமருக்கு வெளிநாட்டில் இருப்பவருக்கு பதில் சொல்லிக் கொன்டிருப்பார்கள். இந்த அதீத பணிச்சுமைக்கெல்லாம் தனியாக எந்த பலனும், தொகையும் பெரும்பாலான நிறுவங்கள் கொடுப்பதில்லை என்பது ஒரு பரிதாபம். இந்திய தொழிலாளர் சட்டத்தின் எந்த விதிகளுக்குள் இவர்கள் உட்பட்டு செயல்படுகிறார்கள் என்பதும் புரியாது. வருஷம் முழுவதும் உழைத்து லாபம் ஈட்டிக் கொடுக்கும் தொழிலாளர்களுக்கு அதில் கொஞ்சத்தை பிரித்து கொடுப்பதாகவே போனஸ் என்கிற விதி நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அதிலேயும் பெர்பார்மன்ஸ் போனஸ் தான் என்று சொல்லி ஏமாற்றி விடுவார்கள். கேட்டால் யாருக்கும் பெர்பார்மன்ஸ் இல்லை. எல்லாரும் தெண்டம் என்று ஒரே வார்த்தையும் சொல்லி வருஷம் முழுவதற்குமான உழைப்பை ஒரே சொல்லில் சுரண்டி விடுவார்கள். ஒன்றுமில்லாமல் சம்பளத்துக்கு வேலை செய், இல்லையேல் போய்விடு என்ற நிலைமைக்கு தள்ளி விடுவார்கள். உள்நாட்டு உற்பத்திக்கும் உதவாமல் வெளி நாட்டுக்காரனுக்கு வேலை செய்ததால் சொந்த வாழ்க்கைக்கும் பெரிய பயனும் இல்லாமல் ஏதோ கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாக இன்றைய ஐடி பிபிஓ நிறுவன தொழிலாளர்கள் நிலை ஆகிவிட்டது. ஒரு காலத்தில் சராசரி இந்திய நிறுவன தொழிலாளர்களின் சம்பளத்திற்கு மூன்று மடங்கு சம்பளமாக இருந்தது ஒரு பிபிஓ நிறுவனத்திற்கு புதிதாக சேருபவரின் சம்பளம். ஆனால் இன்றைக்கு இன்ஜினியரிங் படித்து வந்தாலும் ஒன்பது முதல் பன்னிரண்டாயிரம் தருவோம் என்பார்கள். எக்ஸ்போர்ட்டு கம்பெனி டெய்லர் அதைவிட அதிகம் சம்பாதிப்பான். ஐடியில் கொஞ்சம் கூடுதல் கிடைக்கும், இருந்தாலும் நம்பகத்தன்மை இருக்காத நிலைமையே! இப்படி நாளுக்கு நாள் ஐடி பிபிஓ துறைகளில் பணிப்பாதுகாப்பு கேள்விக்குறி ஆவதும், சம்பள உயர்வோ பிற வாழ்வியல் பலன்களோ எதுவுமே இல்லாத நிலைமைக்கு இறங்கிக் கொண்டிருக்கும் போது இந்நிறுவனங்களை ஏன் இந்திய தொழிலாளர் சட்டங்களுக்கு முழுமையாக உட்படுத்தக்கூடாது. குறைந்த பட்ச ஊதியம், போனஸ், வருஷமொரு முறை சம்பள உயர்வு என்பதை எல்லாம் கட்டாயமாக ஏன் வரையறை செய்ய கூடாது? ரத்தம் உறிஞ்சும் அட்டைகளைப்போல இளம் தொழிலாளர்களை சராசரிக்கும் பல மடங்குக்கு மேல் பிழிந்து வேலை வாங்கி விட்டு பிறகு நடுத்தர வயதை அவர்கள் தாண்டும் போது தூக்கி எறிந்து விட காய் நகர்த்தும் இந்த அவுட் சோர்ஸிங்க் துறைக்கு தொழிலாளர் நலன் சார்ந்த கட்டாய சட்டங்கள் சிலவற்றை ஏன் பிறப்பிக்கக் கூடாது? தொழிலாளர் நலன் மீது எந்த விதமான கவனத்தையும் செலுத்தாமல் மேக் இன் இன்டியா என்று சொல்லி இன்னும் அந்நிய முதலாளிகளுக்கு சிகப்புகம்பளம் விரித்து இன்னும் எத்தனை இளைஞர்களை அடிமைகளாக அந்நிய நாட்டிற்கு அடகு வைக்கப்போகிறோம்? இளைஞர்களே சிந்திப்பீர்!
ஆந்திர படுகொலை: பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து அன்புமணி ஆறுதல்
சென்னை: ஆந்திர போலீஸாரால் தமிழக தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து பாமகவின் சார்பில் ஆறுதல் கூறினார் அன்புமணி ராமதாஸ். திருவண்ணாமலை மாவட்டம் படைவீடு கிராமத்தில் ஆந்திர காவல் துறையால் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரை அன்புமணி இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 20 தமிழர்களின் வாரிசுகளின் கல்விச் செலவை பாமக ஏற்கும் எனவும், உயர்கல்வி வரை படிக்கும் செலவை ஏற்பதாகவும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வாக்குறுதி அளித்தார்
லக்வி விடுதலையாக இந்தியா காரணமாம்: சொல்வது பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதல் வழக்கு முக்கியக் குற்றவாளி லக்வி, பாகிஸ்தானில் ராவல்பிண்டி அடியாலா சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டதற்கு இந்தியாவே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளது பாகிஸ்தான். மும்பை தாக்குதல் வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட லக்வி, பொது ஒழுங்கு பராமரிப்புச் சட்டப்பிரிவு 16-ன் கீழ் சிறையில் அடைக்கப் பட்டார். தம்மை சிறையில் அடைத்ததை ரத்து செய்ய அவர் கோரிய மனுவின் படி, அவரை லாகூர் நீதிமன்றம் 9-ந் தேதி விடுவித்து உத்தரவிட்டது. இதையடுத்து மறுநாளில், அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். பாகிஸ்தான் அரசு, லக்விக்கு எதிரான ஆவணங்களை சரிவர தாக்கல் செய்யாததே அவரது விடுதலைக்குக் காரணம் என இந்தியா குற்றம் சாட்டியது. இது தொடர்பாக இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் அய்ஜாஸ் சௌத்ரியை இந்திய தூதர் டி.சி.ஏ. ராகவன் சந்தித்து, இந்தியாவின் எதிர்ப்பை பதிவு செய்தார். இதனிடையே லக்வி விடுதலைக்கு இந்தியாவின் மெத்தனம்தான் காரணம் என்று இந்தியா மீது பாகிஸ்தான் பழி சுமத்தியுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மிகவும் சிக்கலான இந்த வழக்கில் ஒத்துழைப்பு வழங்குவதில் புது தில்லி காட்டி வந்த மிதமிஞ்சிய காலதாமதம்தான் லக்வி மீதான வழக்கை பலவீனப்படுத்தி விட்டது என்று கூறப்பட்டுள்ளது.
கத்திமுனையில் பெண் கற்பழிப்பு: தில்லி கால்டாக்ஸி டிரைவர் கைது
புது தில்லி: உபேர் கால் டாக்ஸியில் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 4 மாதங்கள் ஆன நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் அதே போல் தில்லியில் அரங்கேறியிருக்கிறது. வியாழக்கிழமை இரவு தில்லி மெட்ரோ நிலையத்துக்கு கட்டணத்தைப் பகிர்ந்து கொண்டு ஷேர் டாக்ஸியில் சென்ற பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். டாக்ஸி டிரைவர் பின்னர் கைது செய்யப்பட்டார். மேற்கு தில்லி பகுதியில் உள்ள ரஜௌரி கார்டனில் உள்ள ஒரு மாலில் வேலை செய்யும் தில்லி துவாரஹா – மதுவிஹார் பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண் இரவு 9.30 மணியளவில் அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வாடகைக் காரில் ஏறியுள்ளார். DL 1 T 7516 என்ற எண்ணுள்ள அந்த மாருதி ஈக்கோ காரில் வேறு சில பயணிகளும் இருந்துள்ளனர். திடீரென்று ஓட்டுநர் காரை மெதுவாக ஓட்டியுள்ளார். அப்போது பயணிகள் ஏன் என்று கேட்டதற்கு காரின் சிஎன்ஜி கேஸ் எரிபொருள் தீர்ந்துவிட்டது என்று கூறியுள்ளார். உடனே மற்ற பயணிகள் இறங்கிச் சென்றுள்ளனர். அதன் பிறகு காரில் பக்கத்து இருக்கைக்கு மெதுவாகத் தாவி, கதவைத் திறப்பது போல் முயன்று, சிஎன்ஜி செக் செய்வதாகச் சொல்லி, அந்தப் பெண்ணின் மீது தாவி ஏறியுள்ளார். ஏதோ விபரீதமாக நடக்கப் போவதை அறிந்து அந்தப் பெண் கூச்சலிட்டுள்ளார். ஆனால், தொடர்ந்து அந்தப் பெண்ணை கார் ஓட்டுநர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அந்தப் பெண் மறுத்ததால் பெண்ணின் முகத்தில் கத்தியால் குத்தி ஆடைகளைக் கிழித்து, கைபேசியையும் பறித்து கீழே வீசியுள்ளார். தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். காரில் பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டு அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் போலீஸூக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து குறிப்பிட்ட காரை ரோந்துப் படை போலீஸார் துரத்திச் சென்று பிடித்தனர். உடனே காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிய அந்த ஓட்டுநரை போலீஸார் துரத்திச் சென்று பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் குறித்து விசாரித்ததில் அவரது பெயர் ரமேஷ் குமார் (40) என்றும் இவர் நாங்கல்லி சகரவதி பகுதியில் மனைவி 3 குழந்தைகளுடன் வசித்து வருவதாகவும் கூறியுள்ளார். இவர் 8 ஆண்டுகளாக கார் ஓட்டி வருகிறார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக தெற்கு துவாரகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தப் பெண்ணுக்கு ஒரு குழந்தை உள்ளது. முன்பு உபேர் மூலம் நடந்த தவறு, இப்போது காலி-பீலி கறுப்பு – மஞ்சள் டாக்ஸி டிரைவர் மூலம் நடந்துள்ளது. இவர் கால் டாக்ஸி விதிகளை மீறி, வெவ்வேறு நபர்களை ஒரே காரில் ஏற்றிச் சென்றுள்ளது தெரியவந்தது.

